கடந்த சில ஆண்டுகளாக நம் நாட்டின் சுதந்திர தின விழா ஒரு கருப்பொருளை மையமாக வைத்துக் கொண்டாடப்படகிறது. கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து சுதந்திர தினத்திற்கான பல்வேறு `தீம்’களை இந்தியா கொண்டுள்ளது. அந்த கருப்பொருளை (தீம்) மையமாகக் கொண்டு தான் செங்கோட்டையில் அலங்காரம் முதல் பிரதமரின் பேச்சு வரை அனைத்தும் இடம்பெற்றிருக்கும்.
பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர். குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த இவர், 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராகப் பொறுப்பேற்றார். நரேந்திர மோடி பிரதமர் ஆனதும் சுதந்திர தின விழாவை ஒரு கருப்பொருள் வைத்துக் கொண்டாடும் வழக்கம் கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆறு ஆண்டுகளாகச் சுதந்திர தினம் பல்வேறு தீம் வைத்துக் கொண்டாடப்பட்டுள்ளது.
2015: ``உண்மையான சுதந்திரத்தை நோக்கி" (TOWARDS TRUE FREEDOM)
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் " உண்மையான சுதந்திரத்தை நோக்கி" என்ற தீம் யோசனை 2015 -ம் ஆண்டுக்காக உருவாக்கப்பட்டது. இந்த கருப்பொருளுக்குள் ஐந்து முக்கிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. குப்பைக் கழிவுகளிலிருந்து சுதந்திரம் - `ஸ்வட்ச் பாரத்', நிதித் தீண்டாமையிலிருந்து சுதந்திரம் - `ஜன் தன் யோஜனா', பெண் குழந்தைகளுக்கான சுதந்திரம்- `பேடி பதாவ், பேடி பச்சாவ்' , பண்டைய தொழிலாளர்கள் சட்டத்திலிருந்து சுதந்திரம் - `ஷ்ரமேவ் ஜெயதே யோஜனா', நிதி சுதந்திரம்- `முத்ரா யோஜனா' ஆகியவற்றை நிறைவேற்றுவதே இந்தியாவின் உண்மையான சுதந்திரம் எனப் பிரதமர் மோடி தனது உரையில் பேசியிருந்தார்.
2016- ``தியாகத்தை நினைவில் கொள்வோம்" (REMEMBER THE SACRIFICE)
இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய வீரர்களின் தியாகத்தை நினைவில் கொள்ளும் வகையில் இக்கருப்பொருள் வைக்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெறப் பல வீரர்கள் சவால்களைச் சந்தித்துள்ளனர், தியாகங்களைச் செய்துள்ளனர். 70-வது சுதந்திர தினத்தில், அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் `யாத் கரோ குர்பானி' என்ற தீம் பாடலை வெளியிட்டனர். இந்த சுதந்திர தினம் ஒரு திருவிழா போல நடைபெற வேண்டும் என்று பிரதமர் கூறினார். சுதந்திர போராட்ட வீரர்களான, பகத் சிங், மகாத்மா காந்தி, லாலா லஜ்பத் ராய் , சர்தார் வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரின் நினைவாக அவர்களின் சொந்த ஊர் மற்றும் கிராமங்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
பிரதமர் மோடி 2017-ம் ஆண்டிற்கான கருப்பொருளுக்கான ஆலோசனையை பொது மக்களிடம் ட்விட்டர் மூலம் கேட்டிருந்தார். மக்கள் பல்வேறு தலைப்புகளைக் கூறினார்கள். இதில் பெரும்பாலான மக்கள் 2015-ம் ஆண்டின் கருப்பொருளைப் போலவே கல்வி, தூய்மை, சுற்றுச்சூழல், பெண்கள் கல்வியறிவு என்று ஆலோசனை தெரிவித்திருந்தனர். இந்திய மக்களோடு சேர்ந்து 'புதிய இந்தியா'வை உருவாக்குவதும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அவர்களது லட்சியங்களை அடைந்து வாழ்வில் வெற்றி பெறுவதே தமது தீர்மானமாகும் என்று பிரதமர் மோடி உரையில் கூறினார்.
2018- "ஒரே நாடு, ஒரே மக்கள்" (ONE COUNTRY, ONE PEOPLE)
கடந்து மூன்று ஆண்டுகளாகப் பிரதமர் மோடி மக்களிடமே யோசனை மற்றும் ஆலோசனைகளை ட்விட்டர் மூலமாகக் கேட்டறிந்தார். அவர் வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் ஒரு மகள் அல்லது ஒரு மகளைக் கையில் தேசியக் கொடியோடு விண்வெளிக்குச் செல்வார்கள் என்றார். உலகின் மிகப்பெரிய அரசாங்க நிதியுதவி திட்டம் -'ஆயுஷ்மான் பாரத்' - தேசிய சுகாதாரப் பாதுகாப்பு திட்டம் (NHPS) அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் கட்சியை விடத் தேசத்தின் நலமே முதன்மையானது என்றும் பிரதமர் மோடி கூறினார்.
2019- ``நமது வீரர்களை ஆதரிக்கவும், நமது வீரர்களை வாழ்த்தவும்" ( SUPPORT OUR TROOPS, SALUTE OUR TROOPS)
சுதந்திர போராட்ட காலகட்டத்தில் மகாத்மா காந்தி வீடு வீடாகச் சென்று மக்களை ஊக்குவித்தார். 2019-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா என்று பிரதமர் மோடி கூறினார். இந்த காலகட்டத்தில் பிறந்த நாம் அதிர்ஷ்டசாலிகள். நமது திறமைகளைச் சரியான நேரத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்றும் கூறினார் . மேலும் பிரதமர் மோடி அவ்வருடத்துக்கான வளர்ச்சியை அறிவித்தார். இந்தியா விரைவில் திறந்த வெளியில் மலம் கழிக்காத நாடாக மாறும், டிஜிட்டல் கட்டணங்களை அதிக செயல்பாட்டுக்குக் கொண்டு வருவோம், உள்நாட்டுச் சுற்றுலாவை ஊக்குவிப்போம். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘மேட் இன் இந்தியா' பொருட்களே நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று தனது உரையில் பேசியிருந்தார்.
Also Read: இந்திய தேசியக்கொடி எத்தனைமுறை மாற்றியமைக்கப்பட்டது என்று தெரியுமா?
2020- ஆத்மநிர்பர் பாரத் – SELF-RELIANT INDIA ( ATMANIRBHAR BHARAT)
74-வது சுதந்திர தினத்தின் பிரதமர் உரையில், 'இந்தியா பிற நாடுகளைச் சார்ந்து இருப்பதைப் படிப்படியாகக் குறைத்து நாம் எல்லாவற்றிலும் தனித்து இருக்க வேண்டும். விவசாயத் துறையில் நாம் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக விவசாயக் கட்டுப்பாடுகளை அரசு நீக்கியுள்ளது. நாம் இப்போது கடினமான காலகட்டத்தில் இருக்கிறோம். இந்த கொரோனா பரவலால் குழந்தைகள் நிகழ்ச்சியில் பங்கேற்காதது மனவருத்தத்தை அளிக்கிறது என்றார். கொரோனா பரவலில் உயிரிழந்த முன்களப் பணியாளர்களை இந்த நாடு வணங்குகிறது. வருகின்ற 75-வது சுதந்திர தினத்தின்போது , இந்திய மக்கள் அனைவரும் உள்ளூர் மக்களுக்காகக் குரல் கொடுப்போம் ( vocal for local) என்பதை நமது மந்திரமாகக் கொள்ளவேண்டும்' என்றார்.
இதைத் தொடர்ந்து, 2021, 75-வது சுதந்திர தினம், 'தேசத்திற்கே முதல் முன்னுரிமை' (NATION FIRST, ALWAYS FIRST) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
- குயின்ஸி வில்ஃபிரடா & யோகேஸ்வரி. அ
source https://www.vikatan.com/government-and-politics/politics/do-you-know-what-themes-have-been-celebrated-on-independence-day-so-far
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக