Ad

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வாகனச் சந்தையில் மைல்கல்லாக அமையுமா..?

கடந்த ஜூலை 2-ம் தேதியன்று, ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் ஓலா ஸ்கூட்டரை பெங்களூரில் டெஸ்ட் டிரைவ் வீடியோ வெளியானது. இதைத் தொடர்ந்து ஜூலை 15-ம் தேதியன்று ரூ.499 செலுத்தி முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து சுமார் ரூ.499 செலுத்தி ஓலா ஸ்கூட்டர் வாங்குவதற்காக 1,00,000 முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. ஆரம்பத்திலேயே பெரும் பரபரப்பை உருவாக்கியிருக்கும் ஓலா ஸ்கூட்டர் எதிர்காலத்தில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றிப் பலரும் பலவிதங்களில் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அது ஒருபக்கமிருக்க, ஓலா நிறுவனம் தன்னுடைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி அளிக்கும் விவரங்களைப் பார்ப்போம்.

ஓலா ஸ்கூட்டர் எப்படி இருக்கும்?

* இந்த ஸ்கூட்டரை வீட்டிலேயே 5A சாக்கெட்களிலேயே சார்ஜ் செய்துகொள்ளலாம். அத்துடன், ஓலா எலெக்ட்ரிக் சார்ஜிங் நெட்வொர்க் மூலமாகவும் சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்தக் கட்டமைப்பு தற்போது இந்தியா முழுக்க 100 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த வாகனத்தை விரும்ப இது ஒரு முக்கியமான காரணமாகும். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாடு பெரிய அளவில் வராமல் போகக் காரணம், சார்ஜிங் வசதிகள் அதிகம் இல்லை என்பதே.

* ஓலா ஸ்கூட்டர் இரண்டு வேரியன்ட்டுகளில் (S1 and S1 Pro), 10 நிறங்களில் வருகிறது. S1 வேரியன்டின் விலை 99,999 ரூபாய். S1 Pro வேரியன்டின் விலை 1,29,999 ரூபாய்.

* இந்த ஸ்கூட்டர் 150 கி.மீ வரை பயணிப்பதற்கு ஏதுவான தாக இருப்பதுடன், டச் ஸ்க்ரீன், நேவிகேஷன் போன்ற தொழில்நுட்ப வசதிகளும் இடம்பெறும். மேலும், அதிகபட்ச வேகமாக மணிக்கு 115 கி.மீ வரை பயணிக்க முடியும்.

* இதை முழுவதுமாக சார்ஜ் செய்வதற்கு சுமார் 4.48 மணி நேரம் முதல் 6.30 மணிநேரம் வரை ஆகும். ஹைபர்சார்ஜ் மூலம் குறைந்த நேரத்தில் வேகமாக சார்ஜ் செய்துகொள்வதற் கான கட்டமைப்புகளை உருவாக்கும் திட்டமும் இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. அந்தத் திட்டத்தின்படி, 400 நகரங்களில் சுமார் ஒரு லட்சம் ஹைபர் சார்ஜிங் ஸ்டேஷன்கள் எதிர்காலத்தில் அமைக்கப்படும். இதன்மூலம், 75 கி.மீ பயணிப்பதற்கு 18 நிமிடங்கள் மட்டுமே சார்ஜ் செய்தால் போதுமானது.

வரவேற்பு எப்படி?

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துவருவதால், இனி எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்கிற ரீதியில் மத்திய அரசாங்கம் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறது. நம் நாட்டில் பெட்ரோல் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது, பொதுமக்கள் கவனத்தை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மீது திருப்பி யுள்ளது.

அது மட்டுமன்றி, சில சுற்றுச் சூழல் காரணங்களாலும் இ-ஸ்கூட்டர்கள் நம் நாட்டில் அதிக வரவேற்பைப் பெறத் தொடங்கியுள்ளன. உலகின் அதிக மாசடைந்த 30 நகரங்களில் 22 நகரங்கள் நம் நாட்டில்தான் உள்ளன. அத்துடன் அதிக கரிமத்தை வெளியிடும் மூன்றாவது நாடாகவும் இந்தியா உள்ளது. நம் நாட்டில் இருசக்கர வாகனங்களுக்கான சந்தை உலக அளவில் பெரிது. ஆகவே, இங்கு இருசக்கர வாகன பயன்பாட்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மாறுவது, நாட்டின் மொத்த கரிம வெளியீட்டில் மிகப் பெரிய அளவில் நேர்மறையான தாக்கங்களைக் கொண்டுவரும். தற்போது நாட்டின் மொத்த இருசக்கர வாகன விற்பனையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் 1% மட்டுமே பங்கு வகிக்கிறது. 2020-ம் ஆண்டில் இந்தியா முழுக்க வெறும் 1,50,000 எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களே விற்பனையாகின. ஆனால், இந்தக் கணக்கு 2025-ம் ஆண்டில் 10 லட்சத்தைத் தாண்டும் என்கிறார்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்ட ஏதெர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் இந்தத் துறையில் தற்போது முன்னிலையில் உள்ளது. அத்துடன், ஹோண்டா, யமஹா, சுஸூகி போன்ற சர்வதேச நிறுவனங்கள் தங்கள் எலெக்ட்ரிக் வாகனங் களை விரைவில் களமிறக்கப்போகின்றன. எனவே, ஓலாவுக்குப் போட்டிக்குப் பஞ்சமிருக்காது. அதேநேரம், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி, மோட்டார் மற்றும் இதர எலெக்ட்ரிக் பாகங்கள் போன்ற பல உதிரி பாகங்கள், குறிப்பாக லிதியம் ஐயான் பேட்டரிகள், பெருமளவில் சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. உள்ளூர் அளவில் பேட்டரி உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கியிருந்தாலும், பெருமளவு சீன இறக்குதி பேட்டரிகளையே தற்போது இந்திய எலெக்ட்ரிக் வாகன உற்பத்தித்துறை சார்ந்துள்ளது.

விரைவில் கர்நாடகாவில் எலெக்ட்ரிக் வாகன பேட்டரி உற்பத்தி ஆலை தொடங்கப்படவுள்ளது. அதேபோல், இன்னும் பல நிறுவனங்கள் இதில் களமிறங்கவுள்ளன. 2012-ம் ஆண்டு இருந்ததைவிட 2020-ம் ஆண்டில் பேட்டரியின் விலை குறைந்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியின் மூலம் இது இன்னும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற வர்த்தக நிறுவனங்கள், எலெக்ட்ரிக் வாகனங்களையே முழுதாகப் பயன்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளன. டோமினோஸ் நிறுவனமும் பெட்ரோல் வாகனங்களை மாற்றிவிட்டு, எலெக்ட்ரிக் பைக்குகளை வாங்கத் திட்டமிட்டுள்ளது. இது இந்திய சந்தையில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.

கவலை தரும் விஷயங்கள்...

இருப்பினும், இ-ஸ்கூட்டர்கள் இந்தியச் சந்தையில் அவ்வளவு சீக்கிரத்தில் மிகப் பெரிய இடத்தைப் பிடித்துவிடாது என்பதற்கு பல காரணங்களைச் சொல்கிறார்கள் நிபுணர்கள். எலெக்ட்ரிக் வாகனங் களை சார்ஜ் செய்வது அவ்வளவு எளிதல்ல. வீட்டில் ஆறு முதல் ஏழு மணி நேரம் சாவகாசமாக சார்ஜ் செய்யும்போது, பேட்டரியின் ஆயுள் அதிகமாக இருக்கும். ஆனால், சார்ஜிங் ஸ்டேஷன்களில் வாகனத்தை மிகக் குறுகிய நேரத்தில் சார்ஜ் செய்தால், பேட்டரியின் ஆயுள் குறையலாம்.

பேட்டரிகளின் ஆயுள் அதிகபட்ச மாக 4 ஆண்டுகள் என்று சொல்லப் பட்டாலும், அதைவிட சீக்கிரமாகவே பேட்டரியை மாற்ற வேண்டியிருக்கும் என்கிறார்கள். பேட்டரியை மாற்ற சுமார் ரூ.35,000 செலவாகலாமாம். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வாகனத்தில் செல்லும்போது வண்டி யின் சார்ஜ் சீக்கிரமே காலியாகிவிடும் என்பதும் கவலை தரும் விஷயமே.

இந்தப் பிரச்னைகளை எல்லாம் தாண்டியே இ-ஸ்கூட்டர் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர வேண்டும். புதுத் தொழில்நுட்பங்கள் பல சவால்களை சந்தித்துதானே ஆக வேண்டும்..!



source https://www.vikatan.com/business/news/ola-electric-scooter-positive-negative

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக