Ad

சனி, 17 ஜூலை, 2021

நெல்சன் மண்டேலா: "விழாமலே வாழ்ந்தோம் என்பதல்ல பெருமை.." - தென்னாப்பிரிக்க காந்தியின் தினம் இன்று!

முதல் உலகப்போர் முடிவுக்கு வந்த 1918-ம் ஆண்டில்,உலகிற்கு தனது அழுகுரலைப் பதிவு செய்தது ஒரு குழந்தை. பிறக்கும்போது எல்லாக் குழந்தைகளும் எழுப்பும் சாதாரண அழுகுரல் என்பதால் அது வியப்பதற்கில்லை. ஆனால், அந்த குரல்தான் பின்னாட்களில், தென்னாப்பிரிக்காவின் சரித்திரம் படைத்த உரிமைக்குரலாக ஓங்கி ஒலித்தது. 9 வயதில் தன் தந்தையை இழந்த அந்த சிறுவன், ஆடுமேய்த்துக்கொண்டே படிக்கிறான். 'சோசா' பழங்குடி இனத்தைச் சேர்ந்த அந்த சிறுவன்தான், அவன் குடும்பத்திலேயே முதன் முதலில் பள்ளிக்குச் சென்றவன். ஒரு கையில் ஆடு மேய்க்கும் குச்சி, இன்னொரு கையில் படிக்கும் பாடப்புத்தகம் என பள்ளிப்பருவத்தைக் கடந்தவனால், அவனது கல்லூரிப்பருவத்தை எளிதாகக் கடக்க முடியவில்லை. காரணம், புறச்சூழல் அவனுக்கு வேறொரு பாடத்தை, வலியக் கற்றுக்கொடுத்தது. அது நிறவெறிகொண்ட வெள்ளையர்களால், பூர்வகுடி கறுப்பின மக்களுக்கு நடத்தப்பட்ட 'அடிமைப் பாடம்'. தென்னாப்பிரிக்காவின் பெரும்பான்மையான பூர்வகுடி கருப்பின மக்களை, பிரிட்டிஷ், பிரான்ஸ், டச்சு உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலிருந்து குடியேறிய சிறுபான்மை வெள்ளையர்கள் அடிமை செய்து ஆளத்தொடங்கினர். தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்கள், தங்கள் தாய்மண்ணிலேயே சொந்தமாக நிலம் வைத்துக்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டனர். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டனர். ஒரே நாட்டுக்குள் பயணிக்க வெள்ளையர்கள் எங்களின் அனுமதியும், பாஸ்போர்ட் உரிமமும் கொண்டிருக்க வேண்டும் எனக் கண்டிக்கப்பட்டனர். உச்சபட்சமாக வாக்களிக்கும் உரிமைகூட பறிக்கப்பட்டு, உள்நாட்டு அகதிகளாக நடத்தப்பட்டனர். கொத்தடிமைகளாக சுரங்கப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Nelson Mandela

தென்னாப்பிரிக்க மண்ணின் நிலக்கரியைச் சுரண்டுவதுபோல, தனது கறுப்பின மக்களின் உழைப்பையும் உரிமையையும் ஒருசேர சுரண்டிக்கொண்டிருக்கும் வெள்ளையர்களின் ஆதிக்கத்தைக் கண்டுணர்ந்தவனாய், அவற்றுக்கெதிராக கிளர்ந்தெழுகிறான், அந்த இளைஞன். "இனி தனது மக்களின் விடுதலை வாழ்வுக்கு ஆடுமேய்க்கும் குச்சிகள் வழிகாட்டாது, அதிகாரக் கைப்பற்றலும், உரிமை நிலைநாட்டலும்தான், வெள்ளை ஏகாதிபத்தியத்தியத்தை உடைத்து கறுப்பின மக்களுக்கான விடுதலையை வென்றுதரும்"என்ற அரசியல் பாடத்தை கல்வெட்டாய் நெஞ்சில் பதிக்கிறான்.

1939-ம் ஆண்டு, தனது 21-வது வயதில், அடிமைப்பட்டுக்கிடந்த தென்னாப்பிரிக்க இளைஞர்களிடம் விடுதலை உணர்வை விதைக்கிறான். அவர்களை அமைப்பாய் ஒன்று திரட்டுகிறான். "கறுப்பின மக்களாகிய நாம் அடக்கப்படுகிறோம். நமக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகிறது. நாம் பயணம் செய்வதற்கு நம் நாட்டினுள்ளேயே அனுமதி பெற வேண்டியுள்ளது. நிலவுடமையாளர்களாக நம் கறுப்பின மக்கள் இருப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இவை சொந்த மக்களுக்கு எதிரானவை. நீதியற்றவை. இவற்றிற்கு எதிராக நாம் போராட வேண்டும்” என போர்க்குரல் எழுப்புகிறான்.

அந்த புரட்சிகர இளைஞன் நெல்சன் மண்டேலாதான் "தென்னாப்பிரிக்காவின் காந்தி"என போற்றப்படுகிறான். இன்று அவரது 103-வது பிறந்ததினம். கறுப்பின மக்களுக்காக போராடி சுமார் 27 ஆண்டுகளை சிறையில் கழித்த அந்த மகத்தான மாமனிதனின் வாழ்க்கையை, அவர் உதிர்த்த அனுபவ மொழிகளைக்கொண்டே வரலாற்று மாலையாகத் தொடுப்போம்!

"உங்களால் இந்த உலகை மாற்ற பயன்படுத்த முடிந்த மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வியே"

மண்டேலா

போராட்ட உணர்வு எந்த அளவுக்கு இருந்ததோ, அதே அளவுக்கு கல்வியின் மீதான நாட்டமும் மண்டேலாவுக்கு இருந்தது. மண்டேலாவின் உண்மையான பெயர் ரோலிஹ்லகலா மண்டேலா (Rolihlahla Mandela). 'ரோலிஹ்லகலா'என்ற பெயருக்கு 'தொல்லை கொடுப்பவன் அல்லது பிரச்சனையை உருவாக்குபவன்'என்று அர்த்தம். பெயருக்கேற்றபடியே, வெள்ளை ஆதிக்கத்திற்கு தொல்லை கொடுத்தப் போராளியாக வாழ்ந்தார் என்பது வரலாறு. 'நெல்சன்'என்ற பெயர், மண்டேலா ஆரம்பக்கல்வியை கற்றபோது, பள்ளி ஆசிரியர் அவருக்கு வைத்த பெயர். ஆரம்பக்கல்வியை லோக்கல் மிஷரிப்பள்ளியில் படித்தவர், 1938-ம் ஆண்டு தனது உறவினர் ஜோன்கின்டாபா உதவியுடன் மேல்நிலைப்பள்ளியை முடித்தார். பின் 1939-ம் ஆண்டு கல்லூரிப்படிப்புக்காக லண்டனில் இருக்கும் 'போர்ட்ஹேர்' (University of Fort Hare) பல்கலைக்கழகத்துக்குச் சென்றார். ஏனெலில், அந்த ஒரே பல்கலைக்கழகம் தான் தென்னாப்பிரிக்காவின் கறுப்பினத்தவர்களுக்கு மேலைநாட்டுக் கல்வியை வழங்கியது. அந்தக் கல்லூரியிலும் மாணவர்களின் உரிமைப் போராட்டத்தில் பங்கேற்று முன்னின்று நடத்தியதால், பல்கலைக்கழகத்தால் வெளியேற்றப்பட்டார். அதிலும் மனம் தளராத மண்டேலா, தாயகம் திரும்பியதும், அங்குள்ள ஜோகானஸ்பேர்க் பகுதி கல்லூரியில் சேர்ந்து 1941-ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்தார்.

"ஒரு நல்ல தலைமை மற்றும் ஒரு நல்ல இதயம் இரண்டும் எப்போதுமே ஒரு வல்லமைமிக்க இணை"

மக்களின் விடுதலைக்காகப் போராட நினைக்கும் ஒரு போராளி, மக்களிடம் சென்று பணியாற்ற சரியான களம் ஒன்றை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். நெல்சன் மண்டேலா, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸை (African National Congress -ANC) தேர்ந்தெடுத்தார். 1942-ம் ஆண்டு அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அதன்பிறகு மிகத்தீவிரமான களப்பணியில் ஈடுபடத்தொடங்கினார். 1948-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று, தென்னாப்பிரிக்காவில் ஆட்சிப்பொறுப்பேற்ற புதிய அரசு, கறுப்பின மக்கள் மீதான அடக்குமுறையை மேலும் கட்டவிழ்த்துவிட்டது. புதிய சட்டங்களை கொண்டுவந்து மக்களை ஒடுக்கியது. இன மற்றும் நிற அடிப்படையில் பிரித்து, கறுப்பின மக்களைத் தனியாகக் குடியமர்த்தும் முயற்சியில் ஈடுபட்டது. அரசின் சட்ட முறையிலான அடக்குமுறையை எதிர்த்து, மண்டேலா தனது கல்லூரி நண்பரான ஒலிவர் ரம்போவுடன் இணைந்து 'ஆப்ரிகன் லீகல் பார்ட்னெர்ஷிப்' (African Legal Partnership) என்ற கறுப்பின மக்களுக்கான சட்ட அமைப்பை நிறுவினார். இதன் மூலம், அரசால் பாதிக்கப்பட்ட கறுப்பின மக்களுக்கு சட்ட ஆலோசனையும், உதவியையும் வழங்கினார். மறுபுறம் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் சார்பில் பல அறவழிப் போராட்டங்களையும் ஒருங்கிணைத்து, கட்சியை மக்கள் இயக்கமாக உருமாற்றினார். கடுமையான உழைப்பு, வலிமையான பிரசாரத்தால் கட்சிக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்த மண்டேலாவுக்கு, 1950-ம் ஆண்டு கட்சியின் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. மிக இளம் வயதிலேயே, அதிசிறந்த தலைமைப்பண்பைக் கொண்டிருந்த மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.

மண்டேலா - காந்தி

"சூழ்நிலைகள் அனுமதிக்கும்போது அஹிம்சை ஒரு நல்ல கொள்கை"

அறப்போராட்டங்கள் வாயிலாகவே அடிமைபட்டுக்கிடந்த கறுப்பின மக்களை எழுச்சி பெறச் செய்தார். இனவெறியும், நிறவெறியும் கொண்ட கொடுங்கோல் அரசுக்கு எதிராகப் போராடவும் வழிசெய்தார். நெல்சன் மண்டேலாவின் தொடர்ச்சியான அறபோராட்டங்களால் அதிர்ந்துபோன அரசாங்கம், 1956-ம் ஆண்டு அவரை தேசத்துரோக வழக்கில் கைது க்ஷசெய்து சிறையிலடைத்தது. நான்காண்டு வழக்கு விசாரணைக்குப் பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார். சிறையிலிருந்து வெளிவந்த மண்டேலா, இன்னும் தீவிரமாக மக்கள் மத்தியில் பணியாற்றத் தொடங்கினார். 1960-ம் ஆண்டு மார்ச் 21-ம் நாள் ஒரு மாபெரும் அறவழிப்போராட்டத்தை முன்னெடுத்தார். ஏழாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கூடி நடத்தப்பட்ட அகிம்சை வழிப்போராட்டத்தை, வெள்ளை ஆதிக்க இனவெறி அரசு வன்முறையின் மூலம் ஒடுக்கியது. அமைதியான முறையில் போராடிய மக்கள்மீது, அரசின் காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 69 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.

"தண்ணீர் கொதிக்கத் துவங்கும்போது அதன் வெப்பத்தை அணைப்பது முட்டாள்தனமான செயல்"

மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல், மண்டேலாவின் மனதில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மக்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை உண்டாக்கியது. அதுவரையில், அமைதி வழியைப் பின்பற்றி அறப்போராட்டத்தை நடத்தி வந்த மண்டேலா, ஆயுத வழிப் போராட்டத்தைக் கையிலெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அந்த சூழலை அரசே உருவாக்கியது. 1961-ம் ஆண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் ஒரு அங்கமாக, 'தேசத்தின் ஈட்டி' (Spear of the Nation) என்ற ஆயுதபாரி இயக்கத்தைத் தொடங்கினார்.

அறவழிப்போராட்டத்தையே சமாளிக்க முடியாமல் திணறிய அரசாங்கம், மண்டேலாவின் ஆயுதவழி கொரில்லா தாக்குதல்களால் மிரண்டுபோனது. ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்டது. மண்டேலாவையும் அவரது கூட்டாளிகளையும் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, அவர்களைக் கைதுசெய்யும் முயற்சியில் காவல்துறையினரை அனுப்பியது. மண்டேலாவும் தலைமறைவு வாழ்க்கையில் ஈடுபட்டபடியே, அரசுக்கு எதிரான தாக்குதல்களிலும் ஈடுபட்டு வந்தார். அந்த நிலையில், 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் நாள் ஜோகன்னஸ்பர்க்கின் புறநகர் பகுதியான ரிவோனாவில் தலைமறைவாகத் தங்கியிருந்த மண்டேலாவையும் அவருடன் இருந்த பத்து முக்கிய தலைவர்களையும், மாறுவேடத்தில் நுழைந்த அரசு காவல்துறைனர் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

"உயர்ந்த சிந்தனை உயர்ந்த மனதிலிருந்தே வருகின்றது"

கைது செய்யப்பட்ட மண்டேலா மீது அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தது. அரசை கவிழ்க்க சதி வேலை புரிந்தது, அமைதியைக் குலைத்தது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி குற்றவாளிக்கூண்டில் நிறுத்தியது வெள்ளை அரசாங்கம். 1963-ம் ஆண்டு நடந்த நீதிமன்ற விசாரணையின்போது மண்டேலா பேசிய பேச்சு தென்னாப்பிரிக்க நாட்டையே உலுக்கியது. "நான் ஆப்பிரிக்க மக்களுக்காகப் போராடுவதற்காக என் வாழ்நாளை அர்ப்பணித்திருக்கிறேன். எவ்வாறு வெள்ளையின ஆதிக்கத்தை எதிர்க்கிறேனோ, அதே அளவு கறுப்பின ஆதிக்கத்தையும் எதிர்க்கிறேன். அனைத்து இன மக்களும் வேறுபாடில்லாமல் ஒருங்கிணைந்து வாழும் ஒரு சமுதாயத்தை உருவாக்குவதே எனது நோக்கம். இந்த நோக்கம் நிறைவேறுவதற்காக நான் எனது உயிரைத் துறக்கவும் தயார்"என்று முழங்கினார். அதன் பிறகு, 1964-ம் ஆண்டு ஜூன் 12-ம் நாள் வெள்ளை அரசால் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

"புத்தக வாசிப்பை அனுமதித்தால் சிறையும் சுதந்திரமான இடம்தான்"

சிறைச்சாலைகள், குற்றவாளிகளுக்கான தண்டனைக் கூடங்கள் மட்டுமல்ல. பல உலகத் தலைவர்கள் தங்கள் சிந்தனையை விசாலப்படுத்த உதவிய இடமாகவும் இருந்துள்ளன. அப்படியொரு சிறைச்சாலையில் தன் நாட்டு மக்களுக்காக 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார் நெல்சன் மண்டேலா. இந்தியாவுக்கு ஒரு அந்தமான்தீவு சிறைபோல, தென்னாப்பிரிக்காவுக்கு ராபன்தீவு சிறை இருந்தது. அங்கு தான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார் நெல்சன் மண்டேலா. மனைவி, குழந்தைகள், நண்பர்கள் என யாரையும் சந்திக்கவிடாமல் தடுத்தது அரசு. "இனிமேல் போராட்டத்தில் ஈடுபடமாட்டேன், மன்னிப்பு கோருகிறேன்"என்று சொன்னால் உங்களை விடுதலை செய்கிறோம் என அரசாங்க அதிகாரிகள் மண்டேலாவிடம் வலியுறுத்துகின்றனர். ஆனால் மண்டேலாவோ அவற்றையெல்லாம் ஒற்றைப் புன்னகையில் புறந்தள்ளிவிடுகிறார். அவர் கேட்கும் விடுதலை, நிறவெறிகொண்ட வெள்ளை அரசிடமிருந்து கறுப்பின மக்களுக்கான நிரந்த விடுதலையாகவே இருந்தது.

மண்டேலா

மண்டேலாஅந்த சூழ்நிலையில், மண்டேலாவை விடுதலை செய்யவேண்டும் என நாடு முழுவதும் ஆண்டுக்கணக்கில் போராட்டங்கள் தொடர்ந்தன. உலக நாடுகளெல்லாம் மண்டேலாவின் விடுதலையை வலியுறுத்தியது. ஆனால் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் அரசும் காலம்தாழ்த்தி வந்தது. தென்னாப்பிரிக்க அரசின் அலட்சியப்போக்கால், அதிருப்தியடைந்த சில உலக நாடுகள் அந்நாட்டின்மீது பொருளாதரத் தடை விதித்தது. உலக அரங்கில தனிமைப்படுத்தப்பட்ட நாடாக மாறியது. இப்படியான இக்கட்டான சூழலில், தென்னாப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் நடைபெற்று, நெல்சன் மண்டேலாவின் விடுதலையும் நிறைவேறுகிறது. 1990-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் நாள் தனது 27 ஆண்டு சிறைவாசத்தை முடித்துக்கொண்டு விடுதலையானார் மண்டேலா.

"எனது வெற்றிகளின் மூலம் என்னை மதிப்பிடாதீர்கள், எத்தனை முறை நான் கீழே விழுந்து மீண்டும் எழுந்தேன் என்பதன் மூலம் மதிப்பிடுங்கள்"

விடுதலையான நெல்சன் மண்டேலாவைத் தென்னாப்பிரிக்க மக்கள் மட்டுமல்லாமல், உலக நாடுகள் அனைத்தும் மகிழ்ச்சியோடு ஆரத்தழுவி வரவேற்றன. இந்தியா சார்பில் அப்போதைய பிரதமர் வி.பி. சிங் தலைமையில் வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. அப்போது மக்கள் மத்தியில் பேசிய மண்டேலா, "இனவெறி ஆட்சியைத் தனிமைப்படுத்த சர்வதேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது. நிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின்மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முடிவு காணவேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்கவேண்டும். அதுவரை போராடுவோம்."என அதிரடியாகத் தெரிவித்தார். இது நெல்சன் மண்டேலாவின் உறுதித்தன்மையை மீண்டும் ஒருமுறை உலகுக்கு உணர்த்தியது. 1993-ம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு நெல்சன் மண்டேலாவுக்குக் கொடுக்கப்பட்டது. அதற்கு முன்னோடியாக, 1990-ம் ஆண்டு முதன்முறையாக இந்தியரல்லாத ஒருவருக்கு, இந்திய அரசின் மிக உயரிய விருதான 'பாரத ரத்னா'விருது கொடுக்கப்பட்டது. சிறையிலிருந்து வெளியே வந்த மண்டேலா, பயணம் மேற்கொண்ட முதல் நாடும் இந்தியா தான்.

மண்டேலா

"நீங்கள் உங்கள் எதிரியுடன் அமைதியை ஏற்படுத்த விரும்பினால், அவருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும். பிறகு அவர் உங்கள் பங்குதாரர் ஆகிவிடுவார்"

1994-ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்ட மண்டேலா வெற்றி பெற்றார். தென்னாப்பிரிக்காவின் கருப்பினத்தைச் சேர்ந்த முதல் ஜனாதிபதியாக நெல்சன் மண்டேலா பதவியேற்றுக்கொண்டார். அவரது அமைச்சரவையில் வெள்ளையர்கள், இந்திய வம்சாவளியினர், கறுப்பினத்தவர்கள் என அனைவருக்கும் இடம் கொடுத்து இனவேற்றுமைகளை நீக்கினார். தென்னாப்பிரிக்காவின் பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, குஜராத்தி, உருது என இந்திய மொழிகளைக் கற்கவும் வழிவகை செய்தார். மண்டேலா ஜனாதிபதியாக இருந்தபோது, அனைத்து மக்களும் பயன்பெறும்வகையில் பல்வேறு மறுமலர்ச்சித் திட்டங்களைக் கொண்டுவந்தார். 1999-ம் ஆண்டு ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியவர், அரசியல் சாயமின்றி மக்களுக்கான நலப்பணிகளைத் தொடர்ந்தார்.

"விழாமலே வாழ்ந்தோம் என்பதல்ல பெருமை, விழும்போதெல்லாம் எழுந்தோம் என்பது தான் வாழ்வின் பெருமை"

ஒரு சாதாரண மனிதனாக பிறந்து, மக்களுக்காகப்போராடும் ஒரு போராளியாக, அரசியல்வாதியாக, சிறைக் கைதியாக, ஜனாதிபதியாக தனது வாழ்நாள் முழுவதையும் அர்பணித்துக்கொண்ட நெல்சன் மண்டேலா, 2013-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் நாள் தனது 95-வது வயதில் மரணமடைந்தார். நெல்சன் மண்டேலாவின் தியாகத்தை போற்றும் வகையில், அவர் பிறந்த ஜூலை 18-ம் நாளை, "உலக நெல்சன் மண்டேலா தினமாக" ஐ.நா. சபை அறிவித்து கொண்டாடி வருகிறது.



source https://www.vikatan.com/news/politics/nelson-mandelas-birthday-special-story

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக