நேற்றைய தினம் கிட்டத்தட்ட மாலை 6 மணியளவில் தெளிவாக இருந்த வானம் திடீரென அடர்த்தியான கருநிறத்துக்கு மாறியது. நிறம் மாறிய அதே நொடியில் ஒன்றிரண்டு நொடிகள் மட்டும் பூந்தூறல் போட்டுவிட்டு, பிறகு இடியுடன் கொட்ட ஆரம்பித்தது மழை. சில நிமிடங்கள் முன்பு வரை வானம் நீலநிறமாக இருந்ததால் இயல்பாக நடந்துகொண்டிருந்த, வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மக்கள் பதறிக்கொண்டு வேகமாயினர். திடீரென, ஏன் இந்த அளவுக்கு நேற்றைய தினம் மழை பெய்தது? காலநிலைகளை நம் செல்போனிலேயே கூகுள் அலர்ட் செய்தாலும் அது அவ்வளவு துல்லியமாக இருப்பதில்லை. நம் ஊரின் வானிலையைத் துல்லியமாகக் கணிப்பதற்கு, நமக்கென்று செயலிகள் இருக்கின்றனவா என்பது பற்றி வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் அவர்களிடம் கேட்டோம்.
Also Read: நீலகிரி: இடைவிடாமல் தொடரும் காற்று, மழை! - 24 மணி நேரமும் தயார்நிலையில் மீட்புக் குழுவினர்
``தென்மேற்குப் பருவக்காற்று வலுவாக இருக்கும்போது மாலை நேரங்களில் இப்படி திடீரென மழைப்பொழிவு ஏற்படுவது சகஜம்தான். அதுவும், நாம் கடலோரப்பகுதியில் இருப்பதால் மழை இன்னும் அதிகமாகவே இருக்கும். விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தென்மேற்குப் பருவ மழைக்காலங்களில் தென்மேற்கு காற்று வலுவாக இருக்கும்போது, மேற்கு திசைக்காற்றும் கிழக்கு திசைக்காற்றும் சந்திக்கின்ற பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும்.
காலையில் வானிலை வழக்கமாக இருக்கும். மாலையில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு திடீரென மழை பெய்யும். இப்படிப்பட்ட நேரங்களில் சென்னையின் ஒரு பகுதியில் பெய்யும்; இன்னொரு பகுதியில் மழையே இருக்காது. குறிப்பிட்ட பகுதியிலிருக்கிற மேகம், காற்று இவற்றைப்பொறுத்து நேற்று நடந்தது போல திடீர் மழை வரும் இந்த நேரத்தில் இயல்பானதுதான். நேற்று பெய்தது வழக்கமான மழைதான். அதிகமும் கிடையாது.
Also Read: கைகொடுத்த கோடை மழை; கன்னிப்பூ சாகுபடி பணிகளைத் துவக்கிய விவசாயிகள்! #VisualStory
மழை வருவதை முன்கூட்டியே தெரிந்துகொள்ள இந்திய வானிலை மையத்தின் 'Mausam', 'Meghdoot', 'Damini' மூன்று செயலிகளைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இதைத் தவிர ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை வானிலை மையத்தில் ட்விட்டரில் வானிலை அப்டேட் செய்துவருகிறோம். பத்திரிகையாளர்களின் வாட்ஸ் அப் குரூப்பிலும் தெரிவிக்கிறோம். IMD சென்னை வெப்சைட்டை பார்த்தாலே மழை வருவது தொடர்பான தகவல்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்'' என்றார்.
source https://www.vikatan.com/news/environment/imd-chennai-director-suggests-to-3-apps-to-get-updates-on-tamilnadu-rains
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக