Ad

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

`ஒரே அறிவிப்பில் 1 லட்சம் விவசாய மின் இணைப்புகள்; இதுதான் முதல் முறை!' - நெகிழும் விவசாயிகள்

தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியினைப் பெருக்கி, விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் வகையில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று நடைபெற்ற மின்சாரத்துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி இதனை தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. தமிழக விவசாயிகளின் வரலாற்றில் ஒரே அறிவிப்பில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுவது இதுதான் முதல் முறை என்றும் இதற்கு பசுமை விகடனின் பங்களிப்பும் மிக முக்கியமானது என நெகிழ்ச்சி தெரிவிக்கிறார் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் துணைச் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன்.

விவசய மின் இணைப்பு

Also Read: மின் இணைப்புக்காக காத்திருக்கும் 4.23 லட்சம் விவசாயிகள்; நாளையேனும் அறிவிப்பு வருமா?

இதுகுறித்து நம்மிடம் மிகுந்த உற்சாகத்தோடு பேசிய அவர், ``விவசாய மின் இணைப்புக்காக பதிவு செய்து, 2003-ம் ஆண்டிலிருந்து 4.23 லட்சம் விவசாயிகள் தமிழ்நாட்டில் காத்திருக்கிறார்கள். இது கிடைக்காததால் விவசாயிகள் சந்தித்து வரும் இடர்பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. நிலத்தடி நீரை அதிகம் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் பெரும் வேதனையைச் சந்தித்து வருகிறார்கள். இது தொடர்பாக தமிழக அரசை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம். குறிப்பாக தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக, தமிழக அரசின் சார்பில் தஞ்சையிலும் சென்னையிலும் நடத்தப்பட்ட விவசாயிகள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் இது குறித்து வலியுறுத்தினோம்.

ஆனால் வேளாண் பட்ஜெட் அறிவிப்பில், விவசாய மின் இணைப்பு வழங்கப்படுவது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படாததால், விவசாயிகள் ஏமாற்றமடைந்தார்கள். இந்நிலையில்தான் தமிழக சட்டமன்றத்தில் மின்சாரத்துறை மானியக் கோரிக்கை நடைபெறும் போது, தமிழக அரசின் கவனத்துக்கு எங்களது கோரிக்கையை கொண்டு செல்ல விரும்பினோம். விவசாயிகளின் நலனுக்காக அக்கறையோடு செயல்பட்டு வரும் பசுமை விகடன் , இக்கோரிக்கையில் உள்ள நியாயத்தையும், அவசியத்தையும், விகடன் இணையதளத்தில் மிகவும் விரிவாகவும் அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் கடந்த 5-ம் தேதி செய்தி வெளியிட்டது. அது பல தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்ததோடு, ஆட்சியாளர்களின் கவனத்துக்கும் சென்றது. அந்தச் செய்தியை பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷணனின் கவனத்துக்கு கொண்டு சென்று, இது தொடர்பாக தமிழக ஆட்சியாளர்களிடம் வலியுறுத்துமாறு கோரிக்கை வைத்தோம். இந்நிலையில்தான் தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற மின்சாரத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, இந்த இனிப்பான அறிவிப்பை, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ளார்.

சுந்தர விமலநாதன்

பசுமை விகடனுக்கும், பாபாநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவஹிருல்லா மற்றும் சி.பி.எம் கட்சியின் கே. பாலகிருஷ்ணனுக்கும் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக, விவசாயிகளின் நலனில் உண்மையான அக்கறை கொண்டு, இதற்கு நடவடிக்கை எடுத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக விவசாயிகளின் வரலாற்றில் ஒரே அறிவிப்பில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுவது இதுதான் முதல் முறை. இந்த வரலாற்றுச் சாதனையைப் புரிந்த தமிழக முதல்வரை, டெல்டா விவசாயிகளின் சார்பில் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க இருக்கிறோம்’’ என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/agriculture/farmers-thanked-tn-govt-for-announcing-1-lakh-electricity-connection-for-agriculture

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக