Ad

சனி, 21 ஆகஸ்ட், 2021

`25 வயதிலேயே ஆசிரியர்; கல்வியோடு விழிப்புணர்வு பணி!’ - `நல்லாசிரியர்' லலிதாவின் கதை

``அன்னைக்கு மதியம் மூன்றரை மணி இருக்கும். யதார்த்தமா வாட்ஸ்அப்பை ஓப்பன் பண்ணினப்போ, `வாழ்த்துகள் லலிதா மேடம்’ அப்படீங்கிற மெசேஜ் குவிந்து கிடந்துச்சு. என்னன்னு பார்த்தா, 2021-ம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு என்னை செலக்ட் பண்ணியிருக்காங்கன்னு தெரிய வந்துச்சு. எனக்கு அவ்ளோ சந்தோஷம். துள்ளிக் குதிச்சிட்டேன். என்னோட இத்தனை வருஷ ஆசிரியர் பணிக்குக் கிடைச்ச பெரிய அங்கீகாரமா இதை நினைக்கிறேன்” எனச் சொல்லும் ஆசிரியை லலிதாவின் வார்த்தைகளில் மிகுந்த உற்சாகம்.

2021-ம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்காக தேசிய கல்வி அமைச்சகம், நாடு முழுக்க 44 ஆசிரியர்களைத் தேர்வு செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து தேர்வான இரண்டு ஆசிரியர்களில் ஒருவர் தான் ஈரோட்டை சேர்ந்த லலிதா.

தலைமையாசிரியை லலிதா

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற மகிழ்ச்சியில் இருந்த ஆசிரியை லலிதாவிடம் பேசினோம். ``திண்டுக்கல் மாவட்டத்துல உள்ள சின்னாளப்பட்டி கிராமம்தான் என்னோட சொந்த ஊர். பிறந்தது, படிச்சது, வளர்ந்தது எல்லாமே அங்க தான். சின்ன வயசுல இருந்தே ஆசிரியர் ஆகணும்ங்கிற கனவோட இருந்ததாலயோ என்னவோ, என்னோட 25-வது வயசுலயே நான் ஆசிரியை ஆகிட்டேன். 2002-ல் ஆசிரியர் பணியில் பயிற்றுநராக 4 மாசம் வேலை செஞ்சேன். எனக்கு இயற்பியல் ஆசிரியர் ஆகணும்ங்கிற ஆசை இருந்ததால, டி.ஆர்.பி எக்ஸாம் எழுதி, அதுல செலக்ட் ஆனேன். என்னோட சொந்த மாவட்டமான திண்டுக்கல்லில் உள்ள கொடைக்கானல்ல எனக்கு போஸ்டிங் கிடைச்சது. படிச்சு முடிச்ச 9-வது மாதத்துல எனக்கு அரசு வேலை கிடைச்சது.

கொடைக்கானல்ல நான் ஸ்கூலுக்கு போன முதல்நாள், `நீங்க டீச்சரா... நாங்க புதுசா சேர்ந்திருக்குற ஸ்டூடன்ட்னு நினைச்சோம்'னு சொன்னாங்க. மலைப் பகுதியிலிருந்து படிக்க வந்த மாணவர்கள் என் மேல ரொம்ப அன்பாக இருந்தாங்க. கல்வியில பின்தங்கியிருந்த அந்தக் குழந்தைகளுக்குக் கூடுதல் அக்கறையோட நான் பாடம் சொல்லிக் கொடுத்தேன். ரெண்டரை வருஷம் கொடைக்கானல்ல வேலை பார்த்தேன். சின்னாளப்பட்டியில் நடந்த என்னோட கல்யாணத்துக்கு நிறைய குழந்தைங்க முதல் நாளே வந்துட்டாங்க. `கல்யாணத்துக்குப் பின்னாடி நீங்க எங்க ஸ்கூலுக்கு வர மாட்டீங்களா’னு பசங்க ரொம்ப வருத்தப்பட்டாங்க.

தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஆசிரியை லலிதா

Also Read: ``கிராமப்புற மாணவர்களை விஞ்ஞானிகளாக்கணும்!” - தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஜெயசுந்தர்

கல்யாணத்துக்குப் பின்னாடி என் கணவரோட சொந்த ஊரான ஈரோடு மாவட்டம், சிவகிரி பக்கத்துல இருக்குற மோளபாளையத்துக்கு வந்துட்டேன். சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நான் 14 வருஷம் வேலை செஞ்சேன். இதே ஸ்கூல்லதான் என் கணவர் படிச்சு, இன்னைக்கு திருச்செங்கோட்டில் இருக்கும் விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில காமார்ஸ் துறையின் டீன் ஆக இருக்காரு. என் கணவருக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களோட சேர்ந்து நானும் பணியாற்றியது எனக்கு பெருமையா இருந்துச்சு.

2019-ல் தலைமையாசிரியராக எனக்குப் பதவி உயர்வு கிடைச்சு, சத்தியமங்கலம் பக்கத்துல இருக்க தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் போஸ்டிங் கிடைச்சது. இப்போ மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றிக்கிட்டு இருக்கேன். நான் தலைமையாசிரியர் ஆனதும் புதிய கற்பித்தல் முறை, மாணவியர் சேர்க்கையை அதிகப்படுத்தியது, பள்ளியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியது, சமூக மேம்பாட்டில் மாணவிகளை ஈடுபடச் செய்தது, மாணவிகளுக்குப் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தியதுனு பல ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளை செஞ்சுக்கிட்டு வர்றேன்.

கொரோனாவால மாணவிகள் பள்ளிக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதால ஆன்லைனில் சுற்றுச்சூழல் சார்ந்து போட்டிகள், வீட்டுத்தோட்டம் அமைப்பது, குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமாக நிபுணர்கள் மூலம் விழிப்புணர்வு கொடுப்பது, உளவியல் ஆலோசகர்களை வரவழைத்து குழந்தைகளுக்கு மனநலம் சார்ந்த ஆலோசனைகளை வழங்குவது, யோகா பயிற்சி கொடுப்பது, மழைநீர் சேகரிப்பு மற்றும் பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வுனு ஏற்படுத்திட்டு வர்றேன்.

பள்ளிகள் திறந்த பின்பு, பெற்றோரையும் வரவழைத்து குழந்தை வளர்ப்பு, குழந்தை பாதுகாப்பு போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்யவிருக்கேன். தலைமையாசிரியர் ஆன பிறகுதான்னு இல்ல... என்னோட 19 ஆண்டுக்கால ஆசிரியர் பணியில, மாணவர்களுக்கு கல்வி மட்டுமில்லாம பல்வேறு விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வர்றேன். அதுக்கான ஒரு பெரும் அங்கீகாரமாகத்தான் இந்த தேசிய நல்லாசிரியர் விருதை நான் பார்க்கிறேன்.

மாணவிகளுடன் ஆசிரியை லலிதா

Also Read: ``வார்த்தைகளால் கற்பிப்பதைவிட இப்படிச் செய்தால் எளிதாகப் புரியும்!” - தேசிய விருது பெற்ற ஆசிரியை

எனக்கு இந்த விருது கிடைச்சதுல எங்க ஊர்மக்கள், நண்பர்கள் எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம். என் நண்பர்கள் வாட்ஸ்அப் குரூப்புகளில் என்னோட படத்தை புரொஃபைல் பிக்சராக வெச்சிருக்காங்க. முகம் தெரியாத பலரும் கூப்பிட்டுப் பாராட்டுறாங்க. இதெல்லாம், இன்னும் நான் கூடுதலாக உழைக்கணும் என்ற பொறுப்பை எனக்குக் கொடுத்துருக்கு. எனக்கு இன்னும் 16 வருஷம் சர்வீஸ் இருக்கு. என் சர்வீஸ் முடியுற வரைக்கும் தரமான கல்வியோடு சேர்த்து, மாணவிகளின் எதிர்காலத்திற்குத் தேவையான எல்லா விஷயங்களுக்கும் உறுதுணையாக இருப்பேன். என் கணவர் கல்லூரிப் பேராசிரியராக இருந்தாலும், விவசாயத்தையும் நேரம் ஒதுக்கி செஞ்சுக்கிட்டு இருக்கார். என்னோட ரிட்டயர்மென்ட் காலத்துக்குப் பின்னாடி, என் கணவரோட சேர்ந்து விவசாயம் செய்யணும்ங்கிறதுதான் என்னோட ஆசை” என்றார்.

வாழ்த்துகள் லலிதா மேடம்!

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo



source https://www.vikatan.com/government-and-politics/education/modakurichi-govt-school-hm-lalitha-to-be-given-national-award

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக