தேனி பாரஸ்ட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். ராணுவத்தில் பணிபுரிந்த இவருக்கு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்துள்ள மகாலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகள் கிரிஜாபாண்டி என்பவருடன் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான நாள் முதலே கிரிஜாபாண்டிக்கும், ஈஸ்வரனுக்கும் நாள்தோறும் பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளது. கிரிஜா பாண்டியை, ஈஸ்வரனின் குடும்பத்தார் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகத் கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு, உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கிரிஜாபாண்டி அளித்த புகாரால் ஈஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனால், ராணுவத்தில் இருந்து ஈஸ்வரன் தற்காலிக பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து கிரிஜாபாண்டி, அவரது பெற்றோருடன் பேசக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் ஏற்பட்ட சமரசத்திற்குப் பிறகு, தம்பதியினர் இருவரும் ஒன்று சேர்ந்து வாழத் தொடங்கினர். மகள், கணவனுடன் நன்றாக வாழ்ந்தால் போதும் என்கிற எண்ணத்தில் தொடர்ந்து ஓராண்டுக்கும் மேலாக, கிரிஜாபாண்டியைப் பார்க்காமலும், பேசாமலும் அவருடன் எந்தத் தொடர்பும் இல்லாமலும் அவரது பெற்றோர் இருந்து வந்தனர்.
இதனிடையே குடும்பத்தினருடன் ஏற்பட்ட சண்டையால் 3 ஆண்டுகளாக தனியே வசித்து வந்த ஈஸ்வரனின் தந்தை சிவக்குமார், உடல்நலக்குறைவால் பாதிப்படைந்தார். கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் மருத்துவமனையில் இறக்கும் தருவாயில் இருந்த சிவக்குமாரைப் பார்க்க வந்த கிரிஜாபாண்டியின் தந்தை செல்வத்திடம், கிரிஜாபாண்டியை தனது மகன் ஈஸ்வரன் அடித்து கொடுமைப்படுத்தி வருவதாகத் தெரிவித்திருக்கிறார் சிவக்குமார். இதனால் சந்தேகம் அடைந்த செல்வம், தேனியில் கிரிஜாபாண்டி வசித்து வந்த முகவரிக்குச் சென்று பார்த்தபோது அங்கு, அவர்களது குடும்பம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும், பல இடங்களில் தேடியும் எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில், கடந்த ஏப்ரல் 25-ம் தேதி, தனது மகள் கிரிஜாபாண்டியைக் காணவில்லை என பதிவுத் தபால் மூலம் தேனி நகர் காவல் நிலையத்தில் செல்வம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் தலைமறைவாக இருந்த ஈஸ்வரனை 2 நாட்களுக்கு முன்பு பிடித்து வந்து விசாரணை நடத்தினர்.
அதில், கிரிஜாபாண்டியை கொலை செய்து உடலை ஆற்றில் வீசியது தெரியவந்துள்ளது. போலீஸாரின் விசாரணையில் ஈஸ்வரன் கூறியது யாதெனில், ``என் மேல வரத்தட்சணைக் கொடுமை செஞ்சதா போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுத்ததுனால நான் பார்த்துக்கிட்டிருந்த மிலிட்டரி வேலைக்குப் பிரச்னை வந்துடுச்சு. தொடர்ந்து எனக்கும் கிரிஜாவுக்கும் சண்டை வந்துக்கிட்டே இருந்துச்சு. 2019-ம் வருஷம் டிசம்பர் 25-ம் தேதி எங்களுக்குள்ள திரும்பவும் சண்டை வந்துச்சு. அதுல, கோபத்துல கிரிஜாவை அடிச்சு தள்ளிவிட்டதுல, கழிப்பறையின் சிலாப் கல்லுல மோதி தலையில பலமா அடி பட்டுடுச்சு. அதிக ரத்தக்கசிவு ஏற்பட்டு வீட்லயே கிரிஜா இறந்து போயிட்டா. அதுக்குப் பிறகு என்னோட அம்மா செல்வியிடம், தம்பி சின்ன ஈஸ்வரனிடமும் நடந்த விஷயத்தைச் சொன்னேன்.
கிரிஜாவோட உடம்பை வீட்ல இருந்தது அப்புறப்படுத்திடலாம்னு முடிவெடுத்தோம். சாக்குப்பையில கிரிஜாவோட உடம்பைக் கட்டிட்டோம். இன்னொரு சாக்குப்பைக்குள்ள கருங்கல்லைக் கட்டினோம். ரெண்டு சாக்குமூட்டையையும் பைக்குல வச்சு கொண்டு வந்து, அரன்மணைப்புதூர் முல்லைப் பெரியாற்றில் வீசிட்டோம். யாருக்கும் சந்தேகம் வந்துடக்கூடாதுன்னு அடிக்கடி வீட்டை மாற்றிக்கிட்டே இருந்தோம். கடந்த 3 வருஷத்துல மட்டும் தேனியில் பி.சி.பட்டி, பாரஸ்ட்ரோடு, கே.ஆர்.ஆர். நகர், அனுக்கிரஹா நகர், ரத்தினம்நகர்னு 12 வீடுகளை மாத்தியிருக்கோம்” எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையில் ஈஸ்வரனின் தம்பி சின்ன ஈஸ்வரன், கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக காவல்துறையில், காவலராக பணியில் சேர்ந்து, பழனியில் பட்டாலியன் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். கிரிஜாபாண்டியை கொலை செய்து ஆற்றில் வீசியதாகச் சொல்லப்படும் அரன்மனைப்புதூர் முல்லைப் பெரியாற்றில் கிரிஜா பாண்டியனின் சடலத்தைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். ஈஸ்வரன், சின்ன ஈஸ்வரன் ஆகியோர் கிரிஜாவின் உடல் வீசப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினர். இக்கொலைச் சம்பவம் நடந்து ஓராண்டுக்கு மேலானதாலும், தொடர்ந்து முல்லைப் பெரியாற்றில் அதிகளவு நீர்வரத்தாலும் சடலத்தை கண்டுபிடிப்பதில் போலீஸாருக்கு சிரமம் ஏற்பட்டது. பல மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் முல்லை ஆற்றில் தேடியும் சடலம் கிடைக்கவில்லை.
இதையடுத்து வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாக்கி இளம்பெண்ணை கொலை செய்து ஆதாரங்களை மறைத்ததாக 498(ஏ), 302, 109 மற்றும் 201 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் ஈஸ்வரன், சின்ன ஈஸ்வரன்,செல்வி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த தேனி நகர் காவல் நிலைய போலீஸார் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதித்துறை நடுவர் ரமேஷ் முன்னிலையில் மூவரையும் ஆஜர்படுத்தினர். பின்னர், ஈஸ்வரன் மற்றும் சின்ன ஈஸ்வரன் ஆகியோர் விருதுநகர் மாவட்டச் சிறையிலும், அவரது தாய் செல்வி நிலக்கோட்டை மகளிர் கிளைச்சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
source https://www.vikatan.com/news/crime/the-soldier-who-killed-his-wife-caught-after-1-year-in-theni
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக