Ad

புதன், 1 செப்டம்பர், 2021

வேலூர்: உடல் முழுக்க சூடு; அலறித் துடித்த சிறுவர்கள்! - கொடுமைக்கார சித்தி சிறையிலடைப்பு!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் செதுக்கரை ஜீவா நகரைச் சேர்ந்தவர் சேட்டு. வயது 35. பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. இவரின் மனைவி ஈஸ்வரி. 2009-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிக்கு 10 வயதில் சித்தார்த், 8 வயதில் நித்திஷ் என்று இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கணவனுடன் ஏற்பட்ட தகராறில் இரண்டு பிள்ளைகளையும் தவிக்கவிட்டு ஈஸ்வரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாராம். மனைவி இறந்த பிறகு அதே பகுதியில் கணவரைப் பிரிந்து வாழ்ந்துவந்த வேணி என்ற 30 வயது பெண்ணுடன் சேட்டுக்குத் தொடர்பு ஏற்பட்டது.

சிறுவர்களின் உடம்பில் ஏற்பட்டுள்ள காயங்கள்

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்ததால் நெருக்கமாகியிருக்கிறார்கள். வேணியை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்ட சேட்டு, தற்சமயம் குடியாத்தம் பிச்சனூர் லால்பகதூர் சாஸ்திரி தெருவில் தனது இரண்டு பிள்ளைகளுடன் வசித்துவந்தார். இந்தநிலையில், சேட்டுவின் முதல் மனைவிப் பிள்ளைகள் இருவர்மீதும் வெறுப்பைக் காட்டியிருக்கிறார் வேணி. பெற்றப் பிள்ளைகளைப்போல் பார்க்க வேண்டிய சித்தார்த், நித்திஷ் இருவருக்கும் முதுகு, கை, கால், தனிப்பட்ட பகுதி என உடல் முழுவதும் சூடு வைத்து சித்ரவதைச் செய்துள்ளார் சித்தி வேணி.

சூடு வைத்த இடங்கள் புண்ணாகி கொப்பளித்துள்ளதால் சிறுவர்கள் அவதிப்பட்டுள்ளனர். இதுபற்றி வெளியே சொன்னால் கொன்று புதைத்துவிடுவதாகவும் சிறுவர்களை மிரட்டியிருக்கிறார் வேணி. இந்தநிலையில், செதுக்கரைப் பகுதியிலுள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று தப்பி வந்த சிறுவன் நித்திஷ் தனது உடம்பில் சித்தி சூடு வைத்ததைக் காண்பித்துள்ளார். உடம்பில் ஏற்பட்டுள்ள காயங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனடியாக குடியாத்தம் நகர காவல் நிலையத்துக்குச் சென்று புகாரளித்தனர்.

கைது செய்யப்பட்ட சித்தி வேணி

இதையடுத்து, வேணியின் வீட்டுக்கு விரைந்துச் சென்ற போலீஸார் அவரையும், மற்றொரு சிறுவன் சித்தார்த்தையும் காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சித்தார்த்தின் உடம்பிலும் சூடு வைத்த காயங்களைப் பார்த்து போலீஸாரே அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில், சிறுவர்கள் இருவரையும் வேணி சித்ரவதை செய்து கொடுமைப்படுத்திவந்ததும் உறுதியானது. இதையடுத்து, சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள், கொலை மிரட்டல் உட்பட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் வேணியை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் சிகிச்சை அளித்தனர்.

காலையில் வேலைக்குச் சென்றுவிடும் தந்தை சேட்டு இரவில்தான் வீடு திரும்புவாராம். இதனால், பிள்ளைகளுக்கு நேர்ந்த கொடுமை அவருக்குத் தெரியாது என்று சொல்கிறார். அவர் கூறுவது நம்பும்படியாக இல்லை என்கிறார்கள் உறவினர்கள். ஆனாலும், சேட்டுவை வழக்கிலிருந்து விடுவித்திருக்கிறது போலீஸ்.



source https://www.vikatan.com/social-affairs/crime/children-tortured-by-fathers-second-wife-caught-arrested-in-vellore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக