Ad

ஞாயிறு, 25 ஜூலை, 2021

கரூர்: `வருமானத்துக்கு மீறி 55 சதவிகிதம் சொத்து குவிப்பு!' - எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு

அ.தி.மு.க முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட 26 இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு பிறகு, வருமானத்துக்கு மீறி 55 சதவிகிதம் அளவுக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொத்துக் குவித்ததாக, கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் மூலம் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

Also Read: கரூர்: `நான் வாடகை வீட்டில்தான் வசிக்கிறேன்!' -ரெய்டுக்கு பிறகு விளக்கமளித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், அ.தி.மு.க கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 22 -ம் தேதி சோதனை நடத்தியது. கரூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களையும் ரூ. 25.56 லட்சம் ரொக்கத்தையும் கைப்பற்றியதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்திருந்தது. இதனிடையே, கடந்த 24 - ஆம் தேதி கரூரில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும், எவ்வித ஆவணங்களும் கைப்பற்றப் படவில்லை என்று தெரிவித்திருந்தார். அதோடு, 'நான் சென்னை, கரூர் ஆகிய இடங்களில் வாடகை வீடுகளில் தான் குடியிருக்கிறேன். இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன்' என்று தெரிவித்தார். இந்த சூழலில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அதில், முதல் குற்றவாளியாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், இரண்டாவது குற்றவாளியாக அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தம்பி சேகர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த, 2016 - ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு கரூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, 55% அதிகமாக சொத்துகள் சேர்த்தது உள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2016 தேர்தலின்போது வேட்புமனு தாக்கலில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரூ. 2,51,91,378 சொத்து வைத்திருந்ததாக தேர்தல் ஆணையத்திடம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதேபோல், சமீபத்தில் நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கரூரில் போட்டியிட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரூ. 8,62,35,648 சொத்து மதிப்பு உள்ளதாக வேட்புமனுத் தாக்கலில் குறிப்பிட்டிருந்தார். இதில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த 2016 - ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது செய்த வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்ததில், 55 சதவிகிதம் அதிகமாக சொத்து சேர்த்ததாக சோதனையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில், கரூர் நகர் பகுதியைச் சுற்றி உள்ள முக்கியமான இடங்களை எம்.ஆர்.விஜயபாஸ்கரும், அவரது தம்பி சேகரும் கூட்டாக இயக்கிவரும் ரெயின்போ டையர்ஸ் மற்றும் ரெயின்போ ப்ளூ மெட்டல் மூலம் நிலங்களை வாங்கி குவித்துள்ளதாக லஞ்சஒழிப்புதுறையினர் தெரிவித்துள்ளனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

இதில், ஒவ்வொரு இடமும் அரசு மதிப்பீட்டின்படி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் வாங்கி குவிக்கப்பட்டுள்ளது. அமைச்சராக எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருந்த ஐந்து வருடங்களில் ரூ. 6,10,44,270 மதிப்புள்ள சொத்துகளை வாங்கி சேர்த்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது சகோதரருடன் இணைந்து நடத்தும் ரெயின்போ டையர்ஸ் நிறுவனம் மூலம் கரூர் நகரில் 6 இடங்களில் 2,90,81,500 மதிப்பிலான சொத்துகளை வாங்கி குவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இருவரும் பங்குதாரராக உள்ள ரெயின்போ ப்ளூ மெட்டல் நிறுவனம் மூலம் கரூரில் 2 இடங்களில் ரூ. 4,48,24,000 மதிப்புள்ள சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/tamilnadu/karur-police-case-filed-against-mrvijayabaskar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக