Ad

ஞாயிறு, 4 ஜூலை, 2021

தஞ்சாவூர்: தீ விபத்தில் வீடு இழந்த தம்பதி! - புது வெளிச்சம் பாய்ச்சிய அரசு மருத்துவர்

பேராவூரணி அருகே தீ விபத்தில் வீட்டை இழந்து தவித்த தம்பதி ஒருவருக்கு அரசு டாக்டர் ஒருவர் தனது சொந்த செலவில் கூரையிலான வீடு அமைத்து கொடுத்துடன், வீட்டிற்கு தேவையான பொருள்களையும் வாங்கி கொடுத்துள்ளார். அத்துடன் புதிய மின் இணைப்பிற்கு ஏற்பாடு செஞ்சு கரண்ட் வசதியும் ஏற்படுத்தி அந்த தம்பதி வாழ்வில் புது வெளிச்சம் பாய்ச்சிய நெகிழ்ச்சி சம்பவம் அறங்கேறியிருக்கிறது.

டாக்டர் செளந்தரராசன்

பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரின் மனைவி கமலம். கூலி தொழிலாளியான இவர்களுக்கு ஒன்றரை வயதில் கனுஷ்கா என்ற மகள் இருக்கிறார். சிறிய அளவிலான கூரை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் இவர்கள் வீடு தீப்பிடித்து எரிந்தது. வீட்டில் இருந்த அனைத்து பொருள்களும் தீக்கு இரையாயின. உடனடியாக வீட்டை சீரமைக்க முடியாத நிலையில் பாலமுருகனின் பொருளாதாரம் இருந்தது பெரும் துயரம்.

வீடு இல்லாததால் மனைவி மற்றும் தனது பிள்ளையுடன் மரத்தடி மற்றும் பள்ளி கட்டடத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செளந்தரராசன் அப்பகுதிக்கு கொரோனாத் தடுப்பு பணிக்கு சென்ற போது கமலம், பாலமுருகன் தம்பதியின் நிலை குறித்து அறிந்து மனம் உருகியிருக்கிறார். அத்துடன் உடனடியாக அவர்களுக்கு தனது சொந்த செலவில் கூரையிலான வீடு அமைத்து கொடுத்ததுடன் வீட்டில் புதிய மின் இணைப்பு கொடுத்து கரண்ட் வசதியும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்.

கூரையிலான புது வீடு

அத்துடன் வீட்டிற்கு தேவையான பொருள்களையும் சீர் வரிசையாக எடுத்து சென்று கிரகப்பிரவேசம் நடத்தி அந்த தம்பதியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். இது குறித்து கமலத்திடம் பேசினோம், அன்றாடம் வேலைக்கு போனாத்தான் எங்களுக்கு வீட்டுல அடுப்பெரியும் என்கிற நிலை. நானும் என் வீட்டுக்காரரும் காதலித்து கல்யாணம் செஞ்சுக்கிட்டோம். அதனால பொறந்த வீட்டு ஆதரவும் எனக்கில்ல. இந்த சூழலுல வர்ற வருமானத்தை வச்சு எங்க ஒத்த பொண்ணோட சந்தோஷமா இருந்தோம். பத்து நாளுக்கு முன்னாடி எங்க வீடு திடீர்னு பத்தி எரிஞ்சது. கண் சிமிட்டுற நேரத்துல என்னோட படிச்ச சர்டிபிகேட் உட்பட எல்லா பொருளும் எரிந்து சாம்பலாகி விட்டது.

புதுசா வீடு கட்டுறதுக்கும் எங்களுக்கு வழியில்ல. மரத்தடி, இரவு நேரத்துல பள்ளிக்கூடம் என மாறி மாறி தங்கி நாள்களை நகர்த்தினோம். எங்களோட இந்த நிலை ஊராட்சி மன்றத் தலைவர் ஈகை செல்வம் மூலமாக டாக்டர் சாருக்கு தெரிய வந்திருக்கு. உடனே எங்களுக்கு புதிய கூரை வீட்டை அமைத்து கொடுத்தார். விளக்கை பயன்படுத்துறதால மீண்டும் தீ பிடிப்பதை தடுக்குறதுக்காக புதுச கரண்ட் இழுத்து கொடுத்து எங்க வாழ்க்கையில வெளிச்சம் பாய்ச்சியிருக்கார்.

Also Read: தஞ்சாவூர்: கிடைக்காத 'கஜா' புயல் நிவாரணம்; வீடின்றித் தவிக்கும் விவசாயத் தொழிலாளி!

அதோட மட்டுமில்லாம் தாய் வீட்டு சீதனமாக பீரோ, அருவாமனை, படி போன்ற வீட்டு உபயோகம் மற்றும் சமையலுக்கு தேவையான பொருள்கள், புது டிரெஸ் ஆகியவற்றை சீர்-ஆக எடுத்து வந்தார். எங்கள புது டிரெஸ் போட வச்சு மாலை மாத்தி பால் காய்ச்ச வைச்சார். பால் பொங்குறது போல மகிழ்ச்சி பொங்கனுமுனு வாழ்த்தினார். எனக்கு கண்ணீர் பொத்துக்கிட்டு வர பொசுக்கடினு காலுல விழுந்துட்டேன். என்ன உன்னோட அண்ணனா நெனச்சுக்குமா எப்ப என்ன உதவினாலும் கேளுமானு டாக்டர் சார் சொன்னார். அவருக்கு ரொம்பவே பெரிய மனசு” என்றார்.

டாக்டர் செளந்தரராசனிடம் பேசினோம், ``கொரோனா தடுப்பு பணிக்காக செல்லும் போது வீடு இல்லாமல் தவித்த தம்பதி குறித்து தெரிய வந்தது. நானும் ஒரு ஏழை குடும்பத்திலிருந்து வந்தவன் என்பதால் அவர்களின் வலியை என்னால் உணர முடிந்தது. கொரோனா லாக்டெளான் வீடு கட்டுவதற்கான பொருள்களை அவர்களால் வாங்கி ஒன்று சேர்க்க முடியாது. அதற்கான பொருளாதாரமும் அவர்களிடத்தில் இல்லை என்பதை தெரிந்து கொண்டேன்.

புது வீட்டில் தம்பதி மற்றும் கிராம மக்கள்

மீண்டும் வீடு தீ விபத்தில் பாதிக்கபடாமல் இருக்க சமையல் கூடம் தனியாக வைத்து கூரை வீட்டை அமைத்தேன். மண்ணெண்யில் எரியும் சிமிலி விளக்கை பயன்படுத்துவதால் தீ விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. அத்துடன் கரண்ட் வசதி இல்லாததால் ஏற்படும் துயரையும் சின்ன வயசுல நான் அனுபவித்துள்ளேன் என்பதால் புதிதாக மின் இணைப்பு அமைத்து கரண்ட் வசதி ஏற்படுத்தி கொடுத்தேன்.

வீட்டுக்கு தேவையான பொருள்களையும் வாங்கி எடுத்துக்கிட்டு பலருடன் போய் கொடுத்து பால் காய்ச்ச வச்சு குடி போக வைச்சோம். இதுக்கு ரூ 50,000 த்துக்கு மேல செலவானது. அது எனக்கு பெருசா தெரியல அவங்க முகத்துல வந்த புது சிரிப்பு எனக்கு பெரிய மன நிறைவை தந்தது” தெரிவித்தார். இதேபோல் கடந்தாண்டு தீ விபத்தில் வீட்டை இழந்து தவித்த தம்பதி ஒருவருக்கும் செளந்தரராசன் வீடு கட்டுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது என அப்பகுதியினர் பாராட்டினர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/government-doctor-help-poor-family-whose-house-damaged-in-fire-accident

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக