Ad

சனி, 14 ஆகஸ்ட், 2021

ஆலூ சமோசா | பனீர் சமோசா | பின் வீல் சமோசா | மினி ஆனியன் சமோசா - சமோசா ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

சலிக்காத உணவென்றால் சமோசா என்பதே பெரும்பாலானவர்களின் பதிலாகவும் இருக்கும். காலை, மதியம், மாலை, இரவு என எந்த வேளைக்குச் சாப்பிட்டாலும் அலுக்காது, சலிக்காது. வெறும் வெங்காயம் வைத்த குட்டிக் குட்டி சமோசாவில் தொடங்கி, உருளைக்கிழங்கு, பட்டாணி மசாலா வைத்த ஆலூ சமோசா, பனீர் சமோசா என சமோசாவில் பல வெரைட்டி செய்ய முடியும். சமோசாவுக்கான மேல் மாவு தயாரிக்கக் கற்றுக்கொண்டால் போதும். உள்ளே வைக்கிற மசாலா அவரவர் சாய்ஸ்.

இந்த வார வீக் எண்டை வீட்டிலேயே செய்த சமோசாவுடன் செலிபிரேட் செய்யலாமா?

சமோசா மாவு செய்முறை

சமோசாக்களில் பல வகைகள் உள்ளன. அதில் பெரும்பாலும் கூம்பு சமோசா மற்றும் முக்கோண சமோசா ஆகிய இரண்டும் பிரபலமான வகைகள் ஆகும். முதலில் கூம்பு சமோசா செய்முறையைப் பார்ப்போம். ஆலூ சமோசா, பனீர் சமோசா மற்றும் பின் வீல் சமோசா ஆகிய சமோசா வகைகளுக்குக் கூம்பு சமோசா மாவை வைத்து செய்யலாம்.

கூம்பு சமோசாவுக்கு...

தேவையானவை:

  • மைதா மாவு - 2 கப்

  • நெய் அல்லது எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

  • ஓமம் - 2 டீஸ்பூன்

  • உப்பு, தண்ணீர் - தேவையான அளவு

சமோசா மாவு

செய்முறை:

அகலமான தாம்பாளத்தில் அல்லது பாத்திரத்தில் மைதா மாவு, ஓமம், தேவையான அளவு உப்பு மற்றும் நெய் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் கைகளால் நன்கு பிசிறி விடவும். மாவைக் கைகளில் சேர்த்தால் பிடிக்கும் அளவுக்குக் கலந்துகொள்ளவும். இப்போது தண்ணீரைச் சிறிது சிறிதாகத் தெளித்து, கெட்டியாகவும் ஒட்டாமலும் வரும் வரை பிசைந்துகொள்ளவும். பிசைந்த மாவை 30 முதல் 40 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும். பிறகு சிறிது நேரம் சப்பாத்தி கட்டையில் மென்மையாகும் வரை கைகளால் உருட்டிக்கொள்ளவும். உருட்டிய மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். பின்னர் கைகளால் வட்டமாகச் செய்து சிறிதளவு மாவைத் தூவி சிறிய நீள்வட்டமாகத் தேய்த்துக்கொள்ளவும். நீள்வட்டங்களில் நடுவில் ஒரு கத்தியால் வெட்டி அரை வட்டங்களாகச் செய்துகொள்ளவும். இதேபோல் மற்ற உருண்டைகளையும் செய்துகொள்ளவும். கூம்பு சமோசாவுக்கான அரை வட்டங்கள் தயார்.

தேவையானவை:

  • உருளைக்கிழங்கு - 2

  • பச்சைப் பட்டாணி - கால் கப்

  • மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

  • மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்

  • மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்

  • கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

  • சீரகம் - அரை டீஸ்பூன்

  • பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)

  • பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கவும்)

  • இஞ்சி - அரை அங்குலத் துண்டு (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்)

  • கொத்தமல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கவும்)

  • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

ஆலூ சமோசா

ஆலூ மசாலா செய்முறை:

பச்சைப் பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை குக்கரில் 4 முதல் 6 விசில் வரும் வரை வேகவைத்துக்கொள்ளவும். பின்னர் உருளைக்கிழங்கின் தோலை உரித்து மசித்துக்கொள்ளவும். ஒரு கனமான கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும் அதில் சீரகம் சேர்த்து, பொரிந்ததும் பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அவை வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து லேசாக நிறம் மாறியதும் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு மற்றும் பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும். அதில் தேவையான அளவு உப்பு மற்றும் கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கலந்து கலவை நன்கு ஒட்டாமல் வரும் வரை வதக்கி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

ஆலூ சமோசா செய்முறை:

இப்போது அரை வட்டங்களாகச் செய்தவற்றில் ஒன்றை எடுத்து ஒரு விளிம்பில் சிறிது தண்ணீர் தடவி மறுபாதி விளிம்பின் மேல் ஒட்டி கூம்பு வடிவில் செய்துகொள்ளவும். பின்னர், அதனுள்ளே தயாரித்த உருளைக்கிழங்கு மசாலா கலவையை வைத்து ஓரங்களில் சிறிது தண்ணீர் தடவி ஒட்டிவிடவும். கனமான கடாயில் எண்ணெய்விட்டு குறைந்த சூட்டில் வைத்து காயவிடவும். எண்ணெய் லேசாகச் சூடானதும் தயார் செய்த சமோசாக்களைச் சேர்த்துக் குறைந்த சூட்டிலேயே வைத்து இடையிடையே கரண்டியால் திருப்பிக் கொண்டே பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும். சுவையான ஆலூ சமோசா தயார்.

தேவையானவை:

  • பனீர் - 150 கிராம்

  • வெங்காயம் - ஒன்று

  • இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

  • கஸுரி மேத்தி இலைகள் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

  • மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்

  • மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்

  • சீரகத்தூள் - கால் டீஸ்பூன்

  • கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

  • உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

பனீர் சமோசா

மசாலா செய்முறை:

பனீரைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கவும்.ஒரு பானில் (Pan) ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனதும் அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய பனீர் துண்டுகளைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து மெதுவாகக் கலந்து கஸுரி மேத்தி இலைகள் சேர்த்துப் புரட்டி இறக்கவும்.

பனீர் சமோசா செய்முறை:

இப்போது அரை வட்டங்களாக செய்தவற்றில் ஒன்றை எடுத்து ஒரு விளிம்பில் சிறிது தண்ணீர் தடவி மறுபாதி விளிம்பின் மேல் ஒட்டி கூம்பு வடிவில் செய்துகொள்ளவும். பின்னர் அதனுள்ளே தயாரித்த பனீர் கலவையை வைத்து ஓரங்களில் சிறிது தண்ணீர் தடவி ஒட்டிவிடவும். கனமான கடாயில் எண்ணெய்விட்டு குறைவான சூட்டில் வைத்து காயவிடவும். எண்ணெய் லேசாக சூடானதும் தயார் செய்த சமோசாக்களைச் சேர்த்துக் குறைந்த தீயில் வைத்து இடையிடையே கரண்டியால் திருப்பிக்கொண்டே பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.

தேவையானவை:

  • உருளைக்கிழங்கு - 2

  • மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

  • மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

  • மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்

  • கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

  • சீரகத்தூள் - கால் டீஸ்பூன்

  • இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன்

  • கொத்தமல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன்

  • மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன்

  • தண்ணீர் - அரை கப்

  • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

பின் வீல் சமோசா

மசாலா செய்முறை:

உருளைக்கிழங்கைக் குக்கரில் நான்கு விசில் வரும் வேகவைத்துக்கொள்ளவும். பின்னர் தோலுரித்து மசித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் அதில் இஞ்சி - பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். பிறகு அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும். பின்னர் மசித்த உருளைக்கிழங்கு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து இறக்கவும்.

பின் வீல் சமோசா செய்முறை:

கூம்பு சமோசாவுக்குக் குறிப்பிட்டுள்ள மாவில் ஆரஞ்சு பழ அளவில் உருண்டை எடுத்துக்கொண்டு உருட்டிக்கொள்ளவும். பின்னர் சிறிது மைதா மாவு தூவி பெரிய வட்டமாகத் தேய்த்துக்கொள்ளவும். அதில் தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மசாலாவைச் சமமாகப் பரப்பி வைக்கவும். பின்னர் ஓரங்களில் இருந்து ரோல் செய்து உருட்டிக்கொள்ளவும். ஒரு கத்தியால் அரை அங்குலத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து காயவிடவும். ஒரு சிறிய கிண்ணத்தில் 2 டேபிள்ஸ்பூன் மைதா மாவுடன் அரை கப் தண்ணீர் ஊற்றிக் கரைத்துக் கொள்ளவும். இப்போது நறுக்கிய வட்டங்களை மைதா கரைசலில் இரண்டு பக்கமும் நன்கு தோய்த்து எண்ணெயில் போடவும். சிறிது நேரம் கழித்து மெதுவாகத் திருப்பிப் போட்டு பொன்னிறமாக மாறியதும் தட்டில் மாற்றிக்கொள்ளவும். புதினா கொத்தமல்லிச் சட்னி வைத்து சூடாகப் பரிமாறவும்.

தேவையானவை:

  • வெங்காயம் - ஒன்று

  • பச்சை மிளகாய் - 2

  • கொத்தமல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன்

  • கறிவேப்பிலை - சிறிதளவு

  • அவல் - 4 டேபிள்ஸ்பூன்

  • மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

  • மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்

  • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

  • மைதா கரைசல் செய்ய:

  • மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன்

  • தண்ணீர் - 4 டேபிள்ஸ்பூன்

மினி ஆனியன் சமோசா

வெங்காயக் கலவை செய்முறை:

வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கைகளால் கலந்துகொள்ளவும். 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு நன்கு பிழிந்து மற்றொரு பாத்திரத்தில் மாற்றி அதில் அவலை சேர்த்து நன்கு கலந்து மூடி வைக்கவும்.

மினி ஆனியன் சமோசா செய்முறை:

ஒரு சிறிய கிண்ணத்தில் 2 டேபிள்ஸ்பூன் மைதா மாவுடன் 4 டேபிள்ஸ்பூன் தண்ணீர்விட்டுக் கலந்துகொள்ளவும். இப்போது தயார் செய்த தகடுகளை 1.5 இன்ச் செவ்வங்களாக வெட்டுங்கள். வெட்டிய தகடுகளை ஓர் அகலமான தட்டில் வைத்துக்கொள்ளவும். ஓரத்தில் இருந்து முக்கோண வடிவில் மடிக்க ஆரம்பித்து, கூம்பு வடிவில் செய்து அதில் தயார் செய்த வெங்காய கலவையை நன்கு அழுத்தி வைக்கவும். பின்னர் ஓரங்களில் மைதா கரைசலைத் தடவி ஒட்டிவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் தயார் செய்த மினி சமோசாக்களைச் சேர்க்கவும். சிறிது நேரம் கழித்து மெதுவாகத் திருப்பிப் போட்டு இருபுறமும் நன்கு முறுகலாகும் வரை பொரித்தெடுக்கவும்.



source https://www.vikatan.com/food/recipes/aloo-samosa-paneer-samosa-mini-onion-samosa-samosa-special-weekend-recipes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக