வழிப்பறி, கொள்ளை, திருட்டு போன்ற காரியங்களில் ஈடுபடுபவர்கள் பல வழிகளில் தங்களது வேலையை காட்டுகின்றனர். மும்பையை சேர்ந்த ஒரு பெண் தனது மகனுடன் சேர்ந்து கொண்டு தனியாக நடந்து செல்லும் முதியவர்களை குறி வைத்து பணம் பறித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இப்பெண் எப்போதும் ஆடம்பரமான கார் ஒன்றில் தனது இலக்கை தேடி அலைவார். அவருடன் அவரது மகனும் செல்வது வழக்கம். காரில் சென்று கொண்டிருக்கும் போது எங்காவது முதியவர்கள் தனியாக செல்வதை பார்த்தால் உடனே காரை தூரத்தில் நிறுத்திவிட்டு முதியவரிடம் சென்று நயமாக பேசி, பாலியல் உணர்ச்சியை தூண்டி அவரிடமிருக்கும் பொருட்களை கொள்ளையடித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மும்பை சார்க்கோப் பகுதியை சேர்ந்த 70 வயது முதியவர் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்துவிட்டு தனியாக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பெண் முதியவரை அணுகி அழ ஆரம்பித்தார். தனது கணவர் தன்னை துன்புறுத்துவதாக தெரிவித்தார். இதனால் அந்த முதியவர் அப்பெண் மீது பரிதாபப்பட்டார்.
அதோடு தனது கணவன் தன்னை தாம்பத்திய ரீதியில் திருப்தியாக வைத்துக்கொள்வதில்லை என்று கண்ணீர் மல்க பேசினார். அதோடு அந்த முதியவரிடம் உங்களுடன் சிறிது சேரத்தை செலவிட விரும்புவதாக தெரிவித்தார். அதை முதியவர் உண்மையென நம்பினார். உடனே அப்பெண் ஆட்டோ ஒன்றில் ஏறி, அம்முதியவரை அழைத்துக்கொண்டு அருகில் கட்டுமானப்பணி நடந்து கொண்டிருக்கும் ஒரு இடத்திற்கு சென்றார்.
அங்கு வைத்து முதியவர் அணிந்திருந்த தங்க செயின் மற்றும் அவரிடம் இருந்த பணத்தை கட்டாயப்படுத்தி பிடுங்கினார். கொடுக்கவில்லையெனில் வன்கொடுமை செய்துவிட்டதாக கத்தி கூச்சல் போட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் முதியவர் தன்னிடமிருந்த பொருட்களை அப்பெண்ணிடம் கொடுத்துவிட்டு சென்றார். தொடர்ந்து இது குறித்து போலீஸிலும் புகார் செய்தார். போலீஸார் உடனே இது குறித்து விசாரணையில் இறங்கினர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை முழுமையாக ஆய்வு செய்ததில் அப்பெண் காரில் வந்து இக்காரியத்தில் ஈடுபடுவது தெரிய வந்தது. இம்மோசடியில் ஈடுபட்ட பெண்ணின் புகைப்படத்தை அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அப்பெண்ணின் பெயர் கீதா பட்டேல்(40) என்று தெரிய வந்தது. ஏற்கனவே அப்பெண் இது போன்று 14 முதியவர்களிடம் தனது கைவரிசையை காட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அப்பெண்ணுடன் அவரது மகனும் சேர்ந்து இக்காரியத்தில் ஈடுபடுவது தெரிய வந்தது. அப்பெண்ணின் வீட்டிற்கு அருகிலேயே அவரை மடக்கி பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர். போலீஸாரே ஒரு போலி முதியவரை அனுப்பி வைத்தனர். அப்பெண் வழக்கம் போல் அம்முதியவரிடம் நயமாக பேசி அழைத்து செல்ல பார்த்தார். அதற்குள் போலீஸார் அப்பெண்ணையும் அவரது மகனையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து கீதா பட்டேலிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் முதியவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தனியாக செல்லும் முதியவர்கள் திடீரென யாராவது வந்து பேச்சுக்கொடுத்தால் அதனை தவிர்க்கும்படி போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இதற்கு முன்பு வயது முதிர்ந்த பெண்களிடம் அருகில் திருடர்கள் இருப்பதாக கூறி தங்க நகைகளை கழற்றி கர்ச்சீப்பில் வைத்து செல்லும்படி கூறி அந்த நகைகளை அபேஸ் செய்யும் சம்பவங்கள் நடந்தது. இப்போது மோசடி பேர்களின் பார்வை முதியவர்களிடம் திரும்பி இருக்கிறது.
Also Read: மும்பை: `இறப்புச் சான்றிதழை வாங்கிச் செல்லுங்கள்!‘ - உயிருடன் இருப்பவருக்கு வந்த அதிர்ச்சி போன் கால்
source https://www.vikatan.com/news/crime/a-woman-who-stole-jewelery-and-money-from-senior-citizens-in-mumbai-arrested
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக