Ad

ஞாயிறு, 4 ஜூலை, 2021

ரஃபேல் ஒப்பந்தம்: `புதிய விசாரணையைத் தொடங்கும் பிரான்ஸ்; மோடிக்கு மீண்டும் நெருக்கடி?'

கடந்த 2007-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிப்பொறுப்பிலிருந்த நேரத்தில் இந்திய ராணுவத்திற்கு புதிய போர் விமானங்களை வாங்க முடிவு செய்தது. இதையடுத்து, டஸ்சால்ட் ஏவியேஷனின் ரஃபேல் வகை போர் விமானங்களை பிரான்ஸிடமிருந்து வாங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 54,000 கோடியில் 126 ரஃபேல் போர் விமானத்தை வாங்க அன்றைய பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்ட்டோடு ஒப்பந்தம் போடப்பட்டது. அதாவது முதல் 18 விமானங்களை பிரான்சிலிருந்து கொண்டுவரவும் மீதமுள்ள 108 விமானங்களை, பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் விமான நிறுவனம் இணைந்து இந்தியாவிலேயே உற்பத்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி ஒரு ரஃபேல் போர் விமானத்தின் விலை 526 கோடி. பின்னர், இரண்டு நாடுகளிலும் ஆட்சி மாற்றம் நடைபெற்றதால் அந்த ஒப்பந்தம் அப்படியே கைவிடப்பட்டது.

தற்போதுவரை இந்தியாவுக்கு 22 ரஃபேல் போர் விமானங்கள் வந்துள்ளது. மீதமுள்ள விமானங்களும் 2022-ம் ஆண்டிற்குள் வந்துசேரும் என்று அதைத் தயாரிக்கும் டசால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா பிரான்ஸ் இரண்டு நாடுகளிலும் ஆட்சி மாற்றம் நடந்த பின்னர் கடந்த 2016-ம் ஆண்டு நரேந்திர மோடி - இம்மானுவேல் மேக்ரான் இடையே ரஃபேல் போர் விமானம் வாங்க புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்படி, 58,000 கோடி ரூபாய் செலவில் தயார் நிலையில் உள்ள 30 ரஃபேல் விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. அதாவது ஒரு விமானத்தில் விலை 1,600 கோடி ரூபாய். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தம் போடப்பட்ட தொகையை விட மூன்று மடங்கு அதிக தொகையில் புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த விவகாரம் பூகம்பமாக வெடித்தது, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் குற்றம் பா.ஜ.க மீது சாட்டின.

இந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுத்தது ஆளும் பாஜக அரசு. மேலும் அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், `காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் விமானங்கள் வாங்குவது தொடர்பாக எந்த ஒப்பந்தமும் இறுதியாகவில்லை. ஒப்பந்தங்கள் அனைத்துமே வெளிப்படைத் தன்மையுடன் தான் உள்ளது. இதில், எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை' என்று கூறியிருந்தார். மேலும், விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் 6 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப்பும் அமர்வில் இடம் பெற்றிருந்தனர்.

விசாரணை முடிவில் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என்று கடந்தாண்டு டிசம்பர் 14-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பை மறு விசாரணை செய்யக் கோரிய வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது. பிரான்ஸின் முன்னாள் அதிபர் ஹாலண்டே, ரஃபேல் விமானம் தயாரிக்க டசால்ட் நிறுவனத்துடன், இந்திய அரசு கூறிய ரிலையன்ஸ் டிபென்ஸ் எனது ஆட்சிக் காலத்தில் தான் ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டது. இந்த முடிவுக்கும் பிரான்சுக்கு எந்த வித சம்பந்தமும் இல்லை என்று கூறியிருந்தார். இந்த கருத்தும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு, டசால்ட் நிறுவனம் ரிலையன்ஸ் குழுமத்துடன் பங்குதாரராக முடிவு எடுத்தது. இது டசால்ட் நிறுவனத்தின் விருப்பம் என்று அறிக்கைகள் வெளியாகின.

இப்படி அடுத்தடுத்து ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்து இந்தியா, பிரான்ஸ் இரண்டு நாடுகளிலும் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பிக்கொண்டே இருந்தது. இந்நிலையில், டசால்ட் நிறுவனம் இந்த ஒப்பந்தத்திற்காக இந்தியாவில் ஒரு இடைத்தரகருக்கு 8.6 கோடி ரூபாய் லஞ்சமாக வழங்கியிருப்பதாகக் கடந்த ஏப்ரல் மாதம் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மீடியாபார்ட் என்னும் செய்தி நிறுவனம் செய்திகள் வெளியிட்டது. மேலும், இந்த விவகாரம் ஏற்கனவே இந்திய அமலாக்கத் துறைக்குத் தெரிந்துள்ளது என்றும் தெரிவித்திருந்தது. இதனையடுத்து மீண்டும் ரஃபேல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து. பிரான்சில் இந்த விவகாரத்தை விசாரிக்கக் கோரி கோரிக்கைகள் எழுந்தது.

ரஃபேல் விமானத்தில் என்ன என்ன அம்சங்கள் உள்ளது என்பதைக் கீழே உள்ள படத்தில் காணலாம்:

ரஃபேல் விமானம்

பல்வேறு கோரிக்கைகளை அடுத்து, பிரான்ஸ் அரசின் குற்ற விசாரணை பிரிவு, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான விசாரணையைக் கடந்த மாதம் தொடங்கியது. இவ்வழக்கை விசாரிக்க பிரான்ஸ் நாட்டின் நீதிபதியான ஜீன் பிரான்கோயிஸ் போநெர்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விசாரணையில், பிரான்சின் முந்தைய பிரதமர் மற்றும் தற்போதைய பிரதமர்கள் செயல்பாடுகள் என்ன என்பது குறித்தும் விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை முடிவுகள் ஏதேனும் ஊழல் அல்லது முறைகேடு நடைபெற்றிருப்பது உறுதிசெய்யப்பட்டால் பிரான்ஸ் அரசியலில் மட்டுமல்லாது இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்தியாவில் ரஃபேல் விமானம் தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் மற்றும் குழப்பங்கள் நீண்ட நெடும் தொடராக இருந்த நிலையில், இந்த விசாரணை மோடி அரசுக்குப் பின்னடைவை ஏற்படுத்துமா என்பது விசாரணை முடிவில்தான் தெரியவரும்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/rafale-agreement-france-government-launched-a-new-trial-crisis-for-modi-government

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக