Ad

சனி, 17 ஜூலை, 2021

இந்தோ மசாலா பாஸ்தா | பாஸ்தா கெட்டிக் குழம்பு | பாஸ்தா சாலட் - பாஸ்தா ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

டயட் இருப்பவர்கள் வாரத்தில் ஒருநாள் `சீட்டிங் டே' என்ற பெயரில் விரும்பிய உணவுகளை உண்ண அனுமதிக்கப் படுவார்கள். வாரத்தின் ஆறு நாள்கள் ஆரோக்கியமாக, பார்த்துப் பார்த்துச் சாப்பிடுகிற அவர்கள், ஒருநாள் மட்டும் கலோரிகளை கணக்குப் பண்ணாமல் விரும்பியதைச் சாப்பிட்டு, மீண்டும் அடுத்த ஆறு நாள்களைக் கடக்கத் தயாராவார்கள். ஆரோக்கியமான உணவுகளைத் தேடித்தேடிச் சாப்பிடுகிற நீங்களும் வாரத்தில் ஒருநாள் அதற்கு விலக்கு அளிக்கலாம். அந்த ஒருநாள் மட்டும் மைதாவுக்கும் வெண்ணெய்க்கும் எண்ணெய்க்கும் அனுமதி கொடுத்து விரும்பியதைச் சமைத்துச் சாப்பிடலாம். அந்த வகையில் இந்த வார வீக் எண்டில் உங்கள் சீட்டிங் டேவுக்கு விதம் விதமான பாஸ்தா சமையல் செய்து சாப்பிடலாமே...

தேவையானவை:

பென்னே பாஸ்தா - 500 கிராம்
துவரம்பருப்பு - கால் கப்
பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தக்காளி விழுது - அரை கப் (தக்காளியை வேகவைத்து, தோல் நீக்கி அரைத்த விழுது)
காய்கறிக் கலவை (கேரட், பட்டாணி, பீன்ஸ், ஸ்வீட்கார்ன்) - ஒரு கப்
தக்காளி சாஸ் - கால் கப்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் உலர்ந்த (மாங்காய்த்தூள்) - கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
சர்க்கரை - அரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

இந்தோ மசாலா பாஸ்தா

செய்முறை:

கொதிக்கும் நீரில் உப்பு, 2 டீஸ்பூன் எண்ணெய், பாஸ்தாவைச் சேர்த்து, சிறிது நேரம் வேகவிடவும். மிருதுவாக வெந்த உடன் இறக்கி வடிகட்டி பாஸ்தாவையும் வடிகட்டிய தண்ணீரையும் தனித்தனியாக எடுத்து வைக்கவும். துவரம்பருப்புடன் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பருப்பு அரை வேக்காடு பதமாக வெந்த பிறகு இறக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி மஞ்சள்தூள், சீரகம் தாளிக்கவும். அதனுடன் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பிறகு, தக்காளி விழுது, தக்காளி சாஸ் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் காய்கறிக் கலவை, மிளகாய்த்தூள், ஆம்சூர் பவுடர், சர்க்கரை, உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். காய்கறிகள் நன்கு வதங்கியதும் துவரம் பருப்பு, பாஸ்தா, ஒரு கப் வடிகட்டிய பாஸ்தா தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். கலவை நன்கு வெந்து வரும்போது கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

தேவையானவை:

பாஸ்தா (மேக்ரோனி) - அரை கப்
தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
சோம்பு, கசகசா - தலா அரை டீஸ்பூன்
தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)
புளி - நெல்லிக்காய் அளவு
மிளகாய்த்தூள் - ஒன்றை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
தோலுரித்த சின்ன வெங்காயம் - 5
பூண்டு - 5 பல் (இரண்டாக நறுக்கவும்)
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

பாஸ்தா கெட்டிக் குழம்பு

செய்முறை:

புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். தேங்காய்த் துருவலுடன் சோம்பு, கசகசா, தக்காளி, வெங்காயம் சேர்த்து அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கிக் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளிக்கவும். அத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு, அரைத்த மசாலா, மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும்வரை வதக்கவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, புளிக்கரைசல், உப்பு, பாஸ்தா சேர்த்து வேகும் வரைக்கும் கொதிக்க விடவும். கொத்தமல்லித்தழை தூவிக் கிளறி, இறக்கிப் பரிமாறவும். ஆறிய பிறகு குழம்பு சற்று கெட்டியாகும். தேவையானால் தண்ணீர் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.

தேவையானவை:

சுருள் பாஸ்தா - 250 கிராம்
வேகவைத்த புரொக்கோலி - கால் கப்
கறுப்பு ஆலிவ் - 2 டேபிள்ஸ்பூன்
செர்ரி தக்காளி – 8 (பாதியாக நறுக்கவும்)
வேகவைத்த ஸ்வீட்கார்ன் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - சிறிதளவு

இத்தாலியன் டிரஸ்ஸிங் செய்ய :

ஆலிவ் எண்ணெய் - முக்கால் கப்
பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கவும்)
வினிகர் - கால் கப்
சர்க்கரை - அரை டீஸ்பூன்
ஆரிகானோ - அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
கடுகு பேஸ்ட் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

பாஸ்தா சாலட் வித் இத்தாலியன் டிரஸ்ஸிங்

செய்முறை:

இத்தாலியன் டிரஸ்ஸிங் செய்ய கொடுத்துள்ள பொருள்களைக் கண்ணாடி பாட்டிலில் ஒன்றாகச் சேர்த்துக் குலுக்கவும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து, தேவையானபோது பயன்படுத்திக் கொள்ளலாம். கொதிக்கும் நீரில் உப்பு, எண்ணெய், பாஸ்தாவைச் சேர்த்து, மூன்று நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும்.

பிறகு, பாஸ்தாவை வடிகட்டி குளிர்ந்த நீரால் ஒருமுறை அலசவும். பெரிய பௌலில் பாஸ்தா, புரொக்கோலி, கறுப்பு ஆலிவ், செர்ரி தக்காளி, ஸ்வீட்கார்ன், அரை கப் இத்தாலியன் டிரஸ்ஸிங் சேர்த்து நன்கு கலக்கவும். இதை ஃபிரிட்ஜில் நான்கு மணி நேரம் வைத்து எடுத்துப் பரிமாறவும்.



source https://www.vikatan.com/food/recipes/indo-masala-pasta-pasta-kozhambu-pasta-salad-pasta-special-weekend-recipes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக