Ad

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

இடியட் பாக்ஸ் - 74 : தாம்சனின் சர்ப்ரைஸும், ஆரஞ்சு டிவியின் அவார்ட் ஷோவும்!

மார்க்ஸ் திவ்யாவை பார்த்தபடி இருந்தான். திவ்யாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது. ஏஞ்சல் மேடையில் தன் பெயரை சொல்வாள் என்பது மார்க்ஸ் கொஞ்சமும் எதிர்பாராதது. அவன் அவளை மனதார புகழ்ந்ததும் அவர்களுக்கிடையிலான உணர்வுப்பூர்வமான தருணங்களும் என எதுவுமே திட்டமிடப்படாமல் நிகழ்ந்தவைகள்தான்.

கற்றுக் கொடுத்த ஆசானை கற்றுக் கொண்ட மாணவன் ஒரு வெற்றி தருணத்தில் நினைவு கூர்ந்ததும் ஆசான் அவனை பெருமையாக உச்சிமுகர்ந்ததும் தான் நிஜத்தில் நடந்தவைகள். ஆனால் ஆசானும் மாணவியும் முன்னாள் காதலர்களாக இருக்கும் பட்சத்தில் அதை பார்க்கும் இன்னாள் காதலி அதை சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என அவசியம் இல்லைதானே.

இதை திவ்யாவுக்கு எப்படி சொல்லி புரியவைப்பது எனத் தெரியாமல் மார்க்ஸ் யோசனையில் நின்று கொண்டிருந்தான். திவ்யா உடைந்து போய் அழத்தொடங்கினாள்.

“திவ்யா” என மார்க்ஸ் ஏதோ பேச வர சட்டென முன்னால் நகர்ந்த திவ்யா மார்க்ஸை இறுக அணைத்துக் கொண்டாள். மார்க்ஸ் அதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவனை அணைத்துக் கொண்டு அழும் திவ்யாவை மார்க்ஸின் கரங்கள் ஆறுதலாக அணைத்துக் கொண்டன.

“அழாதே” என்று அவன் சொல்லவில்லை. “அழட்டும்” என்று அவன் காத்திருந்தான். மனதில் அடக்கி வைத்திருந்த உணர்வுகள் அனைத்தையும் கண்ணீராய் அவள் கரைத்துக் கொண்டிருந்தாள். சிறுது நேரம் மெளனமாக கடந்ததன. திவ்யா நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

இடியட் பாக்ஸ்

“ஸாரி” என இருவரும் ஒரே சமயத்தில் சொன்னார்கள். சொன்னதும் உடனே அதை நினைத்து புன்னகைத்தும் கொண்டார்கள்.

“நீ எதுக்கு இப்ப ஸாரி சொன்ன?” என கேட்டாள் திவ்யா.

“இல்ல... அது வந்து” என இழுத்தான் மார்க்ஸ்.

“நீ தப்பெதுவும் பண்ணலன்னு உனக்கு நல்லா தெரியும். அப்புறம் எதுக்கு இந்த ஸாரி?” என கேட்டாள் திவ்யா.

“நான் தப்பு பண்ணனா சரியா பண்ணனான்றது முக்கியமில்ல... நான் பண்ணது உன்ன சங்கபடுத்திருச்சுன்றப்ப ஸாரி கேக்குறது தான நியாயம்” என்றான் மார்க்ஸ்.

“நீ ஏஞ்சல பாராட்டுனதும் அவளை அணைச்சிக்கிட்டு ஐ லவ் யூ சொன்னதும் என்ன சங்கடப்படுத்திச்சுன்னு நினைக்கிறியா?”

‘ஆமா தான?’ என்றது மனது. ஆனால் மார்க்ஸ் அமைதியாகயிருந்தான்.

“அதனால தான் நான் அழுறேன்னு நினைக்கிறயா?”

மார்க்ஸ் என்ன பேசுவது எனத் தெரியாமல் திவ்யாவை பார்த்தான்.

“நான் உங்க ரெண்டு பேரைப் பார்த்து பொறாமைப்படல. உங்க மனசுக்குள்ள இன்னும் காதல் இருக்கோன்னு நான் சந்தேகப்படல. உங்களுக்கு நடுவில இருந்த அன்பு என்ன என்னவோ பண்ணிடுச்சு” என்றாள் திவ்யா.

மார்க்ஸ் திவ்யாவை வித்தியாசமாக பார்த்தான்.

“என்ன தான் உன்ன வெறுக்கற மாதிரி ஏஞ்சல் நடிச்சாலும். ஒரு முக்கியமான இடம் வரும் போது அவளை அறியாம அவ உன் மேல எவ்வளவு மரியாதையும் அன்பும் வச்சிருக்கான்றது வெளிய வந்திடுச்சு பாரு. நீயும் அதை எவ்வளவு பெருந்தன்மையா ஏத்துகிட்ட” என்றாள் திவ்யா.

“உனக்கு அது தப்பா தோணலயா?” எனக் கேட்டான் மார்க்ஸ்.

“சத்தியமா இல்லை.. அதுல வெறும் அன்பு மட்டும் தான் இருந்துச்சு. காதல் சுத்தமா இல்லை... உண்மைய சொல்லணும்னா அவ உன்னை வெறுக்குறப்ப என் மனசுல இருந்த சந்தேகம் அவ உன்னைப் பார்த்து ஐ லவ் யூ சொன்னப்ப எனக்கு சுத்தமா இல்லை”

என திவ்யா சொன்னதும் மார்க்ஸ் அவளை அணைத்துக் கொண்டான்.

“உன்ன பிடிக்காத ஏஞ்சலால கூட உன்ன வெறுக்க முடியல. உன்ன நிஜமா நேசிக்கிற நான் உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல” எனக் கேட்டாள் திவ்யா.

“ஐ லவ் யூ” என்றான் மார்க்ஸ். இந்த “ஐ லவ் யூ” வில் காதல் கொட்டி கிடந்தததை திவ்யா உணர்ந்தாள்.

மார்ஸ் டிவியின் கான்ஃபரன்ஸ் ரூம். அனைவரும் யோசனையாக அமர்ந்திருந்தார்கள்.

இன்னும் சற்று நேரத்தில் தாம்சனின் வீடியோ கால். மாறாவின் நிகழ்ச்சி பற்றி அவர் என்ன கேட்க போகிறார் என்ற பதற்றம் அனைவருக்குள்ளும் இருந்தது. வீடியோ கால் தொடங்கியது.

புன்னகையுடன் ‘’குட்மார்னிங்’’ என ஆரம்பித்தார் தாம்சன். அனைவரும் மெல்லிய குரலில் ‘’குட் மார்னிங் சார்” என்றார்கள்.

அதைத்தொடர்ந்து அறையில் சின்ன நிசப்தம் நிலவியது.

“இந்த வருஷத்துக்கான சேல்ஸ் டார்கெட்டை நாம மூணு மாசத்துக்கு முன்னாலயே அச்சீவ் பண்ணிட்டோம். பெரிய சாதனை இது. எந்த மார்க்கெட்லயும் இது வரைக்கும் இப்படி ஒரு விஷயம் நடந்ததே இல்லை. வாழ்த்துகள்” என்றார் தாம்சன்.

“தேங்க்யூ சார்” என சொன்ன அனைவரது குரலிலும் பதற்றம் குறைந்து சந்தோஷம் கூடியிருந்தது.

“போன வாரம் நம்ம சேனலோட GRP தான் லாஸ்ட் ரெண்டு வருஷத்துல ஹையஸ்ட் நம்பர்” என்றார் தாம்சன்.

“போன வாரம் ஃபெஸ்ட்டிவல் டே சார். ரெண்டு புதுப்படம் போட்டோம். அதான் சார் ” என பணிவாக சொன்னார் மனோஜ்.

“இருக்கட்டும் இதுக்கு முன்னாடியும் ஃபெஸ்டிவல் டே வந்திருக்கு. புதுப்படம் போட்டிருக்கோம். இப்படி ஒரு ரெகார்ட் நடந்ததில்லையே… கங்கிராட்ஸ் டு ஆல்” என்றார் தாம்சன்.

மீண்டும் “தேங்க்யூ சார்” என்றார்கள் அனைவரும்.

“இந்த சமயத்தில நாம எங்க ஆரம்பிச்சோம்றதை நான் நினைச்சு பாக்குறேன். இந்த ஜர்னில நாம பண்ணாத சாதனைகள் கிடையாது. தொடாத சிகரங்கள் கிடையாது. இது எல்லாத்தையும் இந்த டீம் தான் சாதிச்சது. அமேஸிங் கைஸ்”

அனைவரும் மெளனமாகப் பார்த்தனர்.

“வேற ஏதாவது அப்டேட் இருக்கா?” எனக் கேட்டார் தாம்சன்.

“சார்... மாறாவோட ஷோ இந்த வாரம் நைன் பிளஸ் டிஆர்பி பண்ணியிருக்கு சார்” என்றார் மனோஜ்.

“அந்த ஃபார்மேட் உலகம் பூரா வொர்க்காயிருக்கு. அதோட அவங்க ஒரு நல்ல ஹோஸ்ட் பிடிச்சிட்டாங்க... தட்ஸ் ஓகே… அதே சமயத்துல அந்த டைம் பேண்ட்ல நம்மளோட ரேட்டிங் எதுவும் பெருசா குறையலையே” என்றார் தாம்சன்.

“யெஸ் சார்” என்றார் மனோஜ்.

“அத கவுன்ட்டர் பண்ண என்ன பண்ணலாம்னு யோசிங்க. அதை நினைச்சு பயந்துக்க ஒண்ணும் இல்ல... இன்னும் 60 எபிசோடுக்கு அப்புறம் திரும்பவும் அவங்க சாதாரண சீரியலைத்தான் அந்த இடத்தில போட்டாகணும். அப்ப திரும்பவும் அவங்க பழய டிஆர்பிக்கு போயிடுவாங்க. நம்ம பிளான்ஸ்ல கவனம் செலுத்துங்க”

அனைவரும் தலையாட்டினார்கள்.

“எம்ப்ளாயிஸ் எல்லாருக்கும் ஸ்பெஷல் போனஸ் ஒண்ணு மேனேஜ்மென்ட் அனவுன்ஸ் பண்ணியிருக்கு” என்றார் தாம்சன்.

அனைவரும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனார்கள். அடி கிடைக்கும் என வந்தவர்களுக்கு ஆச்சரியத்தை தந்தார் தாம்சன்.

நல்ல தலைவனது அழகு தோல்விகளை எளிதாக கடந்து செல்வதுதான். அடைந்த தோல்விகளை அதிகம் கிளறுவது தான் பல சமயங்களில் அடுத்த தோல்விக்குக் காரணமாக அமைந்து விடும். தோல்விக்கான காரணங்களை ஆராய்வதை விட்டுவிட்டு தோல்வி தரும் பாடங்களை மட்டும் எடுத்துக்கொண்டு முன்னேறி செல்வதுதான் சிறந்த வழி.

வெற்றியில் கை குலுக்குவதல்ல... தோல்வியில் கை பிடித்துக் கொள்வதுதான் நல்ல தலைமை. வெற்றியாளர்கள் என்பவர்கள் தோல்வியை சிறப்பாக கையாளத் தெரிந்தவர்கள்தான்.

“எனிதிங் எல்ஸ்” என்றார் தாம்சன்.

“ஃபிலிம் அவார்ட் டீல் நாம சைன் பண்ணி இருக்கோம் சார்” என்றார் மனோஜ்

“குட்” என்றார் தாம்சன்.

இடியட் பாக்ஸ்

ஆரஞ்ச் டிவியின் கான்ஃபரன்ஸ் அறையில் அனைவரும் கூடியிருந்தார்கள். அனைவரது முகத்திலும் சின்ன ஏமாற்றம் தெரிந்தது. ஏஞ்சல் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள். அனைவரும் அவள் சொல்லப்போகும் பதிலுக்காக காத்திருந்தார்கள்.

“நாம கேள்விப்பட்ட நியூஸ் உண்மைதான். அவங்க இந்த வருஷம் ஃபிலிம் அவார்ட்ஸை மார்ஸ் டிவிக்கு கொடுத்திட்டாங்க” என்றாள் ஏஞ்சல்.

பிரபல பத்திரிகை நடத்தும் ஃபிலிம் அவார்ட் வருடம் தோறும் ஆரஞ்சு டிவியில் ஒளிபரப்பாவது வழக்கம். இந்த வருடம் அந்த அவார்ட்ஸ் மார்ஸ் டிவிக்கு கை மாறிவிட்டது.

“அந்த பத்திரிகைக்கும் மார்ஸ் டிவிக்கும் ஆகாதே... எப்படி அவங்க இந்த ஷோவை மார்ஸ் டிவிக்கு கொடுத்தாங்க?” எனக் கேட்டார் நெல்லையப்பன்.

“நம்ம சேனல விட மார்ஸ் டிவியில வந்தா டிஆர்பி டிரிப்பிளா வரும். அது அந்த பத்திரிகைக்கு நல்ல மைலேஜா இருக்கும்” என்றான் பாண்டியன்.

“அது சரிப்பா... நாமதான வருஷாவருஷம் பண்ணியிருக்கோம்” என ஆதங்கமாகச் சொன்னார் நெல்லையப்பன்.

“பெரிய அமௌன்ட் குடுத்து அந்த அவார்ட் ஃபங்ஷனை மார்ஸ் டிவி வாங்கிட்டாங்க... நல்ல பணம், அதோட மார்ஸ் டிவி பெரிய பிளாட்ஃபார்ம் வேற. அதனால அவங்க அவார்ட் ஷோவை மார்ஸ் டிவிக்கே குடுத்துட்டாங்க” என்றாள் திவ்யா.

அனைவரும் ஓரக்கண்ணால் மேனனை பார்த்தார்கள். இது போன்ற அசாதாரணமான சமயங்களில் யாரும் எதிர்பாராத ஒரு தீர்வை சொல்லக்கூடிய சக்தி அவருக்கு மட்டும்தான் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும்.

மேனன் சின்ன புன்னகையுடன் அமர்ந்திருந்தார்.

“என்ன பண்ணலாம் மேனன்” என்றாள் தாட்சா.

மேனன் நிமிர்ந்து அமர்ந்தார்.

“இந்த அவார்ட் ஃபங்ஷன் ரொம்ப முக்கியம். இந்த அவார்ட் ஃபங்ஷனை எப்பவுமே நாம சேல்ஸ் டீம் பெரிய அமெளன்ட்டுக்கு விப்பாங்க. சேல்ஸ் டார்கெட் அச்சீவ் பண்றதுக்கு அது பெரிய உதவியா இருக்கும்” என்றாள் தாட்சா.

“நாமளும் ஒரு அவார்ட் ஃபங்ஷன் நடத்தலாம்” என்றார் மேனன்.

“சார்... அந்த பத்திரிகைக்கு நடிகர்களோட, சினிமா இண்டஸ்ட்ரியோட நல்ல கனெக்ஷன் இருக்கு சார். அதனால அவங்களால எல்லா ஆர்ட்டிஸ்ட்டையும் ஷோவுக்கு கொண்டு வர முடியுது. நம்மளால பெரிய ஆர்ட்டிஸ்ட் ஷோவுக்கு கொண்டு வர முடியாது. ஆர்ட்டிஸ்ட் வரலைன்னா அவார்ட் ஷோ வொர்க் அவுட் ஆகாது சார்” என்றான் மார்க்ஸ்.

“ஃபிலிம் ஆர்ட்டிஸ்ட் நமக்குத் தேவையில்லை” என்றார் மேனன்.

“ஃபிலிம் ஆர்ட்டிஸ்ட் இல்லாம எப்படி ஃபிலிம் அவார்ட் நடத்துறது?” எனக் கேட்டாள் தாட்சா.

“நான் ஃபிலிம் அவார்ட் நடத்தணும்னு சொல்லவே இல்லையே?’’

அனைவரும் அவரைப் புரியாமல் பார்த்தனர்.

“நாம டெலிவிஷன் அவார்ட் நடத்தப் போறோம்”

“இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே” என்றார் நெல்லையப்பன். அனைவரும் மேனனை பார்த்தார்கள்.

“மொத்தம் 10 சீரியல்... 7 ஏழு ஷோ. நம்ம சேனல்ல ஓடுது. அதிலிருந்து பெஸ்ட் ஹீரோயின், பெஸ்ட் ஹீரோ, பெஸ்ட் காமெடியன்னு செலக்ட் பண்ணி ஒரு டிவி அவார்ட் நடத்துவோம்” என்றார் மேனன்.

“சார்... இந்த மாதிரி சின்ன அவார்ட் ஃபங்ஷன் எல்லாம் யாரு சார் பார்ப்பாங்க” என்றார் நெல்லையப்பன்.

“உங்களை யாரு சின்னதா பண்ண சொன்னது? பிரமாண்டமா பண்ணுவோம்” என்றார் மேனன்.

அனைவரது முகத்திலும் சந்தேகம் தெரிந்தது.

“ஃபிலிம் அவார்ட் அவங்க எங்க பண்ணுவாங்களோ அதே கிரவுண்ட்ல, அதுக்கு செலவு பண்ற அளவுக்கு செலவு பண்ணி பிரமாண்ட செட் போட்டு பண்ணுவோம்”

“ஆனாலும் வர்றவங்க டிவி ஆர்ட்டிஸ்ட்தான” என தயக்கமாகச் சொன்னான் பாண்டியன்.

“இன்னைக்கு டிவியில இருக்கிற ஒவ்வொரு ஆர்ட்டிஸ்டும் சினிமா ஆர்ட்டிஸ்ட்டை விட ரொம்ப பாப்புலர். சினிமா பாக்க ஒருத்தன் காசு குடுத்து தியேட்டர் வரணும். ஆனா டிவி அவங்க வீட்டுக்குள்ள இருக்கு”

“சார் கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க சார். தினம் தினம் ஜனங்கதான் அவங்களை பாக்குறாங்களே சார். அவங்ளையே திரும்ப மேடைல பாக்குறதுல ஜனங்களுக்கு என்ன சார் திரில் இருக்கப்போகுது?’’ என்றான் பாண்டியன்.

“அவங்களை ஏன் அப்படியே பாக்கணும். சிட்டில இருக்கிற பெஸ்ட் டிசைனர்ஸை கூப்பிட்டு அவங்களுக்கு காஸ்ட்யூம் டிசைன் பண்ணுங்க. தினம் சீரியல்ல அழுற மாமியார டான்ஸ் ஆட வைங்க. மாமனாரைப் பாட வைங்க... அவங்களோட இன்னொரு பக்கத்தை ஜனங்களுக்கு காட்டுங்க”

முட்டாள்தனமாக யோசிப்பது என்பது டிவி போன்ற கிரியேட்டிவ் தொழிலை பொறுத்தவரை ஒரு முக்கியமான தகுதி. அப்படிப்பட்டவர்களால் மட்டும்தான் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

அனைவருக்குமே மேனனின் ஐடியா பிடித்திருந்தது. ஆனால் அது வெற்றி பெறுமா என்ற சந்தேகமும் இருந்தது.

“சார்... டிவி அவார்ட் ஷோவை பெரிய விலைக்கு விக்க முடியாது சார்” என்றான் சேல்ஸ் ஹெட் சீயோன்.

“ரேட்டிங் கமிட்மென்ட் வச்சு சேல்ஸ் அக்ரிமென்ட் போடுங்க. நாலு ரேட்டிங் வந்தா முப்பதாயிரம் தருவாங்கன்னா எட்டு ரேட்டிங் வந்தா அறுபதாயிரம் தரனும்னு சொல்லுங்க” என்றார் மேனன்.

“ஒரு வேளை ரேட்டிங் குறைஞ்சிட்டா?”

“ஒரு வேளை ரேட்டிங் பின்னி எடுத்தா?” என்றார் மேனன்.

“நீங்க சொன்னா சரி சார்” என்றான் சீயோன்.

“சின்ன ஷோ, சின்ன ஆர்ட்டிஸ்ட்டுன்னு நினைக்காம ஒரு பெரிய ஃபிலிம் அவார்ட் எப்படி பண்ணுவீங்களோ அதே மாதிரி யோசிச்சு இதை பிரமாண்டமா பண்ணுங்க” என்றார் மேனன்.

அனைவரும் “யெஸ் சார்” என கலைந்தார்கள்.

“மேனன் ஒரு வேளை இந்த ஐடியா தோத்து போயிடுச்சுன்னா” எனப் புன்னகையுடன் கேட்டாள் தாட்சா.

“தோத்து போறதுக்கும் ஒரு வாய்ப்பு இருக்குன்றதுதான் போட்டியை இன்ட்ரஸ்டிங்காக்குற விஷயம்” என்றார் மேனன்.

தாட்சா சிரித்தாள்.

இடியட் பாக்ஸ்

பிரமாண்டமாக அரங்கம் தயாராகிக் கொண்டிருந்தது. நாளை அவார்ட் ஃபங்ஷன். அரங்கத்தில் லைட்டிங் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. பத்தாயிரம் பேர் அமரக்கூடிய மாதிரியான பெரிய அரங்கம் அது.

ஏஞ்சல், திவ்யா, மார்க்ஸ் என அனைவரும் பம்பரமாக சுழன்று வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

சின்னத்திரை நடிகர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு சினிமா கனவு உண்டு. சினிமா குறித்ததொரு ஏக்கம் எப்போதும் அவர்களை அலைக்கழித்துக் கொண்டேயிருக்கும். சினிமா பெரிது டிவி சிறியது என மக்கள் நினைக்கிறார்களோ இல்லையோ அந்த துறையில் இருப்பவர்களே நினைப்பதுதான் வருத்தமான விஷயம்.

சின்ன திரையில் நாயகர்களாக உலா வருபவர்கள் சினிமாவில் சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க அழைப்பு வரும் போது அதை மிகப்பெரிய வாய்ப்பாக நினைத்துக் கொள்வதுண்டு . மக்கள் சினிமாவுக்கு மாற்றாக டிவியை தேர்ந்தெடுத்து வெகு நாட்களாயிற்று. ஆனாலும், டிவியில் பணிபுரிபவர்களுக்கு சினிமா என்பது பெருங்கனவு.

விருது வழங்கும் விழா அவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாகப்பட்டது. அந்த வாய்ப்பை அவர்கள் சீரியசாக எடுத்துக் கொண்டார்கள். இரவு பகலாக பிராக்டீஸ்கள் நடந்து கொண்டிருந்தன.

மேனனும் தாட்சாவும் மேடைக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார்கள்.

“மேனன்” என அழைத்தாள் தாட்சா.

“சொல்லுங்க தாட்சா”

“மொத்தமா எல்லா டிக்கெட்டும் தீர்ந்து போச்சு. ஆரம்பத்தில் இதைப் பார்க்க ஆளுங்க வருவாங்களான்னு ரொம்ப யோசிச்சுட்டு இருந்தேன். இவ்வளவு பெரிய ஆடிட்டோரியம் கூட்டம் இல்லைன்னா பாக்குறதுக்கு தப்பா இருக்குமேனு யோசிச்சேன். ஆனா டிக்கெட் எல்லாம் போயிடுச்சு” என்றாள் தாட்சா.

மேனன் புன்னகைத்தார்.

“இப்ப கொஞ்சம் நம்பிக்கை வர்ற மாதிரி இருக்கு” என்றால் தாட்சா.

“நல்லது தான” என்றாள் தாட்சா.

“இது பெரிய ஹிட்டாகும்னு உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது?”

“சத்தியமா தெரியாது” என்றார் மேனன்.

“வாட்?” என்றாள் தாட்சா.

“நமக்கு இருக்குற ஒரு வாய்ப்பை செலக்ட் பண்ணி அதை கான்ஃபிடன்ட்டா பண்ணுவோம்னு மட்டும் தான் எனக்கு தோணிச்சு. இது ஜெயிக்குமா தோற்குமான்னு எனக்குத் தெரியாது” என்றார் மேனன்.

தாட்சா சிரித்தாள்.

சின்னத்திரை விருது வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. யாரும் எதிர்பாராத அளவில் அரங்கம் நிரம்பி வழிந்தது. அது ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியாக இல்லாமல் ஆரஞ்சு டிவியின் குடும்ப விழாவாக மாறியிருந்தது.

“தல நம்ம மாணிக்கம் சீரியல் மாமியார் கோச்சுக்கிட்டு ஷோவுக்கு வர மாட்டுறாங்க தல” என்றான் பாண்டியன்.

“சிறந்த மாமியார்னு ஒரு அவார்ட் கிரியேட் பண்ணி அந்த அம்மாவுக்கு குடுத்திருடா” என சிரித்தான் மார்க்ஸ்.

“அந்த அம்மாவுக்கு மாமியார் அவார்ட் குடுத்தா சங்கரி மேடம் கோச்சுப்பாங்க”

“அவங்களுக்கு சிறந்த அம்மான்னு ஒரு அவார்டு குடு”

“என்ன தல அவார்டை அள்ளி வழங்குறமே இது தப்பில்லையா?” என சந்தேகமாகக் கேட்டான் பாண்டியன்.

“இதை அவார்டா பாக்காத பாண்டியா... ஒரு அங்கீகாரமா பாரு... 60 வயசாச்சு அவங்களுக்கு. எவ்வளவோ சினிமால சின்ன சின்ன ரோல் பண்ணியிருக்காங்க… இதுவரைக்கும் யாரும் அவங்களை கண்டுக்கிட்டதில்லை. இது அவங்களைப் பொறுத்த வரைக்கும் ஒரு பெரிய அங்கீகாரம்தானடா” என்றான் மார்க்ஸ்

மார்க்ஸ் சொன்னது சரி எனப்பட்டது பாண்டியனுக்கு.

“அவார்ட் அப்படிங்கிறது எல்லாம் அப்புறம். நம்மளோட ட்ராவல் பண்றவங்களை எல்லாம் சந்தோஷமா அனுப்புவோம். இன்னொரு ஆங்கிள்ல பார்த்தாலும் சிறந்த மாமியார்னா அவங்கதான”

“செம ஐடியா தல”

“அண்ணி அண்ணன் அக்கான்னு அவார்டை அள்ளிக் குடு” என சிரித்தான் மார்க்ஸ்.

கரங்கள் நடுங்க அந்த 60 வயது சங்கரியம்மா மேடை ஏறி அவார்டை வாங்கிக் கொண்டவர், ஒரு அங்கீகாரத்துக்காகத்தான் போராடிய போராட்டங்களை நினைத்து மேடையில் கதறி அழுதபோது மொத்த அரங்கமும் கண்கள் கலங்க கரவொலி எழுப்பியது. சங்கரியம்மாவின் முகத்தில் தெரிந்த நிம்மதியை பார்த்த போதே மார்க்ஸுக்கு தெரிந்துவிட்டது...இந்த நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெறப்போகிறது என்பது.

மேடையின் பின்புறமிருந்த டிவி கன்ட்ரோல் ரூமில் அமர்ந்திருந்த திவ்யா அதை விட்டு வெளியே வந்தாள். புரொடக்‌ஷன் மேனேஜர் ரவி யாரிடமோ கெஞ்சிக் கொண்டிருந்தான். அந்த நபர் உரத்த குரலில் அவனிடம் சத்தமிட்டுக் கொண்டிருந்தான்.

“யாரு ரவி இது... என்ன பிரச்னை?” என கேட்டபடி அருகில் வந்தாள் திவ்யா.

“இது யாரு?” என்றான் சத்தமிட்டுக் கொண்டிருந்தவன்.

“நான்தான்பா இங்க பொறுப்பு... என்ன வேணும் சொல்லுங்க”

“ஆடிட்டோரியம் வாடகை 10 மணி வரைக்குத்தான் கட்டியிருக்காங்க… மணி இப்ப 12 ஆகப் போகுது. பணம் கட்டணும்!”

“நாளைக்கு காலையில ஆபிஸ்ல இருந்து செக் தர சொல்றேன்” என்றாள் திவ்யா

“அதெல்லாம் ஆவறதில்லை...இப்ப முதல்ல 25,000 ரூபா எனக்கு பணம் தந்தாதான் ஷோ நடக்கும். இல்லன்னா மெயின் சுவிட்ச் ஆப் பண்ணிடுவேன்” என்றான் அவன் உறுதியாக...

அரங்கத்தில் வேறு யாரோ விருது வாங்க பலத்த கரவொலி எழும்பியது.

“ரவி 25,000 தான பே பண்ணிருங்க” என்றாள் திவ்யா.

“அதில்ல மேடம்” என ரவி இழுத்தான்.

“இது ஆகுறது இல்ல... கரண்ட் கட்டானா தெரியும்” என அவன் நகர முற்பட திவ்யா “நான் தரேன்” என்றாள்.

“இல்ல மேடம் அது” என ரவி ஏதோ சொல்ல முற்பட

“நான் பே பண்ணிடுறேன். நாளைக்கு பேசிக்கலாம்” என்ற திவ்யா அவனைப் பார்த்து திரும்பி “ இங்க ஏடிஎம் இருக்கா” என்றாள்.

“கூகுள் பே பண்ணிரும்மா” என்றான் அவன்.

அவனை வித்தியாசமாக பார்த்தவள் தனது போனை எடுத்து பணத்தை மாற்றினாள்.

“ப்ளீஸ் ஷோ முடியறவரைக்கும் தொந்தரவு பண்ணாதிங்க” என்றாள் திவ்யா.

“நான் பார்த்துகிறேன் நீ போம்மா” என அவன் சொல்ல திவ்யா மீண்டும் கன்ட்ரோல் ரூமுக்குள் நுழைந்தாள்.

ஆடிட்டோரியம் பொறுப்பாளன் நகர்ந்தான்.

சற்று தள்ளி இருளில் சிகரெட் பிடித்தபடி நின்று கொண்டிருந்த அலோக்கும் ராயும் புரொடக்ஷன் மேனேஜர் ரவியின் அருகில் வந்தார்கள்.

அவர்களைப் பார்த்த ரவி வெலவெலத்து போனான்.

“லஞ்சம் கொடுக்கிறது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமில்ல” என்றான் ராய்.

“வேலைய விட்டு தூக்கிறது ஒண்ணு தான் அதுக்கான குறைந்தபட்ச தண்டனை” என்றான் அலோக்.

“சார் நான் குடுக்கல சார் மேடம்தான்” என ரவி பயமாகச் சொன்னான்.

“அதை நாளைக்கு என்கொயரில வந்து சொல்லு” என்றான் ராய்.

“யெஸ் ஸார்... யெஸ் ஸார்” என்றான் ரவி.

ராயும் அலோக்கும் புன்னகைத்தார்கள். எந்த விஷயமாக இருந்தாலும் கார்ப்ரேட்டில் மன்னிக்கப்படும். ஆனால், இது போன்ற நேர்மை சம்பந்தப்பட்ட எத்திக்ஸ் விஷயங்களுக்கு ஒரு போதும் விதிவிலக்கு தரப்படுவதில்லை.



source https://cinema.vikatan.com/literature/idiot-box-74-mars-tvs-thompson-surprise-and-orange-tv-award-show

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக