Ad

புதன், 1 செப்டம்பர், 2021

டேல் ஸ்டெய்ன்|டெஸ்ட் கிரிக்கெட்டின் அரக்கன், ஒருநாளின் அசுரன், டி20-களில் மன்னன்!

அவருக்கு டியூக் பந்துகள் தேவையில்லை... 'வானிலை மாறுதே!' என கை கொடுக்கும் தட்பவெப்ப சூழல்கள் தேவையில்லை... நாட்டிங்காமில் மட்டுமல்ல, நாக்பூரிலும்கூட தனது ஸ்விங் பௌலிங்கால் கோலோச்சுவார்.

டார்க் வெப் சீரிஸில், ஒயிட் டெவில் என்ற ஒரு கதாபாத்திரம் உலவும். அது, முக்காலத்துக்கும் பயணிக்கும். இணை உலகத்திற்குள்ளே எட்டிப் பார்க்கும் திறன் அதனிடம் உண்டு. கிரிக்கெட்டிலும், அப்படி ஒரு டெவில் உண்டு; இரண்டு தசமங்களையும், மூன்று ஃபார்மட்களையும் கட்டி ஆண்ட, டெவில், டேல் ஸ்டெய்ன்தான் அது.

பந்துகளுக்கென தனியாக மந்திர சக்தி எதுவும் இல்லை. அது ஏந்தும் கைகள் தரும் வேகம், துல்லியத்தன்மை, ஸ்விங், பவுன்ஸ் என ஏதோ ஒன்றுக்கு மேற்பட்ட கூறுகளின் கூட்டுத் தொகையால் மாயம் நிகழ்த்துகிறது. அப்படி ஒரு மேஜிக் பந்தை, தசாப்தங்களுக்கான பந்தை, வாசிம் அக்ரம் போன்ற ஜாம்பவான்கள் வீசி இருக்கிறார்கள்தான்.

ஆனால், அத்தகைய ஒரு பந்தை அறிமுகப் போட்டியிலேயே வீசி ஆச்சர்யப்படுத்தியவர் டேல் ஸ்டெய்ன். அடுத்த சில ஆண்டுகள் பேட்ஸ்மேன்களின் தூக்கத்தை தொலைக்கச் செய்யப் போகும் பந்துகளை, இந்த ஸ்டெய்ன் கன் வீசப் போகிறது என்பதற்கான தீர்க்கதரிசனம் அந்த முதல் பந்திலேயே எல்லோருக்கும் கிடைத்தது. இங்கிலாந்துக்கு எதிரான அப்போட்டியில், அவரது அவுட் ஸ்விங், மிடில் ஸ்டம்புக்கு முன்னதாகத் தரையிறங்கி, மைக்கேல் வாஹனின், ஃபுட் வொர்க்குக்கு இடமும், காலமும் தராமல், ஆஃப் ஸ்டம்பைப் பதம் பார்த்தது. அன்றிலிருந்து தொடங்கியது, இந்த வேகநாயகனின் வேக வேதம்.

டேல் ஸ்டெய்ன்
மூங்கில்களைப் பற்றிய ஒரு கதையை ராகுல் டிராவிட், ஒரு முறை சொல்லியிருந்தார். மூங்கில்கள் வேர்பிடித்து வளர மாதங்கள் ஆகும். ஆனால், ஒரு கட்டத்துக்குப்பின், அதன் வேகம், நாள் ஒன்றுக்கு சில அடிகள் என ஆச்சரியமூட்டுவதாக இருக்கும். அதே போலத்தான், ஸ்டெய்னின் வளர்ச்சியும், தொடக்கத்தில் நிதானமாக, பின் அபரிதமாக, பின்னொரு கட்டத்தில் அசுரத்தனமாகவும் மாறியது.

டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் 2005-ம் ஆண்டு, 74-வது இடத்தில் இருந்த அவர், முதலிடத்துக்கு முட்டி முன்னேற, ஐந்து ஆண்டுகள் பிடித்தன. ஆனால், 2010-ல் இருந்து, 2015-ம் ஆண்டு வரை, தொடர்ந்து, 263 வாரங்கள், முதலிடத்தில் முகாமிட்டு விட்டார் ஸ்டெய்ன். அதற்கு முன்னதாக மட்டுமல்ல, இதற்குப் பின்னதாகக் கூட எந்த பௌலராலும் குறைந்தபட்சம், எந்த வேகப் பந்து வீச்சாளராலும்கூட முறியடிக்க முடியாத சாதனை இது. நீண்ட காலத்துக்கு அவர் முதலிடத்தில் தாக்குப் பிடித்ததற்கும், எதிரணி வீரர்கள், தாக்குப் பிடிக்க முடியாமல் தகர்ந்து போனதற்கும் பல காரணங்கள் உண்டு.

ரசிகனின் கண்களின் வழியாக அவரை உற்று நோக்கினால், ரன் அப்பில் தொடங்கும் அவரின் மீதான ஈர்ப்பு. அவரது பௌலிங் ஆக்ஷனை ஆராதிக்கச் செய்து, அதையே தங்களை பயிற்சிக்கச் செய்து, விக்கெட் விழுந்த உடன், நரம்புகள் புடைக்க, அவரது அனிமேட்டட் ஆக்ரோஷத்தை, ஆர்ப்பரிப்பை, கொண்டாடச் செய்யும்.

ஆனால், ஸ்ட்ரைக்கர் எண்டில் நிற்கும் பேட்ஸ்மேனுக்கோ, அந்தக் கூர்மையான, வாள் வீசும் பார்வையும், ரன் அப்பில் இருந்து, தாக்கி வீழ்த்த வரும் அம்பாக முன்னேறும் அந்த அதிவேகமும், 'ஏவுகணைக்கு இலக்கே நாம்தானோ?!' என கிலியேற்படுத்தி, சப்த நாடியையும் ஒடுங்கச் செய்யும். ஷேடோ பேட்டிங் செய்யும் போது கூட, ஸ்டெய்ன் பற்றிய நினைப்பு, அவர்களது நிழலையும் வேர்க்க வைக்கும். அப்படிப்பட்ட பயத்தை, பேட்ஸ்மேன்களின் மனதில் விதைத்ததுதான் அவரது வாழ்நாள் சாதனை.

ஒரு வேகப்பந்து வீச்சாளரிடம், என்னென்ன தனிப்பட்ட சிறப்பம்சங்கள் இருக்கும்? அதிவேகம், அச்சுறுத்தும் ஆக்ரோஷம், கழுகின் பார்வைக்கு இணையான துல்லியம், இன் ஸ்விங், அவுட் ஸ்விங் என இன்ன பிற ஆயுதங்கள், பழைய பந்தையும் ஸ்விங் செய்யச் செய்யும் கண்கட்டி வித்தையான ரிவர்ஸ் ஸ்விங், பவுன்சர்கள், பிளாக் ஹோலை குறிபார்த்து, பேட்ஸ்மேனைத் தடுமாறச் செய்யும், இன்ஸ்விங் யார்க்கர்கள், லைன் அண்ட் லென்த்தை வெவ்வேறு நிகழ்தகவுகளில் மாற்றி, பந்தின் வேகத்தை, கூட்டி, குறைத்து, பேட்ஸ்மேனுக்கு வலை விரிக்கும் தந்திரம்... இவை எல்லாம்தானே?! இந்தத் தோட்டாக்கள் அத்தனையுமே நிரப்பப்பட்ட, இயந்திரத் துப்பாக்கிதான் ஸ்டெய்ன்.

டேல் ஸ்டெய்ன்

பொதுவாக ஃபிளாட் பிட்சுகளிலும், ஸ்பின்னுக்கு மட்டுமே ஆதரவு தரும், இந்தியத் துணைக்கண்ட சூழ்நிலைகளிலும், வேகப் பந்து வீச்சாளர்களால், ஸ்பின்னர்களை மீறி, சாதிக்க முடியாது. ஆனால், சகல களத்திலும் நாயகனான ஸ்டெய்னுக்கு, களமும் கைகொடுக்கும். ஸ்விங் செய்ய அவருக்கு, டியூக் பந்துகள் தேவையில்லை, 'வானிலை மாறுதே!' என கை கொடுக்கும் தட்பவெப்ப சூழல்கள் தேவையில்லை, எஸ்ஜி பந்துகளே போதுமானது. நாட்டிங்காமில் மட்டுமல்ல, நாக்பூரில் கூட, தனது ஸ்விங் பௌலிங்கால் கோலோச்சுவார் ஸ்டெய்ன்.

அவரது டெஸ்ட் கரியரின் சிறந்த பௌலிங் ஸ்பெல்லான, அந்த 7/51-ஐ ஸ்டெய்னின் பரம விசிறிகள் மட்டுமல்ல, இந்தியக் கிரிக்கெட் ரசிகர்களால் கூட மறக்க முடியாது. முதல் இன்னிங்சில், சச்சின் உள்ளிட்ட ஏழு விக்கெட்டுகளை, வெறித்தனமாக வெட்டி வீழ்த்தி இருந்தார் ஸ்டெய்ன். அதிலும், அந்த ஏழில் ஐந்து, எல்பிடபிள்யூவாகவோ, க்ளீன் போல்டாகவோ வந்திருந்ததுதான், அவரது கணிக்க முடியாத வேகத்திற்கான சான்றுகள். அதுவும், ஆஃப் ஸ்டம்ப்பையோ, டாப் ஆஃப் த ஆஃப் ஸ்டம்பையோ அந்தப் பந்துகளை கொண்டு தாக்கி, ஸ்டெய்ன் கழன்று விழச் செய்வதும், அதைத் தொடர்ந்த அவரது வெறித்தனமான கொண்டாட்டமும் எல்லா நாட்டு ரசிகர்களையும் ஸ்டெய்ன் ஆர்மியில் சேர்த்துவிட்டது. இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்சிலும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, தென் ஆப்பிரிக்காவின் வெற்றியை, இன்னிங்ஸ் வெற்றி ஆக்கினார் ஸ்டெய்ன்.

டேல் ஸ்டெய்ன்
துணிந்த வேகப்பந்து வீச்சாளருக்கு துணைக் கண்டமும் துணை நிற்கும் என்பதற்கு ஸ்டெய்னே உதாரணம்.

2013-ம் ஆண்டு, பாகிஸ்தானை பதற வைத்துப்பந்தாடி இருந்தார் ஸ்டெய்ன். ஜோஹானஸ்பர்கில் நடைபெற்ற முதல் டெஸ்ட் அது. 253 ரன்களை தென் ஆப்ரிக்கா எடுத்திருக்க, பாகிஸ்தான் நம்பிக்கையோடு களமிறங்கியது... 49 ரன்களுக்கு ஆல் அவுட் ஆவதற்கெனவே. உபயம் ஸ்டெய்ன் ஸ்விங்குகளில் சரிந்த ஆறு விக்கெட்டுகள். இரண்டாவது இன்னிங்சிலும் அவரது விக்கெட் வெறி அடங்கவில்லை. ஐந்து விக்கெட்டுகளை அவர் வீழ்த்த, 211 ரன்கள் வித்தியாசத்தில், தென் ஆப்பிரிக்கா அபார வெற்றியைப் பதிவேற்றியது.

வலிமை பொருந்தியவையாகவும், டெஸ்ட்டில் தங்களை சாலச் சிறந்தவர்களாகவும் நிரூபணம் செய்திருந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் இதே கதிதான் ஸ்டெய்னால் நேர்ந்தது. 2000-ம்களில் ஆஸ்திரேலியர்களை அவர்களது மண்ணிலேயே வீழ்த்திக் காட்டுவது ஒரு பெரும்போரில் வெற்றிபெறுவது போன்றது. அப்படி ஒரு வெற்றியை, 2008-ல் மெல்போர்னில் வைத்து, தென்னாப்பிரிக்கா நிகழ்த்திக் காட்டியது. அம்முறை பந்தால் மட்டுமல்ல, தனது வில்லோவினாலும், விளையாட்டுக் காட்டி இருந்தார் ஸ்டெய்ன். முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்சில், தலா ஐந்து விக்கெட்டுகளை எடுத்தது மட்டுமன்றி, இரண்டாவது இன்னிங்சில் 76 ரன்களையும் சேர்த்து, ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் விக்கிக்க வைக்கும் ஒரு தோல்வியை, ஆஸ்திரேலியாவுக்கு வலியாய் தந்தார்.

ஆலன் டொனால்டை, தனது ஆஸ்தான நாயகராக ஸ்டெய்ன் அடையாளம் காட்டியிருந்தாலும், ஒரு கட்டத்தில், அவரையும் தாண்டி, நிறையவே சாதித்து விட்டார் ஸ்டெய்ன். தென் ஆப்பிரிக்காவின் சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்பதுவே மலைக்க வைப்பதுதான். அதையும், தாண்டி, டெஸ்டில், குறைந்தபட்சம் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப் பந்து வீச்சாளர்களை பட்டியலிட்டால், அவர்களுள் சிறந்த பௌலர் ஸ்ட்ரைக் ரேட்டை (42.30) ஸ்டெய்னே வைத்துள்ளார். வக்கார் யூனிஸ், மார்ஷல், ஆலன் டொனால்ட் உள்ளிட்ட ஆல்டைம் லெஜண்டுகளுக்கும் முன்பாக, அவரது பெயரைச் சேர்த்திருக்கிறார் ஸ்டெய்ன். கடந்த மூன்று தசமங்களில், சிறந்த வேகப் பந்து வீச்சாளர்களைப் பட்டியலிட்டால், அதில் டாப் 3-ல் கண்டிப்பாக ஸ்டெய்னின் பெயர் ஜொலிக்கும்.

டேல் ஸ்டெய்ன்

டெஸ்ட்டில் 26 ஐந்து விக்கெட் ஹால்களையும், ஐந்து பத்து விக்கெட் ஹால்களையும் எடுத்துள்ள ஸ்டெய்ன், அதிக ஐந்து விக்கெட் ஹாலைகளையும், அதிக பத்து விக்கெட் ஹால்களையும் எடுத்த வேகப்பந்து வீச்சாளர்களுக்குரிய பட்டியலில் இரண்டிலுமே, ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். சராசரியாக, அவர் விளையாடிய மூன்று போட்டிகளுக்கு ஒருமுறை, ஐந்து அல்லது பத்து விக்கெட்டுகள் ஹால் வந்து சேர்ந்தது என்பதுதான் எந்த அளவுக்கு அசாத்தியமான பௌலர் அவர் என்பதை நிரூபிக்கிறது.

டெஸ்ட்டில் அவர் சக்ரவர்த்தி என்றாலும், ஒருநாள் போட்டிகளிலும் மன்னன்தான். ஒரு ஸ்பெல்லில், உலகம் மாறுமோ இல்லையோ, போட்டி மாறும். 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையில், இந்தியாவுக்கு எதிரான அவருடைய பந்துவீச்சு அத்தகையது தான். அப்போட்டியில், 267/2 என்ற நிலையில்தான் இந்திய அணியின் ஸ்கோர் இருந்தது. அதுவும் 40-வது ஓவரில்தான் சச்சினின் விக்கெட் விழுந்தது. ஆனால், 296-ஐ எட்டும் முன் எல்லா விக்கெட்டுகளையும், இந்தியா இழந்திருக்கும். அதில், ஐந்து விக்கெட்டுகள், ஸ்டெய்ன் என்னும் சூப்பர் மேனால் வீழ்ந்ததுதான்.

சூப்பர் ஹீரோவாக இருந்தவருக்கு, காயங்கள் தானாகவே குணமாகும் தகவமைப்பு இருந்திருந்தால், அவர் இன்னமும் பல உயரங்களை எட்டி இருக்கக் கூடும். அதே போல், ஆண்டர்சன் உள்ளிட்ட மற்ற வீரர்கள் போல, நிலைத்து நின்று களமாட வேண்டுமென, இந்தச் சிறுத்தை, தனது வேகத்தையும் குறைக்கவில்லை. பௌலிங் ஸ்டைலில் மாற்றங்களையும் கொண்டு வரவில்லை. அதுதான், அவரது கரியருக்கான முற்றுப்புள்ளியாக உருவெடுத்தது. ஒரு கட்டத்தில், அதிலிருந்து மீள, தொடர்ந்து ஓட, 2019-ல் டெஸ்டில் இருந்து கூட ஓய்வை அறிவித்து விட்டார். இருப்பினும், லிமிடெட் ஓவர் ஃபார்மட்டில், அவர் நினைத்த அளவு சாதனைகளை அதன்பின் நிகழ்த்தவே முடியவில்லை.

டேல் ஸ்டெய்ன்

சர்வதேச அரங்கில், எல்லா ஃபார்மட்டுக்கும் சேர்த்து, 699 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் ஸ்டெய்ன். இதில், 439 டெஸ்ட் விக்கெட்டுகளும், 196 ஒருநாள் விக்கெட்டுகளும், 64 டி20 விக்கெட்டுகளும் அடக்கம். இதில் சிறப்பு என்னவென்றால், டெஸ்டில் 400 விக்கெட்டுகள் என்னும் மைல்கல்லை, 16,634 பந்துகளில், ஸ்டெய்ன் எட்டியிருந்தார். அதே மைல்கல்லை எட்டிய மற்ற அத்தனை வேகப்பந்து வீச்சாளர்களும், அதற்கு, 20,000 பந்துகளுக்கு மேல் எடுத்திருந்தார்கள். இதுவே எத்தகைய ஆதிக்கத்தை, டெஸ்ட் அரங்கில் ஸ்டெய்ன் ஏற்படுத்தினார் என்பதை எடுத்துக்காட்டுவதற்கு!

கத்தி வீச்சின் துல்லியமும், கதிர்வீச்சின் அபாயமும் ஒருசேர அமைந்த அவரது பந்துவீச்சு, இனிமேல் கிரிக்கெட் அரங்கில் இருக்காது. ஸ்டெய்ன் இல்லாத களத்தில் பேட்ஸ்மேன்கள் தங்களை சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம்!



source https://sports.vikatan.com/cricket/dale-steyns-retirement-and-his-impressive-career-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக