இறப்பைத் தாண்டிய காதல், முரணான வாழ்க்கை முறையைத் தாண்டி வரும் காதல், ரயில் பயணத்தில் பார்த்தவுடன் வரும் காதல், பதின்பருவம் முதலே நட்புடன் ஒளிந்திருக்கும் காதல், தன்பால் ஈர்ப்பாளர்களின் காதல், விவாகரத்துக்குப் பின் மற்றொருவரின் மேல் வரும் காதல், விவாகரத்துக்குப் பின் பிரிந்த கணவர் மீதே வரும் காதல் என இந்தத் தொடரில் பல்வேறு இலக்கணங்களை உடைத்து வரும் காதல்கள் கடும் வெயில் அடிக்கும் சென்னையில் திடீரென பெய்த மழைபோல நம்மை நனைக்கின்றன.
'தி நியூயார்க் டைம்ஸ்' இதழில் வெளிவரும் 'மாடர்ன் லவ்' என்ற கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் வெப் சீரிஸின் இரண்டாவது சீசன் இது. சாமானியர்களான வாசகர்கள் தங்களின் காதல் கதைகளைப் பகிர்ந்துகொள்ளும் தளம் இது. அதில் கொஞ்சம் கற்பனையையும் சினிமாத்தனத்தையும் சேர்த்து ஆந்தாலஜியாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் ஜான் கார்னி.
2019-ல் முதல் சீசன் வந்தபோது அமேசான் ப்ரைமின் முக்கியமான ஒரிஜினல்களில் ஒன்றாக அனைவரையும் ஈர்த்தது 'மாடர்ன் லவ்' சீசன் 1. தேவ் பட்டேல், ஆனி ஹாதவே, ஒலிவியா குக், ஆன்ட்ரூ ஸ்கார் எனப் பல ஸ்டார்கள் அந்த முதல் சீசனில் முக்கிய கதாபாத்திரங்களாக வந்து போயினர். இந்த இரண்டாவது சீசனிலும் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' புகழ் கிட் ஹாரிங்டன், சூசன் பிளாக்வெல், லூசி பாய்ன்டன், மிராண்டா ரிச்சர்ட்சன் எனச் சில தெரிந்த முகங்கள் எட்டிப் பார்க்கின்றன. ஆனால், அந்த முதல் சீசனின் மேஜிக் இந்த முறையும் கைகூடி வந்திருக்கிறதா?
#NotAReview #SpoilerAlert
On a Serpentine Road, With the Top Down
இறந்தவர்களின் நினைவாய் நம்மிடம் இருக்கும் சில பொருள்கள் அவர்களின் நினைவுகளோடு 'நிஜமாய்' நம்மை உரையாட வைக்கும். அவர்கள் அணிந்த ஸ்வெட்டர், ஓட்டிய கார், வாழ்ந்த வீடு என ஏதோ ஒன்றை நாம் உரசிப் பார்க்கையில், கடந்து போகையில் அவர்களின் ஆன்மா நம்மோடு உரையாடும்.
40 வயதைக் கடந்துவிட்ட ஒரு நீல வண்ண 'தி ஸ்டேக்' வகை ஸ்போர்ட்ஸ் கார்; குடும்பத்தில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டும் அதை விற்க ஸ்டெஃபனிக்கு மனம் வரவில்லை. காரணம், ஒவ்வொரு முறை அந்தக் காரில் அவள் பயணிக்கையில் இறந்துபோன தன் முதல் கணவனுடன் சேர்ந்தே பயணிக்கிறாள். அந்தக் காரில் அவர் இன்னும் வாழ்கிறார், அவளுக்காக!
இது தவறா என தன் இரண்டாவது கணவனிடம் கேட்கிறாள் ஸ்டெஃப்னி. தன் அம்மாவின் நினைவாக டீ கப் ஒன்றை இன்னமும் பத்திரமாக வைத்திருப்பதாகக் கூறுகிறான் கணவன். அம்மா, அப்பா என நெருங்கிய உறவுகளின் நினைவுகளைப் பத்திரப்படுத்தி வைப்பது எப்படி இயல்போ அதைப்போலத்தான் முதல் கணவனின் நினைவை வைத்திருப்பதும் என்று விளக்கம் அளிக்கிறான் அந்த இரண்டாவது கணவன். திருமண வாழ்வைப் பொறுத்தவரை இரண்டு முறையும் தான் அதிர்ஷ்டசாலி என்கிறாள் ஸ்டெஃபனி.
நம் கண்களைக் குளமாக்கி, இரண்டாவது சீசனின் ஆகச்சிறந்த எபிசோடாக நிற்கிறது ஸ்டெஃபனியின் கதை. டிராமா அதிகம் இருந்தாலும், மேலே சொன்ன அந்தக் காட்சிதான் இந்தக் கதையின் ஆன்மா. பொருள்களின் மேல் நாம் கொண்டிருக்கும் சென்டிமென்ட், அந்தப் பொருளுக்கானது மட்டுமல்ல. அது ஏற்படுத்தும் நினைவதிர்வலைகள், ஞாபகமூட்டும் மனிதர்கள் எப்போதும் நாம் மறந்தும் கூட மறக்க நினைத்திடாத பொக்கிஷங்கள். 'இதுவும் கடந்து போகும்' எனக் கடந்துவிடலாம்தான். ஆனால், காதல் இன்னமும் இருக்கிறது. அதனால், அதுவும் இருந்துவிட்டுப் போகட்டுமே?! அல்லது அது இன்னமும் இருக்கிறது, அதனால் காதலும் இருந்துவிட்டுப் போகட்டுமே?!
The Night Girl Finds a Day Boy
இரவின் மகள் ஒருத்திக்கும், பகலவன் ஒருவனுக்கும் காதல். அதாவது நிலவுக்கும் சூரியனுக்கும் காதல். இருவேறு உலகின் வெவ்வேறு காலநிலையில் உலா வரும் இருவரும், இதைத் தாண்டி எப்படித் தங்களின் காதலை நிலைநாட்டுகின்றனர்?
உறக்கம் தொடர்பான பிரச்னை ஒன்றினால் அவதிப்படும் அந்தப் பெண் இரவில் மட்டுமே வெளியே உலவுகிறாள். பகல் முழுவதையும் உறக்கத்துக்குச் செலவிடுகிறாள். சாதாரண வாழ்க்கை வாழும் ஒருவன் இந்தப் பெண்ணைக் காதலிக்க, காலநிலை பிரச்னைகள் அவர்களின் உறவை எப்படிப் பாதிக்கிறது என்பதைச் சொல்கிறது இந்த எபிசோடு. "நாம், ஒருவர் மற்றொருவரின் உலகை ஆக்கிரமிக்கவே நினைத்தோம். ஆனால், காதலுக்கு உடன் இருந்தால் மட்டும் போதும்தானே?! நமக்கென பொதுவாக இருக்கும் சில மணிநேரங்கள் போதாதா?" என அந்தக் காதலன் பேசும் அந்த வசனம், அந்தக் கதையைத் தாண்டி வெவ்வேறு சந்தர்ப்பங்களுக்கும், பிரச்னைகளுக்குமே இயல்பாகப் பொருந்திப் போகிறது. 'இருவேறு உலகைச் சேர்ந்த இருவர்' என்றாலும் அவர்களுக்கு இடையேயான காதல் என்னமோ 'ஒன்றாக'தானே இருக்கப்போகிறது?!
Strangers on a (Dublin) Train
கொரோனா முதன் முதலில் பரவிய காலகட்டம். லாக்டௌனுக்கு அஞ்சி, நகரத்திலிருந்து ஊர் நோக்கிப் பயணப்படும் இருவர் ரயிலில் சந்தித்துக் கொள்கின்றனர். உரையாடல்கள் உணர்வையும் பரிமாற, பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கின்றன. போன் நம்பரைக்கூடப் பகிராமல், இரண்டு வாரங்கள் கழித்து லாக்டௌன் முடிந்து இதே ரயில்நிலையத்தில் சந்திப்போம் எனப் பிரிகிறது அந்த ஜோடி. ஆனால், கொரோனா இரண்டு வாரங்களில் சென்றுவிட்டதா என்ன? அதைத் தாண்டி காதலர்கள் இணைந்தார்களா?
ரிச்சர்ட் லிங்க்லேட்டரின் 'பிஃப்போர் சன்ரைஸ்' படத்தை நினைவூட்டிச் செல்கிறது இந்த எபிசோடு. 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரில் ஜான் ஸ்நோவாக வாள் தூக்கி நின்ற கிட் ஹாரிங்டன் இதில் காதலால் கவிதை வாசித்திருக்கிறார். லாக்டௌனில் தங்களின் வீடுகளில் இருவேறு துருவங்களாக அவர்கள் பேசும் வசனங்களில் அதீத முரண் வெளிப்பட்டாலும் காதல் அதைக் கடக்க வைக்கிறது. பெருந்தொற்று என்றாலும் அதைக் காதல் வென்றுவிடாதா என்ன?!
A Life Plan for Two, Followed by One
பதின்பருவ நட்புக்குள் காதலையும் மறைத்து வைக்கிறாள் அந்தப் பெண். உடலுறவைக் கடந்த பின்னரும் நட்பையே விரும்புகிறான் அந்த ஆண். பல்வேறு காலகட்டங்களில் இருவரின் நட்பையும் காதலையும் காட்சிப்படுத்துகிறது இந்த எபிசோடு.
ஸ்டாண்ட்அப் காமெடியன் கனவோடு திரியும் ஒஹாயோவும், இலக்கின்றி அலையும் புரூக்ளினும் நட்பு, காதல் குழப்பத்தில் சுற்ற, சண்டையிட்டுக் கொள்ள, அவர்களுக்கு இடையே இருக்கும் உறவு மட்டும் உயிர்ப்புடன் நீடிக்கிறது. அவன் எப்போதும் தன்னுடன் இருக்கவேண்டும் என நினைத்த அவளுக்கு இதுவும் ஒரு வகையில் வெற்றிதானே?!
Am I...? Maybe This Quiz Game Will Tell Me
பள்ளிப்பருவ பெண்கள் இருவர்களிடையே மலரும் தன்பால் ஈர்ப்பு, அதன்பின் எழும் குழப்பம். அவர்களின் விளையாட்டான அணுகுமுறை என்று சற்றே நுண்ணுணர்வுகளுடன் விளையாடுகிறது இந்த எபிசோடு.
மேற்கத்திய நாடுகளின் பள்ளிக் கலாசாரத்தை கண் முன் நிறுத்தும் இந்தக் கதை, முற்போக்கான சமூகம் என்றாலும் தன்பால் ஈர்ப்பு குறித்து பலருக்கும் இங்கு தயக்கம் இருக்கவே செய்கிறது என்ற நிதர்சனத்தைப் போட்டுடைக்கிறது. "You wanted it, right? Then it is fine!" என்று அந்தப் பெண் சொல்லும் அந்த ஒற்றை வசனம், பக்கம் பக்கமாக தன்பால் ஈர்ப்பு குறித்துப் பேசும் கட்டுரைகளின் சாராம்சத்தை, நம் பொட்டில் அடித்ததுபோல ஒரு நொடியில் சொல்லிச் செல்கிறது.
In the Waiting Room of Estranged Spouses
திருமணம் தாண்டிய உறவினால் பிரிகின்றன இரண்டு ஜோடிகள். அந்த இரண்டு ஜோடிகளில், தவறு செய்த கணவனைப் பிரிந்த மனைவிக்கும், தவறு செய்த மனைவியைப் பிரிந்த கணவனுக்கும் காதல் எனும் ஒரு ஸ்பார்க் அடித்தால் அது தவறாகிடுமா என்ன?!
பிரிவைக் கடந்துசெல்ல, இருவரும் உளவியல் ஆலோசகரை நாடுகின்றனர். ஆனால், அவர்களுக்குத் தேவையான மன அமைதியை அவர்கள் ஒன்றாக அருந்திய ஒரு கப் காபி கொடுத்துவிடுகிறது. அறத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் டிராமாத்தனம் அரங்கேறினாலும் இறுதியில் காதலே வெல்கிறது. நாயகன் ராணுவவீரன் என்பதால், அவன் கற்பனையில் போர்க் காட்சிகளை வைத்து மேஜிக் செய்தது சுவாரஸ்ய திரைக்கதை யுக்தி. ஒரே பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் காதலில் விழக்கூடாதா என்று உணர்வுகளை வசீகரிக்கும் 'ரிதம்' ஆக இதமாக வருடுகிறது இந்தக் கதை.
How Do You Remember Me?
பெரியதொரு நகரத்தில் நம் முன்னாள் காதலைத் திடீரென ஒரு தெருவின் திருப்பத்தில் காணும் வாய்ப்பு எப்போதாவது நிச்சயம் அமையும். அப்படி அவர்களைச் சந்திக்கையில், வார்த்தைகளைக்கூடப் பரிமாறவேண்டிய அவசியமின்றி அவர்களைக் குறித்த நினைவலைகள் நம்முள் ஓடும்.
தன்பால் ஈர்ப்பாளர்களான இருவர், எதேச்சையாகத் தூரத்தில் தங்களை அடையாளம் கண்டுகொள்ள, வேறு வழியின்றி இறந்தகால நினைவுகளுடன் ஒருவரையொருவர் நெருங்குகின்றனர். அந்தத் தெருவைக் கடக்கும் முன் தங்களின் காதல் கதையைக் காட்சிகளாக மனத்திரையில் ஓட்டிப் பார்க்கின்றனர். இருவரும் ஒரே காட்சியை நினைவுகூர்ந்தாலும் அவரவர் பார்வையில் அதில் சிற்சில மாற்றங்கள் தட்டுப்படுவது இயல்பான, அதே சமயம் அசத்தலான கதை சொல்லும் யுக்தி. அவர்கள் ஒருவரையொருவர் கடக்கையில் ஒரு சின்ன புன்னகை உயிர்பெறுகிறது. இருவருக்கும் வருத்தமில்லை; ஆனால், அந்தக் காதல் இன்னமும் இருக்கிறது. பிரிவைக் கடக்கலாம், காதலை?!
Second Embrace, With Hearts and Eyes Open
முழு மனத்துடன் பிரிந்து வாழும் ஜோடி, சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் காதல் வயப்பட்டு, சேர்ந்து வாழ நினைத்தால் இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ளாதா என்ன?!
இரண்டு மகள்களுடன் வாழும் தன் முன்னாள் மனைவியைச் சந்திக்கவரும் கணவனுக்கு மீண்டும் அவளின் மீதே காதல் ஏற்படுகிறது. மகள்களின் மூலம் மாறிப்போன தன் கணவன் குறித்து அறியும் மனைவிக்கும் மீண்டும் காதல் பற்றிக்கொள்கிறது. சுமுகமாகச் செல்லும் உறவில், காதலின் பரம்பரை எதிரியான கேன்சர் எட்டிப் பார்க்க, அதையும் தாண்டி காதல் வென்றதா என்பதே கதை. முதிர்ச்சியான இருவர் காதலில் விழுவது சுவாரஸ்ய நிகழ்வாகவே இருக்கும். அப்படி விழுந்தபின், அவர்களுக்கு இடையே அந்த முதிர்ச்சி காணாமல்போய், அசட்டுத்தனம் எட்டிப் பார்க்கும். காதலின் அறிகுறியும், அழகும் அதுதானே?
டாக்ஸி டிரைவரிடம், "நான் என் கனவுக்கன்னியுடன் இந்த நாளைச் செலவிட்டேன். சுவாரஸ்யம் என்னவென்றால் அவளைத்தான் நான் முதலில் திருமணம் செய்திருந்தேன்!" என அந்தக் கணவன் சொல்லும் அந்த வசனம், நகைமுரணான இந்தக் கதையின் சுருக்கவுரை!
முதல் சீசனின் தாக்கத்தை இந்த இரண்டாம் சீசன் ஏற்படுத்தத் தவறினாலும், முதல் கதையும், கடைசி கதையும் அந்த வெற்றிடத்தை நிரப்ப முயன்றிருக்கின்றன. 'காதலுக்கு ஏது இலக்கணம்?' என்ற கேள்வியை முன்வைக்கும் உணர்வுப்பூர்வமான விளையாட்டுகள் இந்தக் கதைகள். ஆம், இந்த நிஜ மனிதர்களின் வாழ்க்கை ஒவ்வொன்றும் ஏதோ ஓர் எழுதப்படாத இலக்கணத்தைக் கேள்வி கேட்கவே செய்கின்றன.
பிரிதல், ஒன்றுசேருதல் என்ற விளையாட்டைத் தாண்டி, 'கிட்டார் கம்பி மேல் நிற்கும்' சாகசங்களை எல்லாம் செய்யாமல், வெகு இயல்பாக உணர்வுகளைப் பேசிச் செல்லும் இந்தக் கதைகள் நிச்சயம் நமக்குள் ஓர் உரையாடலைத் தொடங்கிவைக்கும். நம் முன்னாள், இன்னாள் காதல்களை ஒரு நொடியேனும் நினைக்க வைக்கும். அந்த வகையில் 'மாடர்ன் லவ்' போன்ற கதைகள் இதுபோன்று அவசியம் திரைவடிவம் பெறவேண்டும்.
முதல் சீசனின் விமர்சனத்தைப் படிக்க...
Also Read: காதலுக்கு ஏது இலக்கணம்?
source https://cinema.vikatan.com/web-series/excerpts-from-amazon-prime-video-series-modern-love-season-2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக