ஐரோப்பா என்றால் எல்லோருக்கும் ஓர் மயக்கம்தான். சினிமாக்களிலும் நாம் பார்க்கும், கதைகளிலும் நாம் படிக்கும் ஐரோப்பா என்பது ஒரு கனவுலகம். தமிழ் திரைப்படங்களில் நாயகனும் நாயகியும் காதல் வசப்பட்ட உடனே காட்சி ஐரோப்பாவுக்கு மாறிவிடும். ஐரோப்பா என்றால் செல்வம், அழகு, காதல், திறந்த கலாச்சாரம், அதி உயர் வாழ்க்கைத் தரம், நிலையான அரசியல் என உலகின் அத்தனை ஆதர்சங்களும் நம் மனக்கண் முன் விரியும். ஏனெனில் இன்றைய இளைஞர்களின் கனவு தேசம் ஐரோப்பா. இந்தியா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமே வியந்து பார்க்கும் பிரமாண்டம் அது.
உலக வரைபடத்தை எடுத்துக் கொண்டால் அதன் செழிப்பான இடங்களில் ஐரோப்பா முதலிடத்தை பிடிக்கும். உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலை எடுத்துக் கொண்டால் அதில் பல ஐரோப்பிய நாடுகள் பட்டியலின் முதல் வரிசையை நிரப்பியிருக்கும். உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை எடுத்துக்கொண்டால் அதில் முதல் இடம் ஒரு ஐரோப்பிய நாட்டுக்கே கிடைத்திருக்கும். அதே போல உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை எடுத்தாலும் ஐரோப்பிய நாடுகளே முதல் இடத்துக்கு மாறி மாறி போட்டி போட்டுக்கொண்டிருக்கும்.
ஐரோப்பாவில் அப்படி என்னதான் இருக்கிறது, ஐரோப்பா உண்மையிலேயே சொர்க்க பூமியா, அங்கு மக்களுக்கு கவலைகளே இல்லையா, எல்லோரின் வாழ்க்கைத்தரமும் உச்சத்திலேயே இருக்கிறதா, எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் தேனாறும் பாலாறும் ஓடுகிறதா... அப்படியென்றால் மற்ற கண்டங்களை விட ஐரோப்பியர்களுக்கு மட்டுமே தெரிந்த அந்த மேஜிக் பவர் என்ன?
இந்த கேள்விகளுக்கு விடைகாண நாம் வரலாற்றின் 4-ம் நூற்றாண்டு வரையாவது பின்னோக்கி செல்ல வேண்டும். ரோமன் பேரரசு உடைந்த Dark Ages என அழைக்கப்பட்ட இருண்ட யுகத்திலேயே ரோமன் ஆட்சியின் கீழ் இருந்த பிரதேசங்கள் அனைத்தும் பிரிந்து, தமக்கான சுய ராஜ்ஜியத்தை கட்டமைத்துக் கொண்டன. பிளந்த நிலத்தின் உள்ளே இருந்து பசுமையான செடி வேர் விட்டு வெளிவருவது போல, பிளவுபட்ட ஐரோப்பாவில் மெல்ல மெல்ல வளர்ச்சியும் மலர்ச்சியும் துளிர் விட ஆரம்பித்தது. அப்போதிருந்தே ஐரோப்பா ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் செல்வத்திலும் அபிவிருத்தியிலும் முன்னோக்கியே இருந்தது. ஆனாலும் நவீன ஐரோப்பாவை பற்றி பார்க்க நாம் ஒரு 500 வருடங்கள் வரை முன்சென்று பார்த்தாலே போதுமானது என்பதால் வரலாற்றில் கொஞ்சம் முன்னே வருவோம்.
நாம் கண்டும், கேட்டும், பார்த்தும் தெரிந்து கொண்ட அந்த பகட்டாக ஜொலிக்கும் பக்கம்தான் ஐரோப்பாவின் உண்மை முகமா இல்லை வெளிச்சத்துக்கு வராத இருள் பிரதேசம் உள்ளதா?
ஐரோப்பா எப்படி உருவானது?
உலகின் ஏழு கண்டங்களில் இரண்டாவது சிறிய கண்டமான ஐரோப்பா பூமியின் மேற்பரப்பில் சுமார் 2 சதவிகிதத்தை உள்ளடக்கியிருக்கிறது. 'ஐரோப்பா' என்ற பெயர் பண்டைய கிரேக்க புராணமான ஜீயஸ் (Zeus)-ல் இருந்து வந்ததாக ஒரு சுவாரஸ்ய கதை உண்டு. இந்த கதையின்படி, பண்டைய கிரேக்க மதத்தில் வானம் மற்றும் இடியின் கடவுள் ஜீயஸ், ஒலிம்பஸ் மலையில் ஆட்சி செய்தார்.
அவர் ஒரு நாள் ஒரு கடற்கரையோரத்தில் அழகான ஃபீனீசிய இளவரசியான யூரோபா குளிப்பதைப் பார்த்தாராம். பார்த்த முதல் பார்வையிலே காதலில் விழுந்த Zeus தன்னை ஒரு அற்புதமான வெள்ளை காளையாக மாற்றிக்கொண்டு வந்து அவளை அணுகியிருக்கிறார். அந்த காளை மிகவும் கம்பீரமாகவும் அழகாகவும் இருக்க உடனே அதன்பால் ஈர்க்கப்பட்ட யூரோபா இளவரசி தனது கழுத்தில் அணிந்திருந்த அழகிய வண்ண வண்ண பூக்களின் மாலையைக் கழற்றி அந்தக் காளையின் கழுத்தில் போட்டு அதன் முதுகில் ஏறி அமர்ந்தாளாம்.
அவள் ஏறி அமர்ந்ததும் அந்தக் காளை கடல் நீரின் மேற்பரப்பு முழுவதும் சுற்றிச் சுற்றி நீந்தி, கிரீட் தீவுக்கு இளவரசியை கடத்திச் சென்றுள்ளது. அதன் பின் கிரீட் தீவில் ஜீயஸ் மற்றும் யூரோபா இருவரும் காதலர்களாக மாறி, கலவி கொண்டு அவர்களுக்கு மூன்று மகன்களும் பிறந்துள்ளனர்.
அதேவேளை கடலில் குளிக்கச் சென்ற ஃபீனீசிய இளவரசியான யூரோபாவைக் காணாமல் கலங்கிய அவள் குடும்பத்தினர் அவளைத் தேட அவளின் மூன்று சகோதரர்களை அனுப்பியுள்ளனர் அந்தத் தேடல் தோல்வியிலேயே முடிவுற்றது. ஆனாலும் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முக்கியமான நகரங்களை கண்டுபிடித்து ஏஜியனைச் சுற்றியுள்ள (ஏஜியன் கடல் என்பது ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையிலான மத்திய தரைக்கடலின் ஒரு பகுதி) பல்வேறு பகுதிகளுக்கு அவளின் பெயர்களைச் சூட்டினார்கள் எனப்படுகிறது. பிற்காலத்தில் இவை அனைத்தும் ஒன்றிணைந்து ஐரோப்பா என்று அழைக்கப்பட்டது என்பது ஒரு கதையாக இன்று வரை சொல்லப்படுகிறது.
ஆனால், பண்டைய கிரேக்க எழுத்தாளரும், புவியியலாளரும், வரலாற்றாசிரியருமான ஹெரோடோடஸ் (Herodotus) என்பவர் ஃபீனீசிய இளவரசியின் கதைக்கும் ஐரோப்ப கண்டத்தின் பெயருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்லியிருக்கிறார். அவர் எழுதிய நான்கு வரலாற்று புத்தகத்திலும் “உண்மையில் ஐரோப்பாவுக்கு அதன் பெயர் எங்கிருந்து வந்தது, அல்லது யார் கொடுத்தது என்பது யாருக்கும் தெரியாது. ஏனைய கண்டங்களைப் போல பெயரிடப்படாமல் இருந்த ஐரோப்பா, யூரோபா இளவரசியின் பெயரிலிருந்து வந்தது என்று சொல்வது சாத்தியமில்லை. ஏனெனில் யூரோபா இளவரசி ஆசியாவுக்கோ அல்லது ஐரோப்பாவுக்கோ ஒருபோதும் சென்றதில்லை" என்கிறார்.
எது எப்படியோ 'ஐரோப்பா' என்ற பெயரின் தோற்றம் பற்றிய கோட்பாடுகள் பண்டைய கிரேக்கத்தை நோக்கித்தான் செல்கிறது. கிரேக்க மொழியில் யூரோபா என்ற பெயர் 'அகன்ற முகம்' என்று பொருள்படும். இது முழு நிலவைக் குறிக்கிறது. பண்டைய கிரேக்கர்கள் முதலில் யூரோபா என்ற வார்த்தையை மத்திய கிரேக்கத்தின் புவியியல் பகுதிக்கும், பின்னர் முழு கிரேக்கத்திற்கும் பயன்படுத்தினர். 500 BCE வாக்கில் யூரோபா என்ற வார்த்தை ஐரோப்பாவின் முழு கண்டத்தையும், கிரேக்கத்துடன் அதன் கிழக்குப் பகுதியையும் சேர்த்து குறிப்பிட்டது.
ஐரோப்பாவின் புவியியல்!
ஐரோப்பாவின் புவியியல் என்றதும் பள்ளி பாடபுத்தம் சிலருக்கு நினைவுக்கு வரலாம். ஆனால், ஐரோப்பாவின் புவியியலைத் தெரிந்துகொள்ளாமல் ஐரோப்பாவை புரிந்துகொள முடியாது. யூரேசியாவின் மாபெரும் ‘சூப்பர் கண்டத்தின்’ மேற்கு நிலம் ஐரோப்பா. அது ஆசியாவிலிருந்து யூரல் நதி, காஸ்பியன் கடல், கருங்கடல்கள் உள்ளிட்ட தொடர் நீர்நிலைகளால் பிரிக்கப்பட்டுள்ளது.
உலகின் இரண்டாவது மிகச்சிறிய கண்டமான ஐரோப்பா யூரேசியாவின் மேற்கு நோக்கிய தீபகற்பங்களால் ஆனது. உலகின் மொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட பதினைந்தில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ள இது வடக்கே ஆர்க்டிக் பெருங்கடலிலும், மேற்கில் அட்லான்ட்டிக் பெருங்கடலிலும், தெற்கே மத்தியதரைக் கடலிலும், கிழக்கில் ஆசியாவிலும் எல்லைகளைக் கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் தகவலின் படி ஐரோப்பாவில் மொத்தம் 44 நாடுகள் உள்ளடங்குகின்றன. பொருளாதார மற்றும் அரசியல் தொழிற்சங்கமான ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) 27 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லாட்வியா, லிதுவேனியா, லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்லோவாக்கியா , ஸ்லோவேனியா, ஸ்பெயின் மற்றும் சுவீடன் போன்றவை இந்த லிஸ்ட்டில் அடங்கும்.
அதே வேளை ஐரோப்பிய பொருளாதார பகுதியில் (EEA) ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன் மற்றும் நார்வே ஆகியவையும் சேர்ந்து மொத்தம் 30 நாடுகள் உள்ளடங்குகின்றன. ஐரோப்பா கண்டத்தில் இருந்தாலும் கூட சுவிட்சர்லாந்து EU மற்றும் EEA இரண்டிலும் உறுப்பினர் இல்லை. ஆனால், அது ஐரோப்பிய யூனியனின் ஒரு முக்கிய அங்கமாகவே பார்க்கப்படுகிறது. அதாவது சுவிஸ் நாட்டவர்களுக்கு ஐரோப்பிய யூனியனின் மற்ற நாடுகளில் வாழவும் வேலை செய்யவும் உரிமைகள் வழங்கப்பட்டு உள்ளன.
வடக்கு ஐரோப்பா என்பது மேற்கு ஐரோப்பாவின் வடக்கு பகுதியான, ஆங்கில சேனல் மற்றும் பால்டிக் கடல் ஆகியவற்றைக் குறிக்கிறது. வடக்கு ஐரோப்பாவை ஸ்காண்டிநேவியா, பிரிட்டிஷ் தீவுகள் மற்றும் பால்டிக்ஸ் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். நார்வே, ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, ஐக்கிய இராஜ்ஜியம்(United Kingdom), அயர்லாந்து, லிதுவேனியா, லாட்வியா, எஸ்டோனியா போன்ற நாடுகள் வடக்கு ஐரோப்பவில் வருகின்றன.
மத்திய தரைக்கடல் ஐரோப்பா என்று அழைக்கப்படும் தெற்கு ஐரோப்பா, பதினைந்து நாடுகளைக் கொண்டுள்ளது. 15 கோடி மக்களுக்கும் அதிகமாக வாழும் இங்கே அல்பேனியா, அந்தோரா, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, குரோஷியா, கிரீஸ், இத்தாலி, மால்டா, மான்ட்டினீக்ரோ வடக்கு மசிடோனியா, போர்ச்சுகல், சான் மரினோ, செர்பியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், வாடிகன் போன்ற நாடுகள் உள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையினால் கிழக்கு ஐரோப்பா என்று கருதும் 10 நாடுகள் அனைத்தும் ஒரு காலத்தில் பனிப்போரின் போது சோவியத் யூனியன் தலைமையிலான கிழக்கு கம்யூனிஸ்ட் கூட்டமைப்பின் ஒரு பகுதியாகவே இருந்தது. 1990-களின் முற்பகுதியில் சோவியத் யூனியனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, பிராந்தியத்தின் பல நாடுகள் மேற்கு நாடுகளுடன் மிக நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டு, ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோவின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இவை கிழக்கு ஐரோப்பாவின் நாடுகள் என்ற கட்டமைப்புக்குள் உள்ளடங்குகின்றன. பெலாரஸ், பல்கேரியா, செக் குடியரசு, ஹங்கேரி, போலந்து, மால்டோவா, ருமேனியா, ரஷ்யா, ஸ்லோவாக்கியா, உக்ரைன் போன்றவையே இந்த பத்து நாடுகள்.
சரி, இவ்வளவு செழிப்பான நாடுகளின் கூட்டணியை கொண்ட ஐரோப்பாவின் ஒரு பகுதி எப்படி பொருளாதார ரீதியில் அசைக்க முடியாத பெரும்பலம் கொண்டும், மறு பகுதி சற்று பலவீனமாகியும் போனது? மூன்று நூற்றாண்டுகள் பின்னோக்கி செல்லலாமா?!
யூரோ டூர் போவோம்!
source https://www.vikatan.com/news/general-news/history-and-interesting-facts-about-europe
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக