Ad

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

`எடை மூலம் தானாக தண்ணீர் வெளியேற்றும் கழிப்பறை!' - குறைந்த செலவில் வடிவமைத்திருக்கும் கோவை இளைஞர்

கொரோனா இரண்டு அலைகள் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து கடந்தாலும், மூன்றாவது அலை எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற அச்சம் பரவலாக உள்ளது. சிறிய முயற்சிகளும், அதன் மூலம் கிடைக்கும் நம்பிக்கையும் மட்டுமே நம் கைகளில் இருக்கும் அஸ்திரங்கள். அந்த வகையில் தனது ஒரு கண்டுபிடிப்பு மூலம் நம்பிக்கையளித்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த ஓர் இளைஞர்.

கோவை, சங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இன்டீரியர் டிஸைனராக உள்ளார். இவர் கைகளால் தொடாமலும் சென்சார் இல்லாமலும், நம் எடையின் மூலம் தண்ணீர் வெளியேறும் எளிமையான சிறுநீர் கழிப்பறை ஒன்றை வடிவமைத்துள்ளார்.

சிறுநீர் கழிப்பறை

Also Read: கறுப்பு மிளகில் இருந்து வெள்ளை மிளகு... அசத்தும் கோவை ஸ்டார்ட்அப்! மாத்தி யோசித்து ஜெயித்த நிறுவனம்!

கொரோனா காலகட்டத்தில் மக்கள் பொது இடங்களுக்கு செல்லவே பலமுறை யோசிக்க வேண்டிய சூழல் இருக்கிறது. அப்படியே சென்றாலும், பொது கழிவறைகளைப் பயன்படுத்த பயப்படுகின்றனர். தண்ணீர் குழாய்களைத் திறந்து விட யோசித்து, அப்படியே விட்டுச் செல்கின்றனர். இதனால், கொரோனா வைரஸ் உட்பட பல்வேறு நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது.

சில இடங்களில் சென்சார் கழிப்பறைகள் இருந்தாலும், சாமானிய மக்கள் செல்லும் பெரும்பாலான இடங்களில் பொதுக் கழிப்பறைகளும் கழிப்பறையே இல்லாத நிலையும்தான் நிலவுகிறது. அந்தப் பிரச்னைக்கு தீர்வு கொடுக்கும் முயற்சிதான் முருகேசனின் இந்தக் கண்டுபிடிப்பு.

இதுகுறித்து முருகேசன் கூறுகையில், ``கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் நடுநடுங்க வைத்துக்கொண்டிருக்கிறது. கைகளால் தொடாத எளிய கழிப்பறையைத்தான் உலக நாடுகள் விரும்புகின்றன. சமீபத்தில் நாங்கள் ஒரு மருத்துவமனையில் பணி செய்தோம்.

சிறுநீர் கழிப்பறை

Also Read: `ஆக்ஸிஜன் அளவு குறைந்தால் அலெர்ட் செய்யும்!' - இளைஞர் வடிவமைத்திருக்கும் புதிய கருவி

ஆனால், அந்தக் கழிப்பறையைப் பயன்படுத்த மக்களிடம் தயக்கம் இருப்பதைப் பார்த்தோம். அங்கு சென்சார் கழிப்பறைகள் வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை வேலை செய்வதில்லை. சென்சார் கழிப்பறையின் விலை மற்றும் பராமரிப்பு இரண்டுமே அதிகம். முறையான பராமரிப்பு இல்லாவிடின் அவற்றைப் பயன்படுத்த முடியாது.

நம்நாட்டைப் பொறுத்தவரை, பொது இடங்களில் ஒரு பொருள் முழுவதும் செயலிழந்த பிறகுதான் அதைக் கவனிப்போம்.

இதுபோன்ற ஒரு சூழலில், நான் உருவாக்கியுள்ள கழிப்பறை, சென்சார் கழிப்பறை விலையில் மூன்றில் ஒரு மடங்குதான். தண்ணீர் இருந்தால் போதும். மற்றபடி இதைப் பெரிதாகப் பராமரிக்கத் தேவையில்லை. ஒரு எடைக்கருவி செயல்படுவது போலதான் இதுவும். இந்த இயந்திரம் முழுக்க முழுக்க நம் எடையின் மூலம்தான் செயல்படும்.

முருகேசன்

கழிப்பறை மேடையின் கீழ் தண்ணீர் வெளியேறுவதற்கான வால்வு அமைக்கப்பட்டுள்ளது. அதில் நாம் ஏறி நிற்கும்போது, அழுத்தத்தின் காரணமாக வால்வு அழுத்தப்பட்டு கழிப்பறையில் இருந்து தண்ணீர் வெளியேறும்படி வடிவமைத்துள்ளோம்.

இதனால் நாம் குழாய் எதையும் தொடுவதற்கு அவசியமில்லை. அதுவாகவே சுத்தம் செய்துகொள்ளும். எடையின் அழுத்தம் மூலம் இயங்ககுவதால், வெளியேறும் தண்ணீர் அளவை நாமே கட்டுப்படுத்த முடியும். ஏற்கெனவே உள்ள கழிப்பறைகளில் இந்த மேடை போன்ற அமைப்பை வைத்தால்கூட போதுமானது. அப்படிச் செய்யும்போது நம் பிளம்பிங் லைனை மட்டும் சற்று மாற்றினால் போதும்.

சிறுநீர் கழிப்பறை

கொரோனா காலத்தில் இதுகுறித்து யோசித்துப் பணியில் இறங்கினேன். ஒரு வாரத்தில் இந்த இயந்திரத்தை உருவாக்கினேன். நாங்கள் எதிர்பார்த்தது போலவே இது நன்றாகச் செயல்படுகிறது. ஒரு இயந்திரம் உருவாக்க சராசரியாக ரூ.15,000 செலவாகும்.

முதல்கட்டமாக கோவை மாநகராட்சி நிர்வாகத்துடன் பேசி சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இந்தக் கழிப்பறைகளை அமைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளோம். இது ஆண்களுக்கான கருவி. இதேபோல பெண்களுக்கும் கைகளில் தொட அவசியம் இல்லாத எளிய கழிப்பறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளேன்.

சிறுநீர் கழிப்பறை

Also Read: பேட்டரி சைக்கிள்: 1 யூனிட் சார்ஜ் செய்தால் 50 கி.மீ பயணம்! அசத்தும் விழுப்புரம் இளைஞர்!

காரணம், பொதுக்கழிப்பறைகளால் பெண்களுக்கு எளிதில் நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. விரைவில், அதையும் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துவிடுவேன்” என்றார் நம்பிக்கையுடன்.



source https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-youngster-designed-low-cost-handsfree-urinal-toilet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக