``ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கானி பதவி விலகும் வரை ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்பாது'' என தாலிபன்கள் ஜூலை மாதத்தில் எச்சரித்திருந்தனர். தற்போது அவர்கள் நினைத்ததைப் போலவே பதவி விலகியதோடு மட்டுமல்லாமல், நாட்டை விட்டும் வெளியேறியிருக்கிறார் அஷ்ரஃப் கானி.
Also Read: வெளியேறிய அமெரிக்கா; கால்பதிக்கும் சீனா; தாலிபன்களால் ரத்த பூமியான ஆப்கானிஸ்தான்! - என்ன நடக்கிறது?
இந்த நிலையில், நேற்று (ஆக. 15) ஆப்கன் தலைநகர் காபூலை எந்தவித வன்முறையும் இன்றி எளிதாகக் கைப்பற்றியிருக்கிறார்கள் தாலிபன்கள். ஆப்கன் அதிபர் மாளிகைக்குள்ளும் காலடியெடுத்து வைத்திருக்கிறார்கள். இதையடுத்து, ``ஆப்கன் போர் முடிவுக்கு வந்துவிட்டது'' என அறிவித்திருக்கிறார்கள் தாலிபன்கள். அமெரிக்க ராணுவம் ஆப்கனை விட்டு வெளியேறத் தொடங்கியதிலிருந்தே, அந்த நாட்டின் பல்வேறு மாகாணங்களைக் கைப்பற்றி வந்தது தாலிபன் படை. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 25 மாகாணங்களை தங்கள் வசம் தாலிபன்கள் கொண்டு வந்துவிட்டதாக செய்திகள் வெளிவருகின்றன. அசுர வேகத்தில் மாகாணங்களைக் கைப்பற்றி வந்த தாலிபன்கள், தற்போது ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் தங்கள் வசப்படுத்தியிருக்கின்றனர். இதனால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சி அதிகாரம் தாலிபன்கள் கைக்குத் திரும்பியிருக்கிறது.
நாடு திரும்பும் மக்கள்!
`தாலிபன்கள் வசம் ஆப்கன் போய்விட்டது' என்ற செய்தி வந்ததுமே, உலக நாடுகள் பலவும் விழித்துக் கொண்டன. ஆப்கனிலிருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களை காலி செய்யும் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டன. மேலும், ஆப்கனில் வசித்து வரும் தங்கள் நாட்டு மக்களை அங்கிருந்து வெளியேற்றும் பணிகளையும் தொடங்கியிருக்கின்றன. நேற்று, காபூலிலிருந்து 129 இந்தியர்கள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். இன்றைக்கும் ஆப்கனிலிருக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்காக ஏர் இந்தியா விமானம் காபூலுக்குப் பறந்திருக்கிறது. ஆப்கனிலிருக்கும் அமெரிக்கர்களை மீட்பதற்காக 5,000 ராணுவ வீரர்களை இறக்கியிருக்கிறது அமெரிக்கா. பதற்றமான சூழல் நிலவுவதால் ஆப்கனில் வாழும் வெளிநாட்டவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
பீதியில் ஆப்கன் மக்கள்!
வெளிநாட்டவர்கள் மட்டுமல்லாமல், ஆப்கன் மக்களும் அங்கிருந்து வெளியேறவே நினைக்கின்றனர். தாலிபன்கள் வசம் நாடு சென்றுவிட்டதால், நாட்டை விட்டு வெளியேற முடிவெடுத்து விமான நிலையங்களை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர் ஆப்கன் மக்கள். அது தொடர்பாக வெளியான சில வீடியோ காட்சிகளைப் பார்க்கும்போதே அங்கு நிலவும் பதற்றத்தை நம்மால் உணர முடிகிறது. பேருந்துகளில் ஃபுட் போர்டு அடித்து ஏறுவதுபோல விமானத்தில் ஏற முயற்சி செய்கிறார்கள் நூற்றுக்கணக்கான ஆப்கன் மக்கள். இந்த நிலையில், மக்கள் அதிகம் கூடுவதால், அனைத்து விமான சேவைக்கும் தடை விதித்திருக்கிறது ஆப்கானிஸ்தான். இதனால் இந்தியர்கள் உள்பட மற்ற நாட்டவர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதோடு கூட்டத்தை கலைக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஆப்கன் மக்கள், தாலிபன்களைக் கண்டு ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்..?
2001-ம் ஆண்டுக்கு முன்பு தாலிபன்கள் ஆட்சியிலிருந்தபோது, `இஸ்லாமிக் எமிரேட் ஆஃப் ஆப்கானிஸ்தான்' என்ற பெயரில், தங்களின் ஆட்சியை எதிர்ப்பவர்களைச் சுட்டு வீழ்த்தி வந்தது தாலிபன். பெண்கள் வேலைக்குச் செல்வது, படிக்கச் செல்வதை தாலிபன்கள் அறவே விரும்பாதவர்கள். மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இது போன்று என்னென்ன அடக்குமுறைகள் இருக்குமோ என்கிற அச்சத்தில் ஆப்கன் மக்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சமீபத்தில்கூட இறுக்கமாக ஆடை அணிந்திருந்ததாலும், வெளியே செல்லும்போது ஆண் துணை இல்லாமல் சென்றதாலும் ஒரு பெண்ணை சுட்டு வீழ்த்தியது தாலிபன். இதுபோன்ற தாலிபன்களின் அதிரடி நடவடிக்கைகளைக் கண்டுதான் ஆப்கன் மக்கள் அச்சப்படுகிறார்கள்.
ஆப்கனிலிருந்து வெளியேறி இந்தியாவுக்கு வந்த மாணவர் ஒருவர், ``இனி நான் அங்கு சென்று படிப்பைத் தொடர முடியுமா என்று தெரியவில்லை. ஆப்கன் மக்கள் பலரும் அங்கிருந்து வெளியேறவே ஆசைப்படுகிறார்கள். என் வீட்டுப் பக்கத்திலிருப்பவர்கள் சிலருக்குப் பொருளாதார சிக்கல்கள் இருக்கின்றன. அதனால் டிக்கெட், விசா உள்ளிட்டவற்றிற்குக் காசில்லாமல், என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்'' என்றார்.
பெண்களுக்குப் பாதிப்பு?
தாலிபன்களால் பெண்களுக்குத்தான் அதிக பாதிப்பிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. நேற்று `தாலிபன்கள் காபூல் எல்லையை நெருக்கிவிட்டார்கள்' என்ற செய்தி கிடைத்ததுமே, ஆப்கன் மக்கள் பதற்றத்துடன் ஒரு வேலையைச் செய்யத் தொடங்கினர். காபூலிலிருக்கும் கடைகளின் வெளியே பெண் மாடல்கள் கொண்டு வைக்கப்பட்டிருக்கும் பெயர்ப் பலகைகளிலும், விளம்பரங்களிலும் பெண்களின் படங்களை பெயிண்ட் அடித்து மறைக்கத் தொடங்கினர். பெண்களின் புகைப்படங்களை வைத்து கடைக்கு விளம்பரம் செய்திருப்பதால், கடை சூறையாடப்படுவதோடு, உயிரும் போய்விடுமென்கிற அச்சத்தில் இந்த வேலையைச் செய்திருக்கிறார்கள் காபூல் மக்கள்.
Also Read: யார் இந்த தாலிபன்கள், அமெரிக்கா ஏன் பின்வாங்கியது, ஆப்கானிஸ்தானில் நடப்பது என்ன? - 1
ஆப்கன் பெண்கள் பலரும், `இனி பிடித்த ஆடைகளை உடுத்த முடியாது; நினைத்தபடி படிக்க முடியாது; ஆசைப்படும் வேலைக்குச் செல்லமுடியாது' என காபூல் விமான நிலையத்தில் நின்று கொண்டு கதறி அழுததாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
ஆப்கனிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிவந்த பெண் ஒருவர் அழுதுகொண்டே, ``தாலிபன்களால் ஆப்கன் எந்த நிலைக்குப் போகப் போகிறதென்றே தெரியவில்லை. பெண்களின் சுதந்திரம் பறிபோய்விடும். என் நண்பர்கள் பலரும் கொல்லப்படப் போகிறார்கள்'' என்று ஊடகங்களிடம் வேதனையோடு பேட்டியளித்திருந்தார்.
இதுகுறித்து அரசியல் வல்லுநர்கள் சிலர், ``ஆப்கனின் நிலை மோசமாக இருக்கிறது. அங்கிருக்கும் பெண்கள் அச்சத்தில் இருக்கின்றனர். சட்டதிட்டங்களில் என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறதோ என்கிற பயத்தில் ஆப்கன் மக்கள் இருக்கின்றனர். ஆப்கன் மக்களில் சிலர் தாலிபன்கள் பக்கம் நின்றாலும், பெரும்பாலானவர்கள் தாலிபன்களின் ஆட்சி வருவதை விரும்பவில்லை. ஆப்கானிஸ்தானிலிருக்கும் பல்கலைக்கழகங்கள், நூலகங்களின் நிலை இனி என்னவாகும் என்றே தெரியவில்லை. இனி சினிமாக்கள், திரையரங்குகளின் நிலைகூட கேள்விக்குறிதான். எந்தவித பொழுதுபோக்கும் இல்லாமல், கடுமையான சட்டங்களுக்கிடையே மக்கள் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காலத்துக்கு ஏற்ப தாலிபன்கள் தங்களை மாற்றிக் கொண்டு, ஓரளவுக்கு நல்லாட்சி கொடுக்க முயற்சி செய்வார்களா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்'' என்கிறார்கள்.
ஆப்கனின் அடுத்த அதிபராக, தாலிபன் அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவரான முல்லா அப்துல் கானி பராதார் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கனின் இடைக்கால அதிபராக முன்னாள் அமைச்சர் அலி முகமது ஜலாலி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அமைதியான ஆட்சி தருவோம்!
இந்த நிலையில், ``அச்சப்பட வேண்டாம். யாரையும் கொல்லமாட்டோம். நாங்கள் மக்கள் சேவகர்கள். அமைதியான ஆட்சியை ஆப்கன் மக்களுக்கு நிச்சயம் தருவோம்'' என்று சொல்லியிருக்கிறது தாலிபன்.
ஆப்கானிஸ்தானில் பதற்றம் குறைந்து, ஜனநாயக முறையில் அமைதியான ஆட்சி நடைபெற வேண்டுமென்பதுதான் ஆப்கன் மக்களின் விருப்பம். நம் அனைவரது விருப்பமும் அதுதான்!
source https://www.vikatan.com/government-and-politics/international/what-afghan-people-think-about-afghanistan-captured-by-talibans
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக