Covid Question: எனக்கு ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லை. நான் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா? அதற்கு முன் வேறு ஏதேனும் டெஸ்ட் எடுக்க வேண்டியிருக்குமா?
- குமார் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த மருத்துவர் சஃபி.
``நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். இது மிகப் பெரிய ரிஸ்க். கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு கட்டுப்பாட்டில் இல்லாத ரத்தச் சர்க்கரை அளவு தடையாக இருக்குமா என்று யோசிக்கிறீர்கள். அதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தாலே இது ஆபத்தான நிலைதான். கட்டுப்பாடில்லாத நீரிழிவு உள்ளவர்களுக்கு கோவிட் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் அதன் செயல்திறன் குறைவாக இருக்கவும் உங்களுக்கு வாய்ப்புகள் அதிகம். ரத்தச் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது, தடுப்பூசி போடுவதால் உடலில் உருவாகும் ஆன்டிபாடி செல்கள் குறைவாகவே வேலை செய்யும். தொற்றை எதிர்ப்பதற்கான ஆன்டிபாடி செல்கள் உடலில் குறைவாகத்தான் உருவாகும்.
நீங்கள் இதுவரை நீரிழிவுக்கு என்ன சிகிச்சைகள் மேற்கொண்டு வருகிறீர்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை இதுவரை எந்த மருந்துகளும் எடுக்காமலிருந்தால் உடனே நீரிழிவு மருத்துவரைச் சந்தித்து தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு அவர் பரிந்துரைக்கும் சிகிச்சைகளைத் தொடங்குங்கள். ஒருவேளை மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கும் நிலையிலும் ரத்தச் சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லை என்றால், HbA1c எனும் டெஸ்ட்டை செய்துபார்த்து அதன் அளவு என்னவென்று தெரிந்துகொண்டு நீரிழிவு மருத்துவரின் உதவியோடு ஒரே வாரத்தில் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். அதன் பிறகு, கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தாமல் தடுப்பூசி போடக்கூடாதா என்றால் போட்டுக்கொள்ளலாம். ஆனால், அதன் செயல்திறன் குறைவாக இருக்கும்.
Also Read: Covid Questions: ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்போது தடுப்பூசி போட்டால் ௭ன்னவாகும்?
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/my-blood-sugar-levels-are-not-in-control-can-i-take-covid-vaccine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக