Ad

ஞாயிறு, 18 ஜூலை, 2021

மும்பை: ரூ.350-க்கு உணவு ஆர்டர் செய்து ரூ.75,000 இழந்த நபர்! - ஓ.டி.பி இல்லாமலே ஆன்லைன் மோசடி

சமீபகாலமாக உணவுகளை ஆன்லைனில் வாங்குவது அதிகரித்திருக்கிறது. அப்படி உணவுகளை ஆன்லைனில் வாங்கும்போது சில சமயங்களில் மோசடிகளும் நடக்கின்றன. மும்பையைச் சேர்ந்த பிரபாகர் என்பவர் காலை உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்ய நினைத்து, அந்தேரியைச் சேர்ந்த அவர் தனது வீட்டுக்கு அருகில் எதாவது உணவு விடுதி இருக்கிறதா என்று ஆன்லைனில் தேடிப்பார்த்தார். அதில் `ரோமா கஃபே’ என்ற ஓர் உணவு விடுதி இருந்தது. அதிலிருந்த நம்பருக்கு போன் செய்து பிரதீப் சாப்பாடு ஆர்டர் செய்தார். போனை எடுத்த நபர் ஒரு நிமிடத்தில் மீண்டும் கால் செய்வதாகத் தெரிவித்துவிட்டு போனை வைத்துவிட்டார். சொன்னபடி அந்த நபர் பிரதீப்புக்கு போன் செய்து உணவுகளை ஆர்டர் எடுத்தார். பின்னர் ஆன்லைனில் பணம் செலுத்தும்படி போனில் பேசிய நபர் தெரிவித்தார்.

சித்திரிப்பு படம்

ஆனால் உணவை சப்ளை செய்யும்போது பணம் கொடுப்பதாக பிரதீப் தெரிவித்தார். கொரோனா காலத்தில் அது போன்ற வசதி இல்லை என்றும், ஆன்லைனில் முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டும் என்றும் அந்த நபர் தெரிவித்தார். அதோடு ஒரு லிங்க்-கை அனுப்பி அந்த லிங்க் மூலம் மொபைல் ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்யும்படி அந்த நபர் கேட்டுக்கொண்டார். அவரும் ஆப்பைப் பதிவிறக்கம் செய்தார். பதிவிறக்கம் செய்து முடித்தவுடன் பிரதீப் வங்கிக் கணக்கிலிருந்து பணம் குறைய ஆரம்பித்தது. போனில் உணவு ஆர்டர் எடுத்த மர்ம நபர் எந்தவித ஓ.டி.பி-யையும் பகிராமலேயே பிரதீப் வங்கிக்கணக்கிலிருந்து ரூ.75 ஆயிரத்தை எடுத்துவிட்டார். உடனே பிரதீப் வங்கிக்கு போன் செய்து கார்டை பிளாக் செய்தார். அதோடு இது குறித்து போலீஸிலும் புகார் செய்தார். பிரதீப் வெறும் 350 ரூபாய்க்குத்தான் சாப்பாடு ஆர்டர் செய்திருந்தார். ஆனால் அவர் ரூ.75 ஆயிரத்தை இழந்துவிட்டார். ஒன் டைம் பாஸ்வேர்டு வாங்காமலேயே பணத்தை அபகரித்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. போனில் இருக்கும் விவரங்களை மொபைல் ஆப் மூலம் திருடி இந்தப் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இது குறித்து சைபர் செக்யூரிட்டி நிபுணர் ரிதேஷ் பாட்டியா கூறுகையில், ``ஒன் டைம் பாஸ்வேர்டு கொடுத்தால்தான் பணத்தை அபகரிப்பார்கள் என்றுதான் மக்களுக்குத் தெரியும். ஆனால் இப்போது புதிதாக ஒன் டைம் பாஸ்வேர்டு இல்லாமலும் பணத்தை மோசடி செய்வது புதிதாக இருக்கிறது. இது குறித்து அரசு, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார். மும்பையில் இந்த ஆண்டு முதல் ஐந்து மாதங்களில் 901 ஆன்லைன் மோசடிகள் நடந்துள்ளன. இதில் வெறும் 10 சதவிகிதக் குற்றங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று மும்பை சைபர் பிரிவு போலீஸார் தெரிவித்தனர். இதில் 203 சம்பவங்கள் கிரெடிட் கார்டு மோசடி தொடர்பானவை.

ஆன்லைன் மோசடி

இதே போன்று மும்பை பாந்த்ரா பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சீதாராம் என்பவர், ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்தார். பீட்சா ஆர்டர் செய்ய போனில் போன் நம்பர் தேடினார். அதில் கிடைத்த நம்பர் மூலம் போன் செய்து உணவை ஆர்டர் செய்தார். ஆர்டர் வாங்கிய நபர் ஆன்லைனில் பணம் வாங்க ஒரு லிங்க் அனுப்பினார். அதை நிரப்பி சீதாராம் திரும்ப அனுப்பிவிட்டு ஒன் டைம் பாஸ் வேர்டையும் சொன்னார். உடனே சீதாராம் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.20 ஆயிரம் எடுக்கப்பட்டதாக சீதாராமுக்கு செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சீதாராம், இது குறித்து போனில் ஆர்டர் பெற்ற நபரிடம் கேட்டதற்கு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுவிட்டதாகவும், பணத்தைத் திரும்ப அனுப்புவதாகவும் கூறி, மேலும் இரண்டு ஒன் டைம் பாஸ் வேர்டு அனுப்பினார். அதன் மூலம் மேலும் ரூ.45 ஆயிரத்தை எடுத்துவிட்டார். இது குறித்து சீதாராம் போலீஸில் புகார் செய்திருக்கிறார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

Also Read: ஷீர்டி சாய்பாபா கோயில் பெயரில் ஆன்லைன் பண மோசடி-பக்தர்கள் உஷாராக இருக்க கோயில் நிர்வாகம் எச்சரிக்கை!



source https://www.vikatan.com/news/crime/mumbai-resident-loses-rs-75000-by-ordering-food-online

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக