Ad

சனி, 21 ஆகஸ்ட், 2021

"ஆண் பக்தர்களைத் தொட மாட்டேன்!" - ஜாமீனில் வந்த சாந்தா சாமியார் சபதத்துக்கு என்ன காரணம்?!

வேலூர் மாவட்டம் திருவலம் பகுதியில், ஸ்ரீ ஸர்வமங்கள பீடத்தை நிறுவி, அதன் மடாதிபதியாக வலம் வருபவர் ‘சாந்தா சுவாமிகள்’ என்கிற சாமியார். இவரது இயற்பெயர் சாந்தகுமார். நான்கு பக்தர்களிடம் ரூ.65 லட்சம் பணத்தை மோசடி செய்த புகாரில், ஆற்காடு காவல் நிலையத்தில் மூன்று வழக்குகளும், வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என சாந்தா சாமியார்மீது மொத்தம் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் தொடர்பாக, கடந்த ஆண்டு நவம்பர் 7-ம் தேதி, காவல் துறையினர் சாந்தா சாமியாரைக் கைது செய்து, வாலாஜாபேட்டை கிளைச்சிறையில் அடைத்தனர்.

சாந்தா சாமியார்

Also Read: ராணிப்பேட்டை: ஆண் பக்தர்களுக்குப் பாலியல் தொல்லை; பணமோசடி! சாமியார் குண்டர் சட்டத்தில் அடைப்பு

பணமோசடி புகார் மட்டுமல்லாமல், சாந்தா சாமியார்மீது பாலியல் சர்ச்சையும் எழுந்தது. தன்னிடம் ஆசிபெறுவதற்காக வந்த ஆண் பக்தர்கள் சிலரிடம் சாமியார் கட்டியணைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, ‘ஃபேஸ்புக்’ பக்கத்தில், தன்னைப் பின்தொடர்ந்த ஆண் பக்தர்கள் சிலரிடமும், ‘மெசஞ்சர்’ செயலி மூலமாக ‘சாட்டிங்’ செய்து, அவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்கான பதிவுகளும் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பின.

மெசஞ்சர் சாட்டிங்கில், தனது ஆபாசப் புகைப்படத்தையும் சாந்தா சாமியார் ஆண் பக்தர்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சாமியார் குறித்து இதுபோன்ற தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த காரணத்தால் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், சாந்தா சாமியார்மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதையடுத்து, கிளைச் சிறையிலிருந்து வேலூர் மத்திய சிறைக்கு அவர் மாற்றப்பட்டார்.

வேப்ப மரத்தில் தாலி கட்டியபோது...

கிட்டத்தட்ட 9 மாதங்கள் சிறையில் இருந்த சாந்தா சாமியார் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். கடந்த 20-ம் தேதி வேலூரை அடுத்துள்ள பெரிய சித்தேரி கிராமத்தில், அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார் சாந்தா சாமியார். கொரோனா மூன்றாவது அலை பரவாமல் இருக்க வேண்டிக்கொண்டு அந்த ஊரிலுள்ள சிலர் சாமியாரை அழைத்துச் சென்று வழிபாடு நடத்தியுள்ளனர். சாமியாரும் தாலி கயிற்றை தன் கையால் எடுத்து வேப்ப மரத்தில் கட்டினார். சாந்தா சாமியாரைப் பார்த்த பெரிய சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த ஆண் பக்தர்கள் அருகில் செல்லவே தயங்கினர். சாமியாரும் ஆசீர்வாதம் செய்ய அழைத்துக் கொண்டே இருந்தார். ஆண் பக்தர்கள் கடைசி வரை அருகில் செல்லாததால், ‘‘இனிமேல், ஆண் பக்தர்களை தொடவே மாட்டேன்’’ என்று அதே இடத்திலேயே சபதம் எடுத்துக்கொண்டு புறப்பட்டிருக்கிறார், சாந்தா சாமியார்.



source https://www.vikatan.com/social-affairs/crime/controversial-preacher-released-from-jail

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக