பாகம் 1: "உன் பொண்ணு இரும்பு மனுஷிப்பா"
பாகம் 2: "ரேஷன் கார்டும், டிரைவிங் லைசன்ஸும் வேணா இந்த நாடு கொடுக்கும்"
பாகம் 3: விறகைத் தூக்கி நடந்தாள், வியர்வை ஊற்றி வளர்ந்தாள்!
பாகம் 4: "100 % உழைப்பு போதாது மீரா... நீ ரெண்டு மடங்கு போராடணும்"
பாகம் 5: "2012-ல தூக்குன வெயிட்டை 2014-ல உன்னால தூக்க முடியலையே!"
பாகம் 6: மீராவின் பெயருக்கு அருகே DID NOT FINISH!
கிளீன் & ஜெர்க் பிரிவின் மூன்று வாய்ப்புகளையும் தவறவிட்டதால் உடைந்து போய்விட்டார் மீரா. பயிற்சியாளர் விகரம் ரத்தோர் அவளை அரவணைத்து ஆறுதல் சொல்கிறார்.
ஒலிம்பிக் கிராமத்தில் இருக்கும் தன் அறையில் தூங்க முற்படுகிறாள். ஆனால், தூக்கம் வரவில்லை. உருண்டுகொண்டே இருக்கிறாள். திடீரென செல்போனை எடுக்கிறாள். Home - 1 missed call என்றிருக்கிறது. Call பிரஸ் செய்துவிட்டு காதில் போனை வைக்கிறார். எதிர்முனையில் தாம்பியின் குரல் ஒலிக்கிறது - “தங்கம்”
மீராவால் எதுவும் பேச முடியவில்லை. வார்த்தைகள் எதுவும் அவள் தொண்டையைத் தாண்டு எழும்பவில்லை.
தாம்பி: “மீரா… பரவால்லடிமா. நீ அடுத்தவாட்டி ஜெயிச்சிடுவ”
அதுவரை அடக்கிவைத்திருந்த கண்ணீர் மீராவின் கண்களிலிருந்து வழிந்தோடுகிறது. ரூம் மேட்களுக்குக் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக வாயைப் பொத்திக்கொள்கிறாள்.
தாம்பி: “அடக்காம அழுதுடு. மொத்தமா அழுது கொட்டிடு. பிராக்டீஸ் ஆரம்பிக்கிறப்போ அழறதுக்கும் கவலைப்படுறதுக்கும் எதுவும் இருக்கக்கூடாது”
மீரா: “ரொம்ப கஷ்டமா இருக்குமா”
தாம்பி: “அழுதுடுனு சொல்றத தவிர்த்து நான் என்னடி ஆறுதல் சொல்லுவேன். ஆசைப்பட்டது கிடைக்காம போனா எவ்ளோ வலிக்கும்னு எனக்கு தெரியாதே. ஆசையே இல்லாத ஒரு வாழ்க்கைத்தான நாங்க வாழ்ந்துட்டு இருக்கோம்!”
இப்போது தாம்பியின் குரல் தழுதழுக்கிறது. இருந்தாலும் தொடர்கிறார்.
தாம்பி: “ஆனா, நீ ஆசைப்படுறல. அது கிடைக்கலைனு கஷ்டப்படுறல. அதுவே நீ ஜெயிச்ச மாதிரிதான். இப்போ அங்க நைட் தான!”
மீரா: “ஆமாமா... 12.30 மணி”
தாம்பி: “12.30 மணிக்கு உனக்குத் தூக்கம் வந்திருந்தா, இப்போ நீ அழாம இருந்திருந்தா, எனக்கு போன் பண்ணாம இருந்திருந்தாத்தான் என் புள்ள தோத்திருச்சுனு நினைச்சிருப்பேன். லட்சியத்துக்காக அழுறவ என் புள்ளைனு இப்போ எனக்கு சந்தோஷமா இருக்கு. அடுத்த வாட்டி நீ நிச்சயமா ஜெயிச்சிடுவடி தங்கம்”
மீரா: “கண்டிப்பா ஜெயிப்பேனாமா!”
தாம்பி: “நீ ஜெயிக்காம வேற யாரு ஜெயிப்பா!”
கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறார் மீரா. நன்றாக நிமிர்ந்து உட்கார்கிறார். சில நிமிடங்கள் தன் அம்மாவுடன் மனம் விட்டுப் பேசுகிறார்.
மீரா: “சரிம்மா... நீ போய் தூங்கு. ரொம்ப நேரம் முழிக்க வச்சிட்டேன்!”
தாம்பி: “தூங்கறதா... இங்க காலைல மணி 9.30 ஆச்சு. உனக்கு தூக்கம் வந்திடுச்சு... அதான”
மீரா சிரித்துக்கொண்டே ஆம் என்கிறார்.
தாம்பி: “சரி சரி போய் தூங்கு... ஏய் மீரா… எப்போ ஊருக்கு வர்ற”
மீரா: “இல்லம்மா. நான் நேரா பாட்டியாலாவே போறேன். ஊருக்கு வரல”
தன் மகளை நினைத்து உள்ளுக்குள் நெகிழ்கிறார் தாம்பி.
தாம்பி: “சரிம்மா... உடம்ப பாத்துக்கோ!”
CUT
பாட்டியாலா திரும்பும் மீரா வெறித்தனமாக பிராக்டீஸ் செய்கிறார். ஒவ்வொருவரும் அவர் பயிற்சியைப் பார்த்து மிரண்டு போகிறார்கள். பயிற்சி தீவிரமாக இருந்தாலும் அவர் செயல்பாட்டில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. இதற்கு முன்பு தூக்கிய 190 கிலோவைத் தூக்குவதற்கே தடுமாறினார். 2017 செப்டம்பரில் நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் 189 கிலோ தூக்கி முதலிடம் பிடித்தார் மீரா. முதலிடம் பிடித்திருந்தாலும், Snatch பிரிவில் தன்னுடைய பெஸ்ட்டை பதிவு செய்திருந்தாலும், எடை குறைவாகத் தூக்கியதால் அவரால் அதைக் கொண்டாட முடியவில்லை.
ஒருநாள், பயிற்சியில் இருந்த மீராவை அழைக்கிறார் விக்ரம் ரத்தோர்.
கோச்: “என்ன நடக்குது மீரா?”
மீரா (தயக்கமாக): “சார்…”
கோச்: “என்ன பண்ணிட்டு இருக்கனு தெரிஞ்சு தான் பண்றியா”
மீரா: “ஏன் சார்”
கோச்: “இத்தனை நாள்ல என்னதான் மாறியிருக்கு மீரா”
மீரா அமைதியாக இருக்கிறார்.
கோச்: “நீ பிராக்டீஸ் பண்றதலாம் பாத்தா எனக்கே பயமா இருக்கு. ஆனா, அவுட்புட் எதுவுமே இல்லையே!”
மீரா: “சார் நான் வெறித்தனமா பிராக்டீஸ் பண்ணிட்டேதான் இருக்கேன்…”
மீரா பேசப் பேச இடையில் குறுக்கிடுகிறார் விக்ரம் ரத்தோர்.
கோச்: “அந்த வெறித்தனம்தான் மீரா பிரச்னையே. தோத்துட்டோம் தோத்துட்டோம்ற நினைப்பு உன் உடம்பு பூரா நிரம்பிக்கிடக்குது. அதையேதான் நினைச்சிட்டு இருக்க. உன் மனசு ரியோலையே நின்னிடுச்சு. டோக்கியோ பத்தி யோசிக்க அங்க இடமே இல்ல. அப்படி இருந்தா எப்படி இம்ப்ரூவ்மென்ட் இருக்கும்”
மீரா அமைதியாக நிற்கிறார். என்ன சொல்வதென்றே அவருக்குத் தெரியவில்லை.
கோச்: “நானும் இப்போ மாறிடும். அப்போ மாறிடும்னு பாத்துட்டே இருந்தேன். மாறுற மாதிரி தெரியல. ரியோவை மொத்தமா மறந்துட்டு, என்னைக்கு ரிலாக்ஸ்டா வெயிட்ல கை வைக்கிறியோ, அன்னைக்குத்தான் அது உன் பேச்சை கேட்கும். அதுவும் நம்மள மாதிரிதான். போட்டு இறுக்கி, நம்ம இழுப்புக்குலாம் வரணும்னு நினைக்கக்கூடாது. அப்புறம் அது பாரமா மட்டும்தான் மாறும். முதல் முறை அதைத் தூக்கும்போது எவ்ளோ ஆசையா தூக்கினியோ, அப்படித் தூக்கு. எல்லாத்தையும் மறந்துட்டு முதல்ல இருந்து ஸ்டார்ட் பண்ணு!”
புன்சிரிப்புடன் தலையாட்டிவிட்டு செல்கிறார் மீரா. வெயிட்டை நோக்கி நடந்தவர், திடீரென திரும்பி வெளியேறுகிறார். கிரவுண்டைத் தாண்டிச் சென்று ஒரு மரத்தடியில் உட்கார்கிறார். அண்ணாந்து பார்க்கையில் வானவில் தெரிகிறது.
CUT
அடுத்த நாள் மிகவும் ரிலாக்ஸாகப் பயிற்சிக்கு வருகிறார் மீரா. காதில் ஹெட் செட் அணிந்துகொண்டு பாட்டுக்கொண்டே வரும் மீராவைப் பார்த்து சிரிக்கிறார் விக்ரம் ரத்தோர். வெயிட் தூக்கிக்கொண்டிருக்கும் வீரர்கள் கிளம்பும்வரை காத்திருக்கிறார். முடித்ததும் வெயிட்டுக்கு அருகே செல்கிறார். முன்னால் பயிற்சியை முடித்த ஜூனியர் வீராங்கனை 75 கிலோ வைத்து ஸ்னாட்ச் தூக்கிக்கொண்டிருந்தார். அந்த எடையைக் கூட்டுகிறார் மீரா. 105 கிலோவாக உயர்த்துகிறார். தூக்கத் தயாராக கீழே குனிந்தவர், திடீரென நிற்கிறார். யோசித்துவிட்டு இரண்டு பக்கமும் ஒவ்வொரு கிலோவைக் கூட்டுகிறார்.
விக்ரம் ரத்தோர்: “உன் பெஸ்ட்டே 106 தான். அதையும் நீ தூக்கி ஒன்றரை வருஷம் ஆச்சு. இப்போ உடனே ட்ரை பண்ணணுமா”
மீரா: “மனசுக்குள்ள டோக்கியோ மட்டும்தான் கோச் இருக்கு. இனி இம்ப்ரூவ்மென்ட் தெரியும் பாருங்க”
சொல்லிவிட்டு மிகவும் கூலாக வெயிட்டில் கை வைக்கிறார். ஆர்வமாக பார்க்கத் தொடங்குகிறார் விக்ரம் ரத்தோர். முன்பு வெயிட் தூக்கி முடித்துவிட்டு ஸ்டிரெச் செய்துகொண்டிருந்த ஜூனியர்களும் அவரோடு சேர்ந்து மீராவையே ஃபோகஸ் செய்கிறார்கள். அலேக்காக வெயிட்டைத் தூக்கித் தன் தோள்களில் வைக்கிறார். பெருமூச்சு விட்டு அப்படியே தலை மீது தூக்கி அசராமல் நிற்கிறார் மீரா. Clean & Jerk பிரிவில் தன் மிகச் சிறந்த செயல்பாட்டைக் காட்டினார். அப்படியே வெயிட்டைக் கீழே போட்டுவிட்டு வந்து கோச்சைக் கட்டியணைக்கிறார்.
மீரா: “நீங்க சொல்றது எப்பவுமே கரெக்டுதான் கோச்”
CUT
அதன்பிறகு மீராவுக்கு எல்லாமே ஏறுமுகம்தான். அடுத்த இரண்டு மாதங்களில், அமெரிக்காவில் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஸ்னாட்சில் 85 கிலோ தூக்கியவர், கிளீன் & ஜெர்க்கில் தன்னுடைய பெஸ்ட்டாக 109 கிலோ தூக்குகிறார். தங்கமும் வெல்கிறார். மீராபாய் சானு கொண்டாடப்படுகிறார்.
2018 குடியரசு தினத்தில் மீராவுக்கு உயரிய பத்மஶ்ரீ விருது கொடுக்கப்படுகிறது. மொத்த மணிப்பூரும் மீராவைக் கொண்டாடுகிறது. பாட்டியாலாவில் மீராவைக் கிண்டல் செய்தவர்கள்கூட இப்போது அந்த மணிப்பூர் மங்கையின் புகழ் பாடத் தொடங்கியிருந்தார்கள். ஆனால், மீரா கொஞ்சம் கூட சலனப்படவில்லை. அவரது தீவிரமான பயிற்சி தொடர்ந்துகொண்டே இருந்தது.
ஏப்ரல் 2018. காமன்வெல்த் கேம்ஸ் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடக்கிறது. கடந்த முறை வாங்கிய வெள்ளி, இம்முறை தங்கமாக மாறுகிறது. ஆனால், இரண்டு பிரிவுகளிலும் தன்னுடைய சிறப்பான செயல்பாட்டை ( 86, 110) கொடுத்ததில்தான் திருப்தி கொள்கிறார் மீரா.
2019-ம் ஆண்டு முதுகு வலியால் அவதிப்படுகிறார் மீரா. அதனால், அவரால் கன்சிஸ்டென்ட்டாக செயல்பட முடியவில்லை. ஒரு தொடரில் 199 கிலோ தூக்கி அமர்க்களப்படுத்தினால், அடுத்த தொடரில் அது 191 ஆகிவிடும். திடீரென 201 கிலோ தூக்கி பிரமிக்கவைப்பார். அந்த ஆண்டு முழுவதும் அது தொடர்ந்துகொண்டே இருந்தது.
2020-ல் கொரோனாவால் லாக்டெளன் ஏற்பட அது பெரும் பிரச்னையாக அமைந்தது. முதுகு வலியில் இருந்து மீண்டிருந்தாலும், சரியாக பயிற்சி எடுக்க முடியாமல் போனது. இருந்தாலும் போட்டிகளில் பங்கேற்றார். தேசிய சாம்பியன்ஷிப்பில் 88, 115 என 203 கிலோ தூக்கி தன்னுடைய தேசிய சாதனையை மீண்டும் ஒரு முறை முறியடித்தார். அடுத்த சில நாள்களில் ஆசிய சாம்பியன்ஷிப்பில் 205 கிலோ தூக்கி, அதை மீண்டும் முறியடித்தார். கிளீன் & ஜெர்க்கில் 119 கிலோ தூக்கி உலக சாதனையும் படைக்கிறார். அவரது அசுர வளர்ச்சி தொடர்ந்துகொண்டே இருந்தது.
லாக்டெளன் காலகட்டத்தில் பயிற்சி எடுப்பதில் பிரச்னை ஏற்பட்டதாலும், தோள்பட்டையில் கொஞ்சம் சிக்கல் இருந்ததாலும், பயிற்சிக்கு அமெரிக்க செல்ல முடிவெடுத்தனர். அங்கே Strength & Conditioning பயிற்சியாளர் ஆரோன் ஹார்ஷிக் உடன் பயிற்சி செய்தார் மீரா. பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு நம்பிக்கையோடு டோக்கியோவுக்கு விமானம் ஏறினார்.
CUT
டோக்கியோ... தொடக்கவிழா முடிந்து, ஞாயிற்றுக்கிழமை போட்டிகள் தொடங்கியது. மீராவுக்கு முதல் நாளே போட்டி. ஆனால், மிகவும் கூலாக இருக்கிறார் அவர்.
விக்ரம் ரத்தோர்: “டென்ஷன் இல்லையே”
மீரா: “நான்லாம் கூலா இருக்கேன் கோச். நீங்க ரிலாக்ஸா இருங்க. பாத்துக்கலாம்”
என்று சொல்லி அவரைத் தட்டிக்கொடுக்கிறார். விக்ரம் ரத்தோர் சிரித்துக்கொள்கிறார். சில நிமிடங்களில் போட்டி தொடங்குகிறது. ஸ்னாட்ச்சில் 87 கிலோ எடை தூக்கி முதலிடத்துக்குப் போகிறார் மீரா. ஆனால், சீன்சாவின் ஹு ஜீஹுய் 88 கிலோ தூக்க, இரண்டாம் இடத்துக்கு தள்ளப்படுகிறார். தன் கடைசி வாய்ப்பில் 89 கிலோ தூக்க முயற்சித்து தவறவிடுகிறார் மீரா. ஹூ 94 கிலோ வரை தூக்கிவிடுகிறார்.
அடுத்து கிளீன் & ஜெர்க். மீராவின் கோட்டை. 90 கிலோவில் ஆரம்பிக்கப்பட்ட போட்டி கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது. 103 கிலோ முடிந்தபோது, பங்கேற்ற 14 வீராங்கனைகளில் 11 பேர் தங்களின் அத்தனை வாய்ப்புகளையும் முடித்திருந்தனர். 119 கிலோ தூக்கியவரான மீரா அதுவரை களம்புகவே இல்லை. அந்த 11 பேரில் முதலிடத்தில் இருந்த வீராங்கனை தூக்கிய எடை 181 கிலோ தான். ஆக, தன் முதல் வாய்ப்பை சரியாகத் தூக்கினாலே மீராவுக்குப் பதக்கம் உறுதி.
இந்தோனேஷிய வீராங்கனை 110 கிலோ தூக்கிவிட, அடுத்ததாக உள்நுழைகிறார் மீரா. தூக்கிவிட்டாலே வெள்ளி நிச்சயம் என்ற நிலையில் அலேக்காக வெயிட்டைத் தூக்கி அசால்டாக நிற்கிறார். வெள்ளிப் பதக்கம் உறுதியாகிவிட்டது!!
விக்ரம் ரத்தோர் மனதுக்குள் துள்ளிக் குதிக்கிறார். அவரால் நிற்க முடியவில்லை. கீழே வரும் மீராவைத் தட்டிக் கொடுக்கிறார்.
விக்ரம் ரத்தோர்: “ஒலிம்பிக் மெடல் ஜெயிச்சிட்ட மீரா”
சிரித்துவிட்டு உள்ளே செல்கிறார் மீரா. போகும்போது...
மீரா: “என்னோட பெஸ்டை இன்னைக்குக் கொடுக்கணும் கோச்”
தன் இரண்டாவது வாய்ப்பில் 114 கிலோ தூக்குகிறார் ஹூ. மீரா 115 தூக்குகிறார். அடுத்த வாய்ப்பில் 115 கிலோ தூக்கி ஒலிம்பிக் சாதனை படைக்கிறார். ஸ்னாட்ச்சில் 7 கிலோ வித்யாசம் என்பதால், மீரா 123 கிலோ தூக்கினால் மட்டுமே அவரை முந்த முடியும். ஆனால், 119 தான் அவர் பெஸ்ட். அதனால், தங்கத்துக்கு முயற்சிக்காமல், கிளீன் & ஜெர்க்கில் ஒலிம்பிக் சாதனை படைக்கும் நோக்கில் 117 கிலோ தூக்க வந்தார். ஆனால், அவரால் சரியாக தூக்க முடியவில்லை. இருந்தாலும் புன்னைகையோடு அனைவருக்கும் நன்றி கூறி கீழே இறங்கினார்.
CUT
பரிசளிப்பு விழா... வெற்றியாளர்கள் மூவரும் போடியம் ஏறி நிற்கிறார்கள். தனக்கு வழங்கப்பட்ட வெள்ளிப் பதக்கத்தை கழுத்தில் மாட்டி நிற்கிறார் மீரா. அடுத்ததாக, மூன்று தேசத்தின் கொடிகளும் ஏற்றப்படுகின்றன. அதில் இந்தியக் கொடியும் ஏற்றப்படுகிறது. அப்போது பெருமை நிறைந்த மீராவின் முகம் காட்டப்படுகிறது.
Zoom Out செய்தால், அது டிவிக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. அதை மீராவின் பெற்றோர், பக்கத்து வீட்டினர் என பலரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். சில மீடியாக்காரர்களும் இருக்கிறார்கள். அதில் ஒரு கேமராமேன் தாம்பியன் முகத்தை ஃபோகஸ் செய்கிறார். கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. அருகில் நிற்கும் தன் கணவனைப் பார்த்து சொல்கிறாள், “நம்ம தங்கம் ஜெயிச்சிடுச்சு”.
முற்றும்!
source https://sports.vikatan.com/olympics/last-episode-of-mirabai-chanu-mini-series
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக