Ad

சனி, 17 ஜூலை, 2021

ஆரஞ்சு நிற ஸ்பேஸ் சூட், ஒரு விண்வெளி காப்ஸ்யூல் ! - `ககன்யான்’ அப்டேட்ஸ்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகளும் விண்வெளியின் வல்லரசுகள். ஏனெனில் இந்த மூன்று நாடுகள் மட்டுமே இதுவரை வெற்றிகரமாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளன. இவற்றிற்கு அடுத்தபடியாக இந்தியா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப முயன்று வருகிறது. இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் வகையில்
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சுமார் பத்தாயிரம் கோடி மதிப்பீட்டில் "ககன்யான்" (Gaganyaan) என்னும் திட்டத்தை உருவாக்கி படிப்படியாக செயல்படுத்தி வருகிறது.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் "ககன்யான்" திட்டத்துக்கான GSLV Mk III ராக்கெட்டில் திரவ எரிபொருள் என்ஜின் பயன்படுத்தப்பட உள்ளது.இந்த என்ஜினின் பெயர் விகாஸ் ( VIKAS-VIKram Ambalal Sarabhai)

MoU signed between ISRO and IAF for Gaganyaan Project

திரவ எரிபொருள் நிரப்பிய விகாஸ் இன்ஜின் சோதனை கடந்த ஜூலை 14 அன்று தமிழ்நாட்டின் நெல்லையிலுள்ள மகேந்திரகிரி ISRO Propulsion Complex (IPRC) இன் இன்ஜின் சோதனை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை திட்டமிட்ட நேரத்துக்குள் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது.

விகாஸ் என்ஜின் குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,"GSLV Mk III வாகனத்தின் திரவ ஆற்றல் விகாஸ் இன்ஜின் சோதனை வெற்றிகரமாக முடிந்தது. இந்த பரிசோதனையின் போது 240 நொடிகளுக்கு இன்ஜின் இயக்கப்பட்டது. நாங்கள் எதிர்பார்த்தபடியே பரிசோதனை முடிவுகள் இருந்தன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோவின் இந்த பரிசோதனை வெற்றியை உலக நாடுகள் பலவும் வாழ்த்தியுள்ளன. ராக்கெட் தொழில்நுட்பத்தில் பல புதுமைகளைப் படைத்து வரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் இஸ்ரோவின் சோதனை வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ககன்யான் (Gaganyaan) ஒரு பார்வை:

*இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணம், ககன்யான் ஆகும்.

*இந்தியாவின் முதல் விண்வெளி வீரரான ராகேஷ் ஷர்மா 1984-ல் விண்வெளிக்குச் சென்றது இந்திய விண்கலத்தில் இல்லை. சோவியத் யூனியனின் (ரஷ்யா) Soyuz T-11 விண்கலத்தில்.

*2022-ம் ஆண்டு இறுதியில் ககன்யான் பயணத்தைச் சாத்தியப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.

*ககன்யான் பயணத்தில் மூன்று இந்திய விண்வெளி வீரர்கள் விண்வெளிக்குப் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


*ககன்யான் பயணத்திற்கான வீரர்கள் பயிற்சிக்கு ரஷ்யா உதவுகிறது.

*இந்திய விமானப்படையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 4 போர் விமானிகள் இந்தப் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ரஷ்யாவின் காகரின் காஸ்மோனாட் பயிற்சி மையத்தில் (Gagarin Cosmonaut Training Center-GCTC) தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர்.

*இந்த நான்கு பேரில், பயணத்திற்கு தேர்வு செய்யப்படும் மூன்று பேர் விண்வெளிக்குச் சென்று பூமியைச் சுற்றி வந்தவாறு மைக்ரோ ஈர்ப்பு மற்றும் உயிர் அறிவியலில் ஒரு வாரம் சோதனைகளை மேற்கொள்வார்கள்.


*விண்வெளி வீரர்கள் ஒரு வார காலத்திற்கு ஒரு விண்வெளி காப்ஸ்யூலில் வாழ உள்ளனர்.

ISRO

*சந்திரயான் -2 விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பிய ராக்கெட்டின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான ஜியோ சின்க்ரோனஸ் சேட்டிலைட் ஏவுகணை வாகனம் எம்.கே - 3 (GSLV Mark III) மூலமாக இப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

*விண்வெளியில் தாழ்வான நிலையிலிருந்து ( 300 - 400 கிமீ)
பூமியை 7 நாட்கள் சுற்றிவரும் வகையில் ககன்யான் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

*பூமியிலிருந்து கிளம்பும் ககன்யான் நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையை அடைய 16 நிமிடங்கள் ஆகும்.

*ககன்யான் 92 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியைச் சுற்றி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு நாளும் பூமியைச் சுற்றி கிட்டத்தட்ட 16 பயணங்கள் மேற்கொள்ளும்.


*ககன்யான் மீண்டும் பூமிக்குத் திரும்பும் பயணத்திற்கு 36 நிமிடங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


*இந்த பயணத்திற்கு பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும்
ஆரஞ்சு நிற ஸ்பேஸ் சூட், பெங்களூரு ஸ்பேஸ் எக்ஸ்போவின் ஆறாவது பதிப்பில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
இந்த ஸ்பேஸ் சூட் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாரபாய் விண்வெளி மையத்தில் உருவாக்கப்பட்டது.
இதனை உருவாக்க இரண்டு ஆண்டுகள் ஆனது. இந்த ஸ்பேஸ் சூட் விண்வெளி வீரர் 60 நிமிடங்கள் விண்வெளியில் சுவாசிக்க அனுமதிக்கும்.

*விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பும் ககன்யான் காப்ஸ்யூல், பாராசூட் உதவியுடன் கடலில் தரையிறங்கும். பாதுகாப்பாக தரையிறங்க ஒரு பாராசூட் போதுமானது என்றாலும், காப்ஸ்யூலில் இரண்டு பாராசூட்டுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*ககன்யான் பயணத்திற்குத் தேவையான விண்வெளி உணவு, கதிர்வீச்சு அளவீடு, பாதுகாப்பு, பாதுகாப்பான மீட்புக்கான பாராசூட்டுகள் உள்ளிட்ட தொழில் நுட்பங்களுக்கான ஆதரவை
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Defense Research and Development Organization-DRDO)
தயாரித்து வழங்கி வருகிறது.


*விண்வெளிக்குப் பயணம் செல்லும் மூன்று வீரர்களில் பெண்கள் யாரும் இல்லாத குறையை ஈடுசெய்யும் விதமாய், ககன்யான் திட்ட இயக்குநராக வி.ஆர்.லலிதாம்பிகா என்னும் பெண் விஞ்ஞானி இருப்பது சிறப்பு.

விகாஸ் என்ஜின் சோதனை வெற்றிக்கு அடுத்து, ககன்யான் விண்வெளியை எட்ட இன்னும் பல கட்டங்களையும், பற்பல சோதனைகளையும் தாண்ட வேண்டும்.

சந்திரயான் - 2 லேண்டரின் தோல்வியிலிருந்து இஸ்ரோ பல பாடங்களை கற்றுக் கொண்டுள்ளது. சோதனைகள் அனைத்தையும் கடந்து, ககன்யானை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, விண்வெளியில் இந்தியா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் என்பதில் ஐயமில்லை.

இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டில், நமது வீரர்கள் விண்ணுக்குச் சென்று திரும்பும் சாதனையைக் காண காத்திருப்போம்!


- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/article-about-gaganyaan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக