2021 ஃபார்முலா ஒன் சீசன் தொடங்கும்போது இது லூயிஸ் ஹாமில்டன் vs மேக்ஸ் வெரஸ்டப்பன் போட்டியாக, மெர்சிடிஸ் vs ரெட்புல் மகா யுத்தமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தொடக்கமும் அப்படித்தான் இருந்தது. முதல் 6 ரேஸ்களில் இரு அணியின் வீரர்களும் தலா 3 முறை வென்றிருந்தனர். ஹாமில்டன் 3 முறையும், வெஸ்டப்பன் 2, செர்ஜியோ பெரஸ் 1 முறையும் முதலிடம் பெற்றிருந்தனர். மொனாக்கோவில் ஹாமில்டன் போடியத்தைத் தவறவிட்டதால் 4 புள்ளிகள் முன்னிலை பெற்றிருந்தார். டிராக் இன்னும் சூடு பிடிக்கும் என்று நினைத்திருந்த நிலையில், அடுத்த 3 ரேஸ்களையும் வென்று ஹாட்ரிக் அடித்திருக்கிறார் மேக்ஸ் வெஸ்டப்பன்.
பிரான்ஸில் ரெட்புல்லின் கூடுதல் பிட்ஸ்டாப் யுக்தியால் வெற்றி பெற்ற வெஸ்டப்பன், ரெட்புல்லின் ஹோம் ரேஸ்களான ஸ்டிரியன் கிராண்ட் ப்ரீ, ஆஸ்திரியன் கிராண்ட் ப்ரீ ரேஸ்களை மிகவும் எளிதாக வென்றிருக்கிறார். அதிலும், நேற்று நடந்த ஆஸ்திரியன் கிராண்ட் ப்ரீயில் ஆதிக்கத்தின் உச்சமாக இருந்தது. 17-வது லேப்பின்போதே 7 நொடிகள் முன்னிலை பெற்று, அவர் மட்டும் தனியாக ஒரு ரேஸ் ஓட்டிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு லேப் முடியும்போது தன்னுடைய ஃபாஸ்டஸ்ட் லேப் டைமிங்கை முறியடித்துக்கொண்டே இருந்தார். நடப்பு சாம்பியன் ஹாமில்டன் ஒரு கட்டத்தில் தடுமாறிக்கொண்டிருக்க, வெஸ்டப்பன் ஓட்டியதைப் பார்க்கும்போது, இந்த சீசன் இங்கேயே முடிவுக்கு வருமோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
ரேஸை வென்றதோடு அதிவேக லேப் டைமிங்கையும் பதிவு செய்த வெஸ்டப்பன், இந்த சீசனில் 182 புள்ளிகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். இந்த ரேஸில் நான்காவது இடமே பெற்ற லூயிஸ் ஹாமில்டன் 32 புள்ளிகள் பின்தங்கியிருக்கிறார்.
ஆரம்பம் முதல், இறுதி வரை 71 லேப்களையும் தனியாக ஓட்டிக்கொண்டிருந்த வெஸ்டப்பனைப் பற்றிப் பேசுவதைவிட, தொடர்ந்து கோதாவில் இருந்துகொண்டிருந்த வீரர்களைப் பற்றிப் பேசியாகவேண்டும். குறிப்பாக லாண்டோ நாரிஸ். இதுவரை நடந்து முடிந்திருக்கும் 9 ரேஸ்களிலும் புள்ளிகள் பெற்றிருக்கும் ஒரே டிரைவர் அவர்தான். இந்த சீசன் ஹாமில்டன் - வெஸ்டப்பன் போட்டியின்மீதே லைம்லைட் இருந்தாலும், சத்தமின்றி தனக்கென்று ஒரு தனி டிராக் அமைத்து தன் காரைப் பாய்ச்சிக்கொண்டிருக்கிறார்.
ஆஸ்திரிய கிராண்ட் ப்ரீ தகுதிச் சுற்றில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, மெர்சீடிஸ் வீரர்களுக்கு முன்னால் வந்து கிரிட்டில் இரண்டவதாக ரேஸைத் தொடங்கினார் நாரிஸ். ஆரம்பத்திலேயே Safety Car பயன்படுத்தப்பட்டு மீண்டும் ரேஸ் தொடங்க, நாரிஸ், பெரஸ் இருவரும் கடுமையாகப் போட்டியிட்டனர். நாரிஸை முந்திவிடவேண்டும் என்பதில் மிகவும் தீர்க்கமாக இருந்தார் பெரஸ். அதனால், மிகவும் அக்ரஸிவாக செயல்பட்டு அவரை முந்த நினைத்தார். ஓரளவு நன்றாக டிஃபண்ட் செய்த நாரிஸ், ஒருகட்டத்தில் டிராக்கின் ஓரத்துக்கு வந்து பெரஸின் கார் வெளியே செய்யுமாறு செய்தார். அதனால், 11-வது இடத்துக்குப் பின்தங்கினார் பெரஸ். அதன்பிறகு அந்தச் சம்பவம் சோதனைக்குள்ளாக்கப்பட்டு நாரிஸுக்கு 5 நொடி பெனால்டி கொடுக்கப்பட்டது.
அதுவரை பல ரிஸ்க்குகள் எடுத்து ஹாமில்டன் தன்னை முந்தாத வகையில் டிஃபண்ட் செய்த நாரிஸ், பெனால்ட்டி என்று தெரிந்ததும், டயரைப் பாதுகாக்கவேண்டி, ஹாமில்டன் ஓவர்டேக் செய்ய ஒதுங்கிக்கொண்டார். தன் பிட் ஸ்டாப்பின்போது 5 நொடி பெனால்ட்டிக்கும் சேர்த்து பிட்டில் இருந்துவிட்டு வெளியேறியவர் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு முன்னேறினார். தொடர்ந்து மெர்சிடிஸ் வீரர்களைவிட வேகமாகச் செயல்பட்டார். இரண்டாவது இடத்தில் இருந்த ஹாமில்டனின் வேகம் குறைந்ததாலும், மூன்றாவது இடத்தில் இருந்த போட்டாஸை நாரிஸ் நெருங்கியதாலும், ஹாமில்டனை போட்டாஸ் முந்துவதுதான் சரியான முடிவாக இருக்குமென்று முடிவெடுத்தது மெர்சிடிஸ். நாரிஸ் இருவரையும் முந்திவிடக்கூடும் என்பதால், அவருக்கிடையிலான இடைவெளியை அதிகரிக்க, போட்டாஸ் ஹாமில்டனை ஓவர்டேக் செய்தார்.
மெர்சிடிஸ் எதிர்பார்த்ததைப் போலவே புயலெனப் பாய்ந்த நாரிஸ், 54-வது லேப்பில் ஹாமில்டனை முந்தினார். மூன்றாவது இடத்தைக் கடைசி வரை தக்கவைத்து போடியமும் ஏறினார். இந்த சீசனில் அவர் ஏறும் மூன்றாவது போடியம் இது. 5 நொடி பெனால்டிக்குப் பிறகும் சிறப்பாகச் செயல்பட்டதால், ரசிகர்களால் இந்த ரேஸின் சிறந்த டிரைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவரை இந்த சீசனில் 101 புள்ளிகள் பெற்றிருக்கும் நாரிஸ், டிரைவர்கள் சாம்பியன்ஷிப்பில் நான்காவது இடத்தில் நீடிக்கிறார்.
5-8 இடங்களுக்கு நான்கு வீரர்களுக்கிடையே கடும் போட்டி நிலவியது. பெரஸ், டேனியல் ரிக்கியார்டோ, கார்லோஸ் சைன்ஸ், சார்ல் லெக்லர்க் ஆகியோர் கடைசி கட்டம் வரை போராடினர். பெரஸ் ஐந்தாவது இடத்தில் நல்ல முன்னிலையில் இருந்தார். இருந்தாலும் லெக்லர்க் இரண்டு முறை டிராக்கிலிருந்து வெளியேறும் வகையில் செயல்பட்டதால், அவருக்கு இரண்டு முறையும் 5 நொடி பெனால்டி வழங்கப்பட்டிருந்தது. அதனால், தனக்கு அடுத்து இருக்கும் வீரரைவிட 10 நொடிகள் முன்னிலை பெறவேண்டிய நிலையில் இருந்தார் பெரஸ்.
Also Read: EURO2020 : உக்ரேனை ஊதித் தள்ளிய இங்கிலாந்து… அரையிறுதியில் ஸ்பெயின் Vs இத்தாலி!
ஆறாவதாக இருந்த ரிக்கியார்டோவைவிட வேகமாக செயல்பட்டு, அந்த இடைவெளியை அதிகரித்துக்கொண்டிருந்தார். ரிக்கியார்டோவோ லெக்லர்க்கை முந்தவிடாமல் டிஃபண்ட் செய்துகொண்டிருந்தார். அவரால், பலமுறை போராடியும் ரிக்கியார்டோவை முந்த முடியாததால், தன்னைவிட வேகமாக ஓட்டிக்கொண்டிருந்த டீம் மேட் சைன்ஸை முந்தவிட்டார். சில நிமிடங்களிலேயே ரிக்கியார்டோவை முந்தினார் சைன்ஸ். கிட்டத்தட்ட 10 நொடி இடைவெளியை உருவாக்கிக்கொண்டிருந்த பெரஸ், சைன்ஸின் வேகத்தால் அதை இழந்தார். அதனால், இறுதியில் ஐந்தாவதாக ரேஸை முடித்தாலும், பெனால்ட்டியின் காரணமாக ஆறாவது இடமே பெற்றார் செர்ஜியோ பெரஸ்.
அணிகளுக்கான புள்ளிப் பட்டியலில் 252 புள்ளிகளோடு முதலிடத்தில் இருக்கிறது ரெட்புல். மெர்சிடிஸ் அவர்களைவிட 40 புள்ளிகள் பின்தங்கியிருக்கிறது. மெக்லாரன் (120 புள்ளிகள்), ஃபெராரி (108 புள்ளிகள்) அணிகள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.
source https://sports.vikatan.com/sports-news/2021-formula-one-austrian-grand-prix-highlights
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக