Ad

ஞாயிறு, 25 ஜூலை, 2021

ஜூடோவில் ஒரே ஒரு தங்கம்... ஆனாலும், கொசவோவின் வெற்றியை ஏன் உலகமே கொண்டாடுகிறது?!

ஆதிக்கவாதிகளால் அடக்கப்பட்டு ஒடுக்கப்படும் மக்கள் அவர்களுக்கு பதிலடி கொடுக்க நினைக்கும்போது கையில் எடுக்கும் முதல் ஆயுதம் விளையாட்டுதான். இந்தியா சுதந்திரம் பெற்ற அடுத்த ஆண்டே, அதாவது 1948-ல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் ஹாக்கியில் பிரிட்டனை வீழ்த்தி இந்திய கொடியை பிரிட்டனின் கொடிக்கு மேல் பறக்கவிட்டனர். அத்தனை ஆண்டுகால பிரிட்டனின் காலனி ஆதிக்கத்திற்கும் இந்தியா கொடுத்த முதல் சவுக்கடி அது.

கரீபியர்களை காட்டுமிராண்டிகளாக சித்தரித்த நிறவெறியர்களுக்கு க்ளைவ் லாயிட் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் கொடுத்த பதிலடிதான் 1975 உலகக்கோப்பை வெற்றி. இதுதான் விளையாட்டின் சக்தி. காலங்காலமாக தங்களை பெரிய ஆண்டைகளாக நினைத்துக் கொண்டிருக்கும் அத்தனை ஆதிக்க வெறியர்களுக்கும் தக்க சமயத்தில் விளையாட்டின் மூலமே பதிலடி கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியிலும் அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வெற்றி பேசுபொருளாகியுள்ளது.கொசவோ எனும் நாட்டை சேர்ந்தவர் தீஸ்திரி க்ராஸ்னிக். ஜுடோவில் 48 கிலோ எடைப்பிரிவில் ஜப்பான் வீராங்கனையை தோற்கடித்து தங்கம் வென்றுள்ளார். போட்டியை வென்று நடப்பதறியா பூரிப்பில் உறைந்த நிலைக்கு சென்ற க்ராஸ்னிக் சில நொடிகளிலேயே இயல்பாகி கண்ணீர் சிந்த ஆரம்பித்தார். நேற்று இணையம் முழுவதும் இந்த புகைப்படங்கள்தான் வைரல்.

தீஸ்திரி க்ராஸ்னிக்
ஏனெனில், அந்த கண்ணீருக்கு பின்னால் அடக்குமுறைக்குள்ளாகி சிதிலமடைந்த ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வரலாறும் ஒளிந்திருந்தது.

கொசவோ, இப்படி ஒரு நாடு இருக்கிறதென்றே பலருக்கும் தெரியாது. ஐரோப்பாவில் செர்பியாவுக்கு அருகில் வெறும் 18 லட்சம் மக்கள் தொகையை கொண்ட சிறிய நாடு. ஆனால், இதன் வரலாறு பல நூற்றாண்டுகளை கடந்தது.

13-ம் நூற்றாண்டுக்கு முன்பு கொசவோ செர்பியாவின் ஆளுகைக்குள்ளேயே இருந்தது. அதன்பிறகு, துருக்கி பேரரசு தங்கள் கரங்களை பரவவிட்ட போது கொசவோ துருக்கியின் ஆளுகைக்குள் வந்து சேர்ந்தது. அப்போதிருந்தே பிரச்னை தொடங்கிவிட்டது. செர்பியா கிறிஸ்தவர்கள் நிரம்பிய நாடு. துருக்கியின் வருகையால் இஸ்லாமிய பண்பாடுகள் கொசவோவின் பாரம்பரியமாக மாறத் தொடங்கியது. அதனால் எப்போதுமே செர்பியாவுக்கும் கொசவோவுக்கும் ஒத்தே வராது.

19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் துருக்கி பலவீனமாக மீண்டும் செர்பியாவின் ஆளுகைக்குள் வந்தது கொசவோ. இங்கிருந்துதான் அடக்குமுறைகள் உக்கிரமாகத் தொடங்கின. செர்பிய அரசு தங்களின் பண்பாட்டு பாரம்பரியங்களையே உயர்வாக நினைத்து கொசவோவின் அல்பேனிய இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தியது. இரண்டாம் உலகப்போருக்கு பின் இதற்கு சிறு தீர்வாக உலக நாடுகளின் அழுத்தத்தால் கொசவோவுக்கு தன்னாட்சி உரிமை அளிக்கப்பட்டது. ஆனாலும், லகான் செர்பியாவின் கையிலேயே இன்னமும் இருந்தது. செர்பிய இனவாதியான ஸ்லோபடன் மிலோசெவிக் 1989-ல் அந்நாட்டின் அதிபர் ஆனார்.

சகிப்புத்தன்மையற்று அடக்கி ஆள நினைக்கும் ஆதிக்க நாடுகளுக்கு பின்னால் எப்போதும் அதிகாரவெறி பிடித்த ஒரு நபர் இருப்பார். செர்பியாவுக்கு அப்படிப்பட்ட நபராக இருந்தவர் மிலோசெவிக்.

கொசவோவின் தன்னாட்சி அதிகாரத்தை ரத்து செய்தார் மிலோசெவிக். வரம்பற்ற அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டது. கொசவோவின் புரட்சிப்படை ஒன்று செர்பியாவுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டது. போர் தொடங்கியது. அப்பாவி மக்களை பலியிடுவது போர்களின் அடிப்படை குணம். கொசவோவிலும் அப்படியே நடந்தது. நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் அகதிகள் ஆகினர். பிரச்னை பூதாகரமானபோதே அமெரிக்கா போன்ற பெரிய நாடுகள் உள்ளே புகுந்து கொசவோவுக்கு ஆதரவாக இராணுவ நடவடிக்கைகளில் இறங்கியது. செர்பியா அடங்கியது. 2008-ல் கொசவோ விடுதலை பெற்ற சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. பல நாடுகளும் கொசவோவை அங்கீகரிக்கத் தொடங்கிவிட்டன. ஆனால், இன்னமும் செர்பியா மட்டும் கொசவோவை தங்களின் ஈர்க்குச்சியாகவே பார்த்துக் கொண்டிருக்கிறது.

சுதந்திரத்திற்கு பிறகு, முதன் முதலாக 2016-ல் ஒலிம்பிக்கில் கலந்துகொண்டது கொசவோ.

மஜ்லிந்தா கேல்மந்தி
அந்த ஒலிம்பிக்கில் மஜ்லிந்தா கேல்மந்தி என்பவர் ஜுடோவில் பங்கேற்று கொசவோ நாட்டிற்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்தார். இந்த முறை தீஸ்திரி க்ராஸ்னிக் எனும் வீராங்கனை ஜப்பானியை வீராங்கனையை தோற்கடித்து அதே ஜுடோவில் தங்கம் வென்றிருக்கிறார்.
பயிற்சியாளருடன் க்ராஸ்னிக்

இந்த இருவருக்குமே பயிற்சியளித்தவர் ஒரே நபர்தான். அவர் ட்ரிட்டன் டோனி குகா. கொசவோவை சேர்ந்த இவர், 90-களில் ஜுடோவில் சாதிக்கும் வெறியோடு சுழன்றடித்த இளம் வீரர். 1992 பார்சிலோனா ஒலிம்பிக்ஸில் இவர்தான் பதக்கம் வெல்வார் என நினைக்கையில், செர்பியாவுக்கெதிரான போர் உச்சக்கட்டத்தில் இருந்ததால் கொசவோ வீரர்கள் செர்பியாவுடன் இணைந்து ஒலிம்பிக்கிற்கு செல்லக்கூடாதென முடிவெடுக்கப்பட்டது. இதனால் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பை தவறவிட்டவர், பயிற்சியாளராக மாறினார். கொசவோவில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த மற்றும் பின் தங்கிய குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளை தேர்ந்தெடுத்து பயிற்சியளித்தார். அவர் விதைத்த விதைதான் கேல்மந்தியும், க்ராஸ்னிக்கும்!

அடக்குமுறைகளுக்கு எதிராக விளையாட்டுலகம் எப்போதும் சரியான நேரத்தில் பதிலடி கொடுக்கும். இந்த முறை ட்ரிட்டன் டோனி குகா மூலம் அந்த பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது.

மீராபாய் சானுக்காக இந்தியா கொண்டாடிக் கொண்டிருந்த அதேநேரத்தில் க்ராஸ்னிக்குக்காக கொசவோ மக்களும் கொண்டாடிக் கொண்டிருந்தனர். வெறும் வெற்றிக்காகவோ பதக்கத்திற்காகவோ ஆனதல்ல அந்த கொண்டாட்டம்... அடக்கப்பட்டவர்கள் மீண்டெழுந்து திருப்பி அடித்ததற்கான கொண்டாட்டம் அது!



source https://sports.vikatan.com/olympics/a-small-country-kosovo-which-is-dominated-by-serbia-won-a-gold-medal-in-olympics

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக