Ad

ஞாயிறு, 18 ஜூலை, 2021

டேனிஷ் சித்திக்: `மன்னியுங்கள்; அவர் எப்படி இறந்தார் என்று எங்களுக்குத் தெரியாது!'- தாலிபன்கள்

ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் நேற்றைய தினம் இருதரப்பு மோதலில் கொல்லப்பட்டார் புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக். அவரின் மறைவுச் செய்தி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியின் கொரோனா அவலங்கள் தொடங்கி ஈராக் போர், ஹாங்காங் போராட்டம் என உலக வரலாற்றில் கவனிக்கத்தக்க நிகழ்வுகளைத் தன் புகைப்படக் கருவியில் பதிவு செய்த டேனிஷ் சித்திக்கின் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

நேற்றைய தினம் டேனிஷ் கொல்லப்பட்டதை அடுத்து, இன்று உலகம் முழுவதும் சர்வதேசப் பத்திரிகைகளில் டேனிஷின் மறைவுச் செய்திதான் முதல் பக்கங்களை நீக்கமற ஆக்கிரமித்திருக்கிறது. அவரது மறைவுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கனி, இந்திய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் சர்வதேச தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், டேனிஷ் சித்திக்கின் உடல் ரெட் கிராஸ் அமைப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக ஆப்கானிஸ்தான் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உடலை மும்பைக்குக் கொண்டு வர தூதரக அதிகாரிகள் துரிதமாகச் செயல்பட்டுவருகின்றனர். இந்தநிலையில், ஐ.நா பாதுகாப்பு அவையில் பேசிய இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்க்லா, ஆப்கானிஸ்தானில் பணி நிமித்தமாகச் சென்றிருந்த இந்தியப் புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

Also Read: தாலிபன்- ஆப்கன் மோதல்: இந்தியாவைச் சேர்ந்த பிரபல புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்!

டேனிஷ் சித்திக்கும் அவரின் புகைப்படங்களும்

இந்தநிலையில், தற்போது தாலிபன்கள் தரப்பிலிருந்து டேனிஷின் மரணம் தொடர்பாக அதிகாரபூர்வ இரங்கல் வெளியாகியிருக்கிறது. டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டது குறித்து செய்தி நிறுவனங்களுக்குப் பேட்டியளித்துள்ள தாலிபன் செய்தித் தொடர்பாளர் சபிமுல்லா முஜாகிதீன், ``புகைப்படப் செய்தியாளர் யாருடைய தாக்குதலின்போது துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார் என்பது எங்களுக்குத் தெரியாது. அவர் எப்படி இறந்தார் என்பதும் எங்களுக்குத் தெரியாது. டேனிஷ் எப்படி இறந்தார் என்றும் தெரியவில்லை. எங்களை மன்னித்துவிடுங்கள். போர்ப் பகுதிகளில் நுழையும் பத்திரிகையாளர்கள் எங்களிடம் அதைத் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அந்தத் தனிப்பட்ட நபருக்கான பாதுகாப்பில் நாங்கள் கவனம்கொள்ள இயலும். முறையாக அறிவிக்காமல் போர்ப் பகுதிகளுக்கு வருவதால்தான் இது போன்ற சம்பவங்கள் நடந்துவிடுகின்றன" என்று கூறியிருக்கிறார்.

Also Read: தாலிபன்- ஆப்கன் மோதல்: இந்தியாவைச் சேர்ந்த பிரபல புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்!



source https://www.vikatan.com/news/international/taliban-apologies-for-the-death-of-photo-journalist-danish-siddiqui

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக