இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல! - ஆசிரியர்
`பிரபஞ்சம் எல்லா உயிர்களுக்குமானது!’
இந்தப் பிரபஞ்சத்தை சிதைக்காமல் பாதுகாக்க வேண்டுமென்பதற்காகத்தான் இயற்கை, மனிதனை அறிவு மிக்கவனாகப் படைத்தது. பாதுகாப்பு அரணாக நின்று இயற்கையோடு வாழ்ந்துகொண்டிருந்த மனிதன், அதைச் சுரண்டத் தொடங்கியதுதான் உலகில் எல்லா வன்முறைகளுக்குமான ஆரம்பம். நம்மையறியாமலேயே நாம் நுகர்வின் மீது பேரார்வம் கொண்டவர்களாக மாறிப்போயிருக்கிறோம். நுகர்வு வெறி, நம்மை சுயநலமிக்கவர்களாக மாற்றி சமூகத்தின் மீதான அவதானங்களும் அக்கறைகளும் அற்றவர்களாக மாற்றிவிட்டது. சுயநலமிக்க இந்த சமூகத்திலிருந்து விலகி, எந்த வெளிச்சத்தியும் பொருட்படுத்தாமல் மக்களுக்காக ஏதோவொரு வகையில் களத்தில் நின்றுகொண்டிருப்பவர்களையும், எளிய மனிதர்களாகயிருந்து பெரும் போராட்டங்களைக் கடந்து மேலே வந்தவர்களையும் அடையாளப்படுத்தவிருக்கும் தொடர் இது.
பெருந்தொற்றால் இரண்டு வருடங்களில் நமக்கு நெருக்கமான எத்தனையோ பேரை நாம் இழந்திருப்போம். நமது வாழ்க்கைமுறை முற்றிலும் மாறிப்போயிருக்கிறது. நம்பிக்கையின்மை தீராத நோயைப்போல் நம்மைத் துரத்திக்கொண்டிருக்கும் இந்த வேளையில் நம்பிக்கையை விதைக்கும் மனிதர்களை அறிந்துகொள்வது அவசியமானது. வேலை பார்ப்பது, பொருள் சேர்ப்பது இவற்றுக்கெல்லாம் அப்பால் இந்த வாழ்க்கையை முழுமையாக வாழ சிறந்ததொரு வழி உண்டு. அது கொஞ்சமே கொஞ்சமாக சமூகத்தை உற்றுநோக்குவது.
லஷ்மி சரவணக்குமார், ஆசிரியர்
பிழைப்புக்காக ஏராளமான வேலைகளைப் பார்க்க நேர்ந்ததும், நாடோடியாக வெவ்வேறு ஊர்களில் அலைந்ததும் இவரின் எழுத்துக்கான விதை. 19 வயதிலிருந்து எழுதிக்கொண்டிருப்பவர். இதுவரை எட்டு சிறுகதை நூல்கள், ஐந்து நாவல்கள், கவிதை நூல், கட்டுரைத் தொகுப்புகள் என பதினேழு நூல்கள் வெளியாகியுள்ளன. தனது சிறுகதைகளாலும் நாவல்களாலும் தனக்கென ஏராளமான வாசகர்களைக்கொண்டிருக்கும் லஷ்மி சரவணகுமார் எழுதிய முதல் தொடர் ஜூனியர் விகடனில் வெளியான `ரெண்டாம் ஆட்டம்.’ இந்தத் தொடர் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது, ஆனந்த விகடன் விருது, இலக்கியச் சிந்தனை விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கிறார். தற்போது `இந்தியன் 2’, `பொன்மகள் வந்தாள்’ உட்பட சில படங்களில் வசனகர்த்தாவாகப் பணிபுரிகிறார். விரைவில் முழு நீளப்படமொன்றை இயக்கவிருக்கிறார்.
சென்னைப் பெருவெள்ள காலத்தின் மீட்புப் பணிகளின்போதுதான் முதன்முறையாக ஆன்மனைச் சந்தித்த ஞாபகம். அதன் பிறகு இலக்கியக் கூட்டங்களில் அவரைப் பார்த்ததைவிடவும் போராட்டக் களங்களிலும், மக்கள் பணிகளிலும்தான் அவரை அதிகம் பார்த்திருக்கிறேன். பரமக்குடியில் ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்த ஆன்மனின் தந்தைக்குச் சொந்தமாக ஓர் அரிசி ஆலை இருந்தது. சிறு வயதிலிருந்தே பள்ளி நேரம் போக, மற்ற நேரங்களில் அரிசி ஆலையைக் கவனித்துக்கொள்வதுதான் அவருக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. தொழிலில் அவருக்கிருந்த ஆர்வத்தை கவனித்த தந்தை, முழுநேரமாக ஆலையைப் பார்த்துக்கொள்வதற்குப் பயிற்றுவிக்க நினைத்தார்.
ஆன்மனின் தாயார், மகன் டிகிரி முடிக்க வேண்டும் என்கிற உறுதியோடு அவரை சென்னைக்கு அனுப்புகிறார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ படித்து முடித்த ஆன்மன் ஊருக்குத் திரும்பாமல் சென்னையிலேயே சிறிய தொழில்களைத் தொடங்குகிறார். பிரவுசிங் சென்டர்கள் பரவலாகிக்கொண்டிருந்த காலகட்டமென்பதால் அவரும் சிறிய அளவில் ஒரு பிரவுசிங் சென்டரைத் தொடங்குகிறார். அந்த சென்டர் சரியாகப் போகாததால், செல்போன் உதிரி பாகங்கள் விற்கும் கடையை அடுத்ததாகத் தொடங்குகிறார். இந்தக் காலகட்டத்தில் தொழிலில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதெல்லாம் அவரைச் சோர்வடையாமல் சந்தோஷமாக வைத்துக்கொண்டது அவருக்கிருந்த வாசிப்பு பழக்கம்தான்.
நல்ல நூல்கள் அடிப்படையில் செய்யக்கூடியது வாசிக்கிறவர்களின் மனதில் சக மனிதனின் மீதான அன்பையும் கரிசனத்தையும் வளர்ப்பதுதான். 12,000 ஏக்கர்களுக்குச் சொந்தக்காரரான லியோ டால்ஸ்டாய் குறிப்பிட்ட ஒரு வயதுக்குப் பிறகு தனது செல்வச் செழிப்பை வெறுத்தார். மரணிப்பதற்கு முன்பாக, தமது மொத்தச் சொத்துகளையும் தன்னிடம் வேலை பார்த்தவர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டார். இதன் காரணமாக டால்ஸ்டாயின் மனைவிக்கு அவரின் மீது ஆழமானதொரு கசப்பு உருவாகியிருந்தது.
சிறுவயது முதலே வாசிப்பின் மீது ஆன்மனுக்கு பேரார்வம் உண்டு. யாரும் வழிகாட்டாமலேயே நூலகத்திலிருந்து லெனினின் நூல்களை எடுத்து வாசித்தவர். அவரின் வழியாக மார்க்ஸைக் கண்டடைகிறார். இடதுசாரி இலக்கியங்கள், தத்துவ நூல்கள் என விரிந்த அவரது வாசிப்பு மெல்ல அம்பேத்கரையும் பெரியாரையும் கண்டடைகிறது. திராவிடமும் இடதுசாரி தத்துவமுமே தன்னை செதுக்கிக்கொள்ள வழிகாட்டியாக இருந்ததென இப்போதும் குறிப்பிடுகிறார்.
வெவ்வேறு தொழில்களைச் செய்துவருகிற நேரத்தில் அப்பாவின் நண்பர் ஒருவர், சொந்த ஊரான பரமக்குடியில் தேங்காய் மட்டையிலிருந்து நாரைப் பிரித்தெடுக்கும் Defibering Unit தொடங்க ஆன்மனின் உதவியை நாடுகிறார். இந்தத் தொழில், பொள்ளாச்சிப் பகுதியில் பிரசித்தம். அவருக்கு உதவுவதற்காக அவரோடு அவ்வப்போது பொள்ளாச்சி சென்று வந்த ஆன்மன் ஒரு கட்டத்துக்குப் பிறகு அதேபோன்றதொரு யூனிட்டை பொள்ளாச்சியில் தொடங்குகிறார். தொழில் நிமித்தம் 2011-ல் பொள்ளாச்சிக்கு இடம்பெயர்கிறார். இதற்கு நடுவில் திருமணம் முடிந்துவிடுகிறது. பொள்ளாச்சிக்கு இடம்பெயர்ந்த பிறகு வார இறுதி நாள்களில் கொங்குப் பகுதியில் நடைபெறும் இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொள்ளத் தொடங்குகிறார். பொள்ளாச்சி இலக்கிய வட்டம், த.மு.எ.க.ச என அவரது வட்டம் விரிவடையத் தொடங்கியபோது அவரது எழுத்தின் வேகமும் அதிகரிக்கிறது. நண்பர்கள் அவரது கவிதைகளைத் தொகுத்து நூலாக்கத் தூண்டியதன் விளைவாக முதல் கவிதை நூலான `லெமூரியா கண்டத்து மீன்கள்' என்னும் கவிதை நூல் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெறுகிறது.
`புனைவுகளைவிடவும் அரசியல் மற்றும் தத்துவ நூல்களை வாசிப்பதில் ஆர்வம் அதிகம்’ எனக் குறிப்பிடுபவர், தற்போது சென்னையிலிருக்கும் ஐஸ் ஹவுஸின் வரலாற்றை மையப்படுத்திய நாவலொன்றை எழுதிவருகிறார். இவரின் கவிதை நூலான `லெமூரியா கண்டத்து மீன்கள்’ வெளிவந்தபோது பெரும் கவனிப்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. சென்னை நகர உருவாக்கத்துக்காக விழுப்புரம், மதுராந்தகம் பகுதிகளிலிருந்து வெவ்வேறு வேலைகளுக்கென அழைத்துவரப்பட்டவர்கள், அந்த வேலைகள் முடிந்த பிறகு முற்றிலுமாக சென்னையைவிட்டுத் துரத்தப்படுகிறார்கள். இன்றைக்கு கூவம் ஆற்றங்கரையோரத்தில் வாழ்ந்த மக்கள், கண்ணகி நகருக்குத் துரத்தியடிக்கப்பட்டது வரை சென்னை நகர் உருவாகக் காரணமான மக்கள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறார்கள் என்கிற மிக முக்கியமான அரசியலைப் பேசவிருக்கும் நாவல் இது.
சென்னைப் பெருவெள்ளத்தின் போதான மீட்புப் பணிகள்தான் தனக்குப் பெரும் தூண்டுதலெனச் சொல்கிறார். மற்ற நேரங்களில் படைப்பாளர்களுக்குள் கருத்து மோதல்களும் முரண்பாடுகளும் இருந்தாலும், மக்கள் பிரச்னைகளுக்காக ஓர் அணியாகத் திரள்வதைப் புரிந்துகொள்கிறார். வெவ்வேறு பகுதிகளில் களப்பணி செய்த இலக்கியவாதிகள் ஒரு குழுவாகத் திரண்டு உதவிப் பொருள்களைச் சேகரித்து அவற்றைச் சரியான முறையில் பாதிக்கப்பட்ட மக்களிடம் சேர்த்தார்கள். `எந்த மலையையும் ஏறிக் கடப்பதற்கு, முதல் படியை வைக்கவேண்டியது அவசியம்’ என்பார்கள். மீட்பு பணிக்காலத்தின் அனுபவங்களும் அப்படித்தான். இந்த அனுபவம் அவருக்கு அடுத்தடுத்த நேரங்களில் கைகொடுக்கிறது.
கேரள வெள்ள காலத்தின்போது தொழில் நிமித்தமாக நீலகிரி மாவட்டத்தில் வசித்துவந்தவர், அருகிலிருந்த வயநாடு மாவட்டத்திலுள்ள கல்பட்டா நகரத்துக்குச் செல்கிறார். அந்த நகரம் மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த வயநாடு மாவட்டமும் வெள்ளத்தால் பேரிழப்புகுள்ளானதைக் கண்டு அதிர்ந்துபோனவர், உடனடியாக தனது நண்பர்களை அலைபேசியின் வழியாக ஒருங்கிணைக்கிறார். கோத்தகிரியில் வசிக்கும் அவருடைய நண்பர் விஜயராஜ் சோழன் அவருக்குப் பக்கபலமாக நிற்க, இனியன், ஷாஜகான், ஒடியன் என மற்ற நண்பர்களும் குழுவில் இணைகிறார்கள். அதன் பிறகு ஒரு மாதகாலம் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல், உலகம் முழுவதிலும் இருக்கும் நண்பர்களின் உதவியோடு அந்தக் குழு பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருள்களைச் சேகரித்து, சரியாக சாலை வசதிகூட இல்லாத ஊர்களுக்கும் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. வயநாடு மாவட்டத்தில் மட்டுமில்லாமல், கேரளாவின் மற்ற மாவட்டங்களுக்கும் உதவிகளை அனுப்பிவைக்கிறார்கள். கேரளாவின் எம்.எல்.ஏ-க்கள், மாவட்ட ஆட்சியர்கள் எனப் பலரும் இவர்களின் அயராத உழைப்பைப் பாராட்டியது அப்போதைய செய்தித்தாள்களில் வெளியானது. அந்தக் காலகட்ட வேலைகள் குறித்து இப்போது கேட்டாலும் ‘அதுல நாம பெருசா ஒண்ணும் செஞ்சுடலைங்க… நிறைய பேர் அதுக்காக ஹார்டு வொர்க் பண்ணினாங்க’ எனப் பொதுவாகத்தான் சொல்கிறார். தனி மனிதனாக எங்கும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாத அவரது குணத்துக்காகவே அவருடிய நண்பர்கள், அவர்மீது பெரும் மதிப்பு கொண்டிருக்கிறார்கள்.
அதன் பின்னர் பண மதிப்பிழப்பு ஆன்மனைச் சிதறடித்தது. குடும்பத்தைச் சிரமமின்றி நடத்துவதற்கு துணையாகயிருந்த தொழில் முற்றாக முடங்கிப்போனது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் உருவான பாதிப்புகளைக் குறித்துச் சொல்லும்போது `மலையேறுகிறவனின் மீது பெரும் பாறை உருண்டு நசுங்கிவிட்டதைப்போலாகிவிட்டது’ என வருத்தத்தோடும் ஆத்திரத்தோடும் குறிப்பிடுகிறார். சிறு தொழில் செய்கிறவர்களின் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை அது. கோவை, திருப்பூர் பகுதிகளில் மட்டுமே ஏராளமானோர் இதனால் பாதிக்கப்பட்டு நொடித்துப்போனார்கள். தன்னிடம் வேலை செய்கிறவர்களுக்குக் கூலி தரவேண்டுமானால் வங்கியிலிருந்து பணம் எடுக்க வேண்டும். ஆன்மனும், அவரைப்போல சிறுதொழில் செய்கிறவர்களும் 4,000 ரூபாய் பணத்துக்காக நாள் முழுக்க வங்கி வாசலில் காத்திருந்த அதேநேரத்தில்தான், பெரு முதலாளிகள் எந்தச் சிரமமும் இல்லாமல் லட்சக்கணக்கான பணத்தை வங்கியில் வாங்கிச் செல்கிறார்கள்.
இதே தொழிலில் இருக்கும் பெரிய நிறுவனங்கள் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சிறிய நிறுவனங்களின் வாடிக்கையாளர்களைத் தங்கள் பக்கமாக இழுத்துக்கொள்கிறார்கள். இந்தப் பேரிடியிலிருந்து எழுந்து வருவதற்கு முன்பாகவே மத்திய அரசு ஜி.எஸ்.டி திட்டத்தையும் கொண்டுவருகிறது. நமது நாட்டின் சரிபாதி மக்கள் சிறிய தொழில் நிறுவனங்களை நம்பிப் பிழைப்பு நடத்தும் முறைசாரா தொழிலாளர்கள்தான். பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.டி-யும் கருணையின்றி அழித்தது இவர்களைத்தான். இந்த பாதிப்புகளில் இருந்தெல்லாம் மீண்டுவர ஐந்து வருடங்கள் பிடித்திருக்கிறதென ஆன்மன் குறிப்பிடுகிறார். தொழில் முடங்கிப்போய் பொருளாதாரரீதியாகக் கடும் நெருக்கடியில் தவித்தபோதும், மக்கள் போராட்டங்களில் கலந்துகொள்வதையும் சமூகப் பணி செய்வதையும் ஒருபோதும் அவர் நிறுத்தவதில்லை.
ஆன்மன், அவரின் குழுவினரிடமிருக்கும் இன்னொரு முக்கியமான குணம் வெளிப்படைத்தன்மை. யார் எவ்வளவு பணம் கொடுக்கிறார்கள், அதை எப்படிச் செலவு செய்திருக்கிறோம் என்பதை உடனுக்குடன் பொதுவெளியில் வைத்துவிடுகிறார்கள். எப்போதுமே மக்களுக்காக வேலை செய்து அவர்களோடு பயணிப்பவர்களின் மீது அதீதமானதொரு ஊடக வெளிச்சம் விழத் தொடங்கும். ஆன்மன் இந்த வெளிச்சங்களிலிருந்து தன்னைத் துண்டித்துக்கொள்வதோடு, மீட்புப் பணிகள் முடிந்தவுடனேயே தன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிடுகிறார். கடந்த தேர்தல் காலத்தில் சில அரசியல் கட்சிகள் அவரை அணுகி தங்கள் கட்சியில் இணைந்துகொள்ளச் சொல்லி கேட்டபோதும், `நான் தனி மனுஷனா இருக்கறப்போ எல்லா தரப்பு ஆட்களும் ஒருங்கிணைவாங்க… ஒரு கட்சி சார்ந்த ஆளா மாறிட்டா இவ்வளவு வேலைகள் செய்ய முடியாமப் போயிடும்’ எனச் சொல்லி மறுத்திருக்கிறார். இடதுசாரி தத்துவத்தின் மீதும் திராவிட இயக்கக் கொள்கைகளின் மீதும் தீவிரப் பிடிப்பிருந்தும் கட்சி சார்ந்த ஒருவராகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் தவிர்த்தது முக்கியமானது.
எந்த நிலையிலும் தன்னைச் சராசரி மனிதர்களிடமிருந்து துண்டித்துக்கொள்வதில்லை. `நானொரு எழுத்துக்காரன்’ என்ற அகங்காரத்தைச் சிறிதும் தலையில் ஏற்றிக்கொள்வதில்லை. பெருந்துயர் காலங்களின் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுபவர், அந்தப் பணிகள் முடிந்தவுடனேயே அதிலிருந்து தன்னை முற்றிலுமாகத் துண்டித்துக்கொள்கிறார். அதைவைத்து மற்றவர்களிடம் தன்னை முன்னிறுத்திக்கொள்வதில்லை. சமூக ஊடகங்களின் வளர்ச்சியில் இரண்டுவிதமான போக்குகளைக் காண முடிகிறது. பொழுதுபோக்குக்காக பொது சேவை செய்வதும், அதை மீடியாக்களில் செய்தியாக்கி தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்வதும் ஒருவிதமான போக்கு, இன்னொரு தரப்பினர் தங்களை எந்தவிதத்திலும் அடையாளப்படுத்திக்கொள்ளாமல் வேலை செய்பவர்கள். ஒரு உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமென்றால் கஜா புயல் மீட்புப் பணிகளின்போது ஒரு பத்திரிக்கையிலிருந்து ஆன்மன் மற்றும் அவரது குழுவினரிடம் பேசியவர்கள், மீட்புப் பணி அனுபவங்களைக் குறித்து பேசச்சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். பதிலுக்கு ஆன்மன், `இப்போ நாங்க என்ன செஞ்சோம்கிறதோ, எங்களைப் பேட்டி எடுக்கறதோ முக்கியமில்லை. இன்னும் நிறைய பகுதிக்கு நிவாரணப் பொருள் போய்ச் சேரலை. அதைப் பத்தி எழுதுங்க. அதுதான் முக்கியம்’ என்று சொல்லிவிட்டு அடுத்த வேலைகளைக் கவனிக்கச் சென்றிருக்கிறார்.
இந்த கொரோனா பேரழிவு தொடங்கி முதல் ஊரடங்கின்போது மொத்த சென்னையும் முடங்கிக்கிடக்க, `நடைபாதையில வாழுற மக்களுக்கு யாரு உணவு குடுப்பா? என்ன வந்தாலும் பாத்துக்கலாம்...’ என நண்பர்களோடு இணைந்து உணவுப் பொட்டலங்களை விநியோகிக்கத் தொடங்கிவிட்டார். அதோடு நிற்காமல், அமைச்சரைச் சந்தித்து அம்மா உணவகங்களைத் திறக்க வேண்டுமென்கிற கோரிக்கையைவைத்து கையோடு திறக்கவும் செய்கிறார்கள். இவர்கள் உணவுப் பொட்டலங்களை விநியோகிக்கத் தொடங்கியதைப் பார்த்து மற்றவர்களும் களத்தில் இறங்க, அப்போதைய ஆளுங்கட்சி `தன்னார்வலர்கள் யாரும் இது போன்று உணவுப் பொட்டலங்களை வழங்கக் கூடாது’ என உத்தரவைக் கொண்டுவருகிறது. அப்போதைய எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்தத் தடையை நீக்கச் செய்தது. பொதுமக்களுக்கு உணவும், காவலுக்கு நிற்கும் காவலர்களுக்கு தண்ணீர் போத்தல்களும் வழங்கியதோடு நிற்காமல், கேளம்பாக்கத்திலுள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமுக்குச் செல்கிறார்கள். அந்த முகாமிலிருக்கும் நூறு பேருக்கு இன்று வரையிலும் வழ்வாதாரத்துக்குத் தேவையான அடிப்படைப் பொருள்களை விநியோகித்துவருகிறார்கள்.
இவற்றையெல்லாம் தாண்டி பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையையும் தனது நண்பர்களின் மூலமாக ஒவ்வொரு வருடமும் ஏற்பாடு செய்து கொடுத்துக்கொண்டிருக்கிறார். அவரது இத்தனை வேலைகளுக்கும் முகம் சுளிக்காமல் அவரது குடும்பத்தினர் உறுதுணையாக இருக்கிறார்கள். நண்பர்கள், குடும்பத்தினர் என எல்லோருமே ஒரு மனிதனை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கான காரணம், அவர் யாரிடமும் ஈகோ பார்ப்பதில்லை என்பதுதான். எந்த அகங்காரங்களுமில்லாமல் ஒரு சாதாரண மனிதனாக எப்படித் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க முடிகிறதென ஆன்மனிடம் கேட்டால், ‘பேரிடர் காலங்களின் துயரங்களை ரத்தமும் சதையுமாகப் பார்த்துவிட்டால் அகங்காரம் சுக்குநூறாக நொறுங்கிப் போகும்’ எனச் சொல்கிறார்.
`மனிதன் யாராக இருந்தாலும் சரி, எப்படிப்பட்டவனாக இருந்தாலும் சரி... மனிதன்மேல் எனக்கு அன்பு வளர்ந்தோங்கியது. அவனது உழைப்பின்பால் ஒரு மதிப்பும், அவனது அமைதியில்லாத உணர்வின்மீது ஒரு பாசமும் என்னுள் மலர்ச்சிகொண்டன. ஒரு புதிய ஆழ்ந்த பொருளால் நிறைந்து வாழ்க்கை முன்னைவிட சுளுவாகவும் மகிழ்ச்சியாகவும் ஓடத் தொடங்கியது.’ மாக்ஸிம் கார்க்கியின் இந்த வார்த்தைகளுக்கு நெருக்கமான உதாரணமாக நான் நினைப்பது ஆன்மனைத்தான்!
source https://www.vikatan.com/social-affairs/politics/ivargal-series-part-one-on-social-activist-aanman-and-his-social-works
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக