Ad

சனி, 21 ஆகஸ்ட், 2021

கே.பி.பார்க்:வீடிருந்தும் தகரக் குடிசையில் வாழும் மக்கள்;ரூ1.5 லட்சம் கேட்கும் அரசு; என்ன நடக்கிறது?

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளின் தரம் குறித்து பெரிய சர்ச்சை எழுந்துள்ளது. கட்டிடத்தின் தரம் குறித்து ஐஐடி நிபுணர் குழு ஆய்வு செய்யும் என குடிசை மாற்று வாரிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். தரம் குறித்து பிரச்னை ஒருபுறம் இருக்க, வீடு ஒதுக்குவதிலும் சிக்கல் நிலவுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட சென்னை மாவட்டச் செயலாளர் செல்வாவிடம் பேசினோம்.

புளியந்தோப்பு அடுக்குமாடிக் குடியிருப்பு

“ கேசவப் பிள்ளை பூங்காவில், 1980-ம் ஆண்டு குடிசை மாற்று வாரியம் சார்பில், தரைத் தளத்தோடு சேர்த்து 4 மாடிக் கட்டடத்தில், 280 சதுர ஆடியில் 1,536 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. 30 ஆண்டுகள் கடந்த நிலையில் அந்த வீடுகள் சிதிலமடைந்தன. அந்த குடியிருப்புகளை இடித்து புதிய குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக 672 வீடுகள் கொண்ட குடியிருப்பு தரைத் தளத்தோடு சேர்த்து 4 மாடிக் கட்டடமாக கட்டி முடித்து பயனாளர்களுக்குக் கொடுக்கப்பட்டது.

அடுத்த கட்டமாக 864 குடியிருப்புகள் இடித்து புதிய கட்டடம் எழுப்பும் பணி 2016-ல் தொடங்கியது. அங்குக் குடியிருந்த மக்களில் வீட்டு வாடகை கொடுத்து வாழ முடியாது என்ற குடும்பச் சூழலில் இருப்பவர்களுக்கு குடியிருப்புக்கு அருகிலேயே, எட்டுக்கு எட்டு அளவில் தகரக் கொட்டகை அமைத்துக் கொடுத்தது குடிசை மாற்று வாரியம். இடிக்கப்பட்ட இடத்தில் 4 மாடிக் கட்டடத்துக்கு பதிலாக 9 மாடிக் கட்டடம் எழுப்பி அதில் 864 வீடுகளைக் கட்டி முடித்தனர். அதனால், குடிசை மாற்று வாரியத்துக்குக் கூடுதலாக இடம் கிடைத்தது. அந்த கூடுதல் இடத்தில் 11 மாடிக் கட்டடம் எழுப்பி, 1056 குடியிருப்புகளைக் கட்டி முடித்தனர். 864 குடியிருப்புகள் கொண்ட கட்டடம் 2019 ஜூன் மாதம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், பயனாளர்களுக்கு வீடு கொடுக்கப்படவில்லை. இதைக் கண்டித்து பல ஆர்ப்பாட்டங்களை நடத்தினோம், மனுக்கள் கொடுத்தோம். ஆனாலும் இழுத்தடித்து வந்தனர்.

தகரக் கொட்டகையில் தங்கியிருக்கும் மக்கள்

எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், 2020 டிசம்பர் 14-ம் தேதி மக்களை அழைத்துக்கொண்டு குடியேறும் போராட்டத்தை நடத்தினோம். அப்போது வந்த அதிகாரிகள் ஜனவரி 21, 2021-க்குள் வீட்டைக் கொடுத்துவிடுவோம் என்று வாக்குறுதியளித்தனர். ஆனால் காலம் தாழ்த்தி 2021 பிப்ரவரி 5-ம் தேதிதான் குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.

குலுக்கல் நடத்தும்போது, ஒரு பிட் நோட்டீஸ் மக்களுக்குக் கொடுக்கப்பட்டது. அதில், அரசாணை 28 (4டி)-யின்படி, ஒவ்வொரு குடும்பமும் ரூ1.5 லட்சம் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பணம் செலுத்த வேண்டும் அறிவிக்கும் நோட்டீஸ்

இங்கு எழும் கேள்வி, குடிசை மாற்று வாரியம் சார்பில் எந்த தொகையும் பெறாமல் 1980-ம் ஆண்டு வீடு கொடுக்கப்பட்டது. அதை இடித்து புதிதாகக் கட்டிக் கொடுக்கும்போது ஏன் மக்கள் பணம் செலுத்த வேண்டும்? ஏன் என்று கேட்டால் இது பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் ஆவாஸ் யோஜ்னா திட்டத்தின் கீழ் வருகிறது என்கின்றனர். மத்திய அரசு, மாநில அரசு , பயனாளர்கள் என மூன்று தரப்பு நிதிப் பங்களிப்பும் இதில் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ரூ1.5 லட்சம் கேட்பதாக தெரிவிக்கின்றனர்.

தகரக் கொட்டைகையில் வாழும் மக்கள்

குடிசை மாற்று வாரியம் சார்பாக இலவசமாகக் கொடுக்கப்பட்ட வீடுகளை, பிரதமரின் திட்டத்தோடு இணைப்பதற்கான தேவை என்ன? மத்திய அரசால், வீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தமுடியாத இயலாமையை மறைக்க, அ.தி.மு.க அரசு குடிசை மாற்று வாரியம் மூலமாக அதை செயல்படுத்த உதவியிருக்கிறது. இது குடிசைப் பகுதி மக்களுக்குச் செய்த அ.தி.மு.க அரசு செய்த மிகப் பெரிய துரோகம். கவனித்துப் பாருங்கள். 2016-ல் குடியிருப்புகள் இடிக்கப்பட்டது. 2019 ஜூன் மாதம் கட்டி முடிக்கப்பட்டது. 2019 ஜூலை மாதம் பிரதமரின் ஆவாஸ் யோஜ்னா திட்டத்தில் 864 வீடுகளும் வருவதாக் அடையாளப்படுத்தப்படுகிறது, 2020 அக்டோபர் மாதம் 15-ம் தேதி அரசாணை வெளியிடப்படுகிறது. கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு ரூ1.5 லட்சம் கொடுக்க வேண்டும் என்று அரசாணை வெளியிட்டால் அது எப்படி நியாயமாகும்?

பணம் கொடுத்தால்தான் வீடு கொடுப்போம் என்று இப்போது வரை நிலுவையில் வைத்துள்ளனர். வீடு இருந்தும் மக்கள் தகரக் கொட்டகையில் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், தி.மு.க 77-வது வட்டச் செயலாளர் கமலக் கண்ணன், தனியார் நுண் நிதி நிறுவனத்தில் கடன் வாங்க உதவுவதாக மக்கள் அனைவருக்கும் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், நுண் நிதி நிறுவனங்கள் மக்களிடம் கடுமை காட்டக் கூடாது என்று கூறி வரும்போது, தி.மு.க வட்டச் செயலாளர் இப்படி செய்து வருகிறார். வீடு ஒதுக்கீடு பிரச்னை ஒருபுறமிருக்க கட்டடத்தின் தரமும் மோசமாக இருக்கிறது.

திமுக நிர்வாகி அனுப்பிய மெசேஜ்

மக்களிடம் பணம் பெறாமல், அவர்களுக்கு வீடு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி விரைவில் சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நாங்கள் முதல்வரைச் சந்திக்க இருக்கிறோம்” என்கிறார் விரிவாக.

ஜி. செல்வா

Also Read: சென்னை: `வீடுகளை அகற்ற எதிர்ப்பு’ - கூவம் ஆற்றில் இறங்கி மக்கள் போராட்டம்

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் பெற, குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் சிலரைத் தொடர்பு கொண்டு பேசினோம். அவர்கள் தெரிவித்ததாவது, `` கே.பி.பார்ககில் உள்ள 864 வீடுகள் கொண்ட குடியிருப்புகள், பிரதமரின் ஆவாஸ் யோஜ்னா திட்டத்தின் கீழ் வருகின்றன. அதன்படி மாநில அரசு ரூ7 லட்சம், மத்திய அரசு ரூ1.5 லட்சம், பயனாளர்கள் ரூ4.68 லட்சம் கொடுக்க வேண்டும் என்று முதலில் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பயனாளர்கள் கட்ட வேண்டிய தொகை அதிகமாக இருந்ததால், அதை அவர்களால் செலுத்த முடியாது என்று எங்களுக்கே தெரிந்தது. அதனால், அந்தத் தொகையைக் குறைத்து ரூ1.5 லட்சம் செலுத்தலாம் என்றும் 15 அக்டோபர், 2020-ல் முடிவெடுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி ரூ13 லட்சம் மதிப்பிலான ஒரு வீட்டுக்கு, தமிழ்நாடு அரசு ரூ10.03 லட்சம், மத்திய அரசு ரூ1.5லட்சம், பயனாளர்கள் ரூ1.5 லட்சம் பங்களிப்பது என்று முடிவானது. தமிழ்நாடு அரசு கூடுதலாக ரூ3 லட்சம் சுமையை ஏற்றிருக்கிறது.

முன்பிருந்தே நாங்கள் மக்களிடம் ‘ நீங்களும் பணம் செலுத்த வேண்டியது இருக்கும்’ என்று சொல்லி வந்திருக்கிறோம். குலுக்கல் நடத்தும்போதும், மக்களிடம் இது குறித்து கூறப்பட்டது. மக்களுக்கு தாங்கள் பணம் செலுத்த வேண்டும் என்று நன்றாகவே தெரியும். அங்கிருக்கும் குடும்பங்கள் அனைவராலும், பணத்தை ஏற்பாடு செய்ய முடியாது என்று எங்களுக்கும் தெரியும். அதனால், வாரியத்தின் சார்பில் அவர்களுக்கு நிதி நிறுவனங்கள் மூலம் கடன் ஏற்பாடு செய்து வருகிறோம். பணம் செலுத்தினால், அவர்கள் இன்றே கூட குடியேறலாம். அனுமதியில்லாமல் சில குடும்பங்கள், ஏற்கெனவே குடியேறிவிட்டனர். அவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக பணம் செலுத்தி வருகின்றனர்” என்கிறார்கள்.

அமைச்சர் தா. மோ. அன்பரசன்

இது குறித்து குடிசை மாற்று வாரியத் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் விளக்கம் கேட்டபோது, “ கே.பி. பார்க்கில் 864 வீடுகள் இருக்கும் குடியிருப்புகள் பிரதமரின் ஆவாஸ் யோஜ்னா திட்டத்தில் வருவதால், ரூ1.5 லட்சம் கொடுக்க வேண்டும் என்கிறோம். பணம் செலுத்தக்கூடாது என்பதற்காகவே சிலர் கட்டடம் ஆடுவதாகவெல்லாம் புரளியை கிளப்பிவிட்டனர். பூச்சு வேலைகளில் பிரச்னை இருப்பது தெரிய வந்திருக்கிறது. கட்டத்தின் தரம் குறித்து ஐஐடி வல்லுநர்களை ஆய்வு செய்யச் சொல்லியிருக்கிறோம். அதை சரிசெய்யும் பணிகள் நடந்து வருகின்றன. மக்கள் மாதத் தவணைகளில் பணம் செலுத்த கடனுதவியும் ஏற்பாடு செய்து வருகிறோம்” என்றார்.

சென்னை மக்கள்

நமது ஆய்வில் தெரிய வருவது: குடியிருப்புகள் கட்டப்படும்போது, பயனாளர்கள் ஒரு பங்குத் தொகையை செலுத்த வேண்டும் என்று குடிசை மாற்று வாரியம் சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாகவோ, அதை மக்கள் ஒப்புக் கொண்டதாகவோ எந்தவித எழுத்து வடிவிலான ஆவணங்களும் இல்லை. வாய் மொழியாக மக்களிடம் தெரிவித்ததாகவே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒருவேளை ஆவணங்கள் இருக்கும்பட்சத்தில் அதைப் பிரசுரிக்கவும் தயாராக இருக்கிறோம். கடன் ஏற்பாடுகளை அரசு செய்து கொடுத்தாலும், மாதத் தவணை செலுத்த எத்தனைக் குடும்பங்களால் முடியும் என்பது மனிதாபிமான அடிப்படையில் அரசு சிந்தக்க வேண்டியத் தேவையிருக்கிறது. ’குடிசைகளுக்கு மாற்று’ என்பது மக்கள் நலத்திட்டம். அது மக்களின் வாழ்வை முன்னேற்ற வேண்டுமே தவிர, கூடுதல் சுமைகளை ஏற்றுவதாக இருக்கக் கூடாது.

`மெட்ராஸ் டே' Quiz

`மெட்ராஸ் டே' Quiz

நீங்க தஞ்சாவூரா இருக்கலாம், வந்தவாசியா இருக்கலாம், மதுரையா இருக்கலாம். இல்ல... கன்னியாகுமரியாகூட இருக்கலாம். ஆனா, நம்ம எல்லாருடைய லைஃப்லயும் சென்னை கலந்திருக்கும். நாம சென்னையைக் கடந்திருப்போம். அப்படி நம்ம லைஃபோட கலந்திருக்குற சென்னையைப் பத்தி நமக்கு எவ்வளவு தெரியும்? இந்த quiz -ஐ attend பண்ணுங்க!

கலந்துகொள்ள க்ளிக் செய்க - https://bit.ly/3gl7qMl



source https://www.vikatan.com/government-and-politics/politics/kp-park-people-not-allocated-houses-government-asked-to-pay-rs-15-lakh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக