Ad

ஞாயிறு, 4 ஜூலை, 2021

`ஒருநாள் என் பெயரை எல்லோரும் உச்சரிப்பாங்க!' - கூலி வேலை டு செல்போன் ஷோரூம்; சாதித்த தொழிலதிபர்

ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங் படிக்க ஆசை.

ஆனால், முதலில் கிடைத்தது டயர் விற்பனை கடையில் வேலை;

பிறகு புல்லட் மெக்கானிக்கிடம் வேலை;

டி.வி.எஸ் வண்டி சர்வீஸ் கடையில் வேலை;

மண்டிக் கடையில் மூட்டைத் தூக்கும் வேலை;

ஃபைனான்ஸ் கம்பெனியில் வேலை;

மாமாவுக்குச் சொந்தமான லாரியில் கிளீனர்;

டயர் விற்பனை கம்பெனியில் வேலை;

பார்ட்னர்களுடன் சேர்ந்து டயர் விற்பனை கம்பெனி;

சொந்தமாக லாரி பிஸினஸ்...

`அடச்சே... இதுல எதுவுமே கடைசிவரை செட்டே ஆகல. ஆனா, செமையாக செட் ஆனது... செல்போன்.

இன்று பலருக்கும் வேலை கொடுக்கும் அளவுக்கு முன்னேறி ஒரு முதலாளியாக அமர்ந்திருக்கும் நாமக்கல் மாவட்டம், நல்லிப்பாளையம் வாசு சீனிவாசனின் கதை, நம்பிக்கைப் படிக்கட்டு!

கடையில் வாசு சீனிவாசன்

``ஒருகாலத்துல சாப்பாட்டுக்கே சிரமப்பட்டோம். சொந்தமா கொஞ்சம் நிலம் இருந்துச்சு. அது மானாவாரி நிலம்ங்கிறதால, பெருசா வருமானம் இல்லாத சூழல். எனக்கு சின்ன வயதில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங் படிக்கணும்னு ஆசை. மேல்நிலை வகுப்புகள்ல கணிதப் பிரிவை எடுத்துப் படிச்சேன். ஆனா, 12-வதுல கணக்குப் பாடத்தில் தேர்ச்சியடையலை. என்னோட அப்பா நாமக்கல்ல இருந்த ஒரு டயர் விற்பனை கடையில் கணக்கு எழுதுற வேலைக்கு சேர்த்துவிட்டார். இடையில் கணக்குப் பாடத்தை எழுதி பாஸ் செஞ்சேன். கணக்கு நமக்கு பிணக்குங்கிறதால அடுத்து புல்லட் மெக்கானிக் ஒருத்தர்கிட்ட வேலைக்குப் போனேன். ஆனால், புல்லட்டை என்னால தள்ளமுடியலனு வேலையைவிட்டு அனுப்பிட்டாங்க. மனம் சோர்ந்து கிடந்த நிலையில, டி.வி.எஸ் வண்டி ரிப்பேர் பார்க்குற ஒருவர்கிட்ட வேலைக்குச் சேர்த்துவிட்டாங்க. பில் போடுறது, ஆட்டோபார்ட்ஸ் பொருள்கள் வாங்கிட்டு வர்றதுனு வேலை பார்த்தேன். கொஞ்சநாள்ல அதுவும் ஃபிட் ஆகலை.

தானிய மண்டி கடை ஒண்ணுக்கு வேலைக்குப் போனேன். மூட்டைத் தூக்கத் தெரியலைனு மூணே மாசத்துல விரட்டிட்டாங்க. ஒரு ஃபைனான்ஸ் கம்பெனியில சேர்ந்து, ஒரு வருஷம் வேலை பார்த்தேன். அதுவும் சரிப்பட்டு வரல. பிறகு, எங்க மாமா ஒருவர் சொந்தமா லாரி வாங்கினார். அதுல கிளீனரா போனேன். எந்த வேலையும் உருப்படியா தெரியலைனு என்னை நானே நொந்துகிட்டேன். இருந்தாலும், தன்னம்பிக்கையைத் தளரவிடலை.

1984-ம் வருஷம், மாசம் சம்பளம் ரூ.150-க்கு டயர் விற்பனை கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தேன். கடை முதலாளி கோபால், தொழில் நுணுக்கங்களை எனக்கு சொல்லிக் கொடுத்து அன்பா கவனிச்சுக்கிட்டார். அதனால, அங்க மட்டும்தான் 11 வருஷம் வரைக்கும் வேலை பார்த்தேன். என்னை நானே புடம் போட்டுக்கிட்ட வருஷங்கள் அதுதான்.

வாசு சீனிவாசன்

இடையில, உறவினர்கள் எதிர்ப்பை மீறி, லவ் மேரேஜ் பண்ணிகிட்டேன். ரூ.1,150 சம்பளம் வாங்கிகிட்டு இருந்த நான், டயர் கம்பெனி வேலையை விட்டுட்டு, 1995-ம் வருஷம் ஸ்ரீவாசு டயர்ஸ்ங்கிற பெயர்ல சேலம் ரோட்டுல கடை ஆரம்பிச்சேன். நாலு பேர் பார்ட்னர்ஸ். கடினமா உழைச்சோம். வருமானம் வர ஆரம்பித்தது. ஒரு வருஷத்துல பார்ட்னர்ஸ் பிரிஞ்சதால, நான் மட்டும் முதலாளியானேன். ஆனா, தொழிலாளி மாதிரியே உழைச்சேன். பழுதில்லாம வருமானம் கிடைச்சுது. கையில் இருந்த காசைப் போட்டு 1996-ம் வருஷம் ரூ.11 லட்சத்துல சொந்தமா லாரி வாங்கினேன். ஆனா, டிரைவர் மரத்துல கொண்டுபோய் மோதினதால... ரூ.6 லட்சம் வரை நஷ்டம்.

விதியை நொந்துகிட்டு வாழ்க்கையை ஓட்டிக்கிட்டிருந்தேன். 1999-ம் வருஷம், பி.பி.எல் போன் நெட்வொர்க் நாமக்கல்ல கால் ஊன்றியது. அந்த போன் கனெக்‌ஷன் வாங்குறதுக்காக நண்பரோட போனேன். ஆனா, அந்த ஆபீஸ் ஊழியர்கள் எங்களை உட்கார வச்சுட்டு, வேற வேலைகளைப் பார்த்துக்கிட்டே இருந்தாங்க. மரியாதை கிடைக்காத இடத்துல நமக்கென்ன வேலைனு போன் கனெக்ஷன் வாங்காம கோபத்தோடு திரும்பிட்டோம்.

அடுத்த ரெண்டு மாசத்துல ஏர்செல் நெட்வொர்க் டீலர்ஷிப்புக்கான விளம்பரம் வந்துச்சு. பி.பி.எல் ஊழியர்கள் மதிக்காத கோபத்துல இருந்த நான், ஏர்செல் கனெக்ஷன் வாங்குறதை விட்டுட்டு, ஏர்செல் டீலர்ஷிப்புக்கே அப்ளை பண்ணினது ஒரு திருப்புமுனை. நேர்முகத் தேர்வுக்குப் போனப்ப, பத்து பெரிய கோடீஸ்வரர்கள் வெயிட்டிங். `படிப்பு இல்லை, டயர்கடை மட்டும்தான் வெச்சுருக்கீங்க. அதோட 34 வயதுதான். உங்களை நம்பி எப்படி டீலர்ஷிப் தர்றது’னு கேட்டு திருப்பி அனுப்பப் பார்த்தாங்க. `ஓட்டப்பந்தயத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் ஓடலாம். ஆனால், இதில் முதல் பரிசு வாங்க போறதுதான் வாசுதான் சார்’னு நம்பிக்கையா சொன்னதும், தலைமை அதிகாரி சந்திரமோகனுக்கு என்மேல் நம்பிக்கை வந்தது. டீலர்ஷிப் கொடுத்தார்.

டயர் கடையை மூடிட்டு, ரூ. 15 லட்சம் செலவுல வாசுங்கிற பெயர்ல கடை போட்டேன். `ஏர்செல் வாசு’னு பலரும் சொல்ற அளவுக்கு, சிறந்த டீலரா மாறினேன். புதுமைகளைக் கத்துக்கத் தயங்காததால, அந்த நிலையை எளிதா அடைய முடிந்தது.

வாசு செல் கடை

2003-ல் ரிலையன்ஸ் 500 செட் பிரபலமானதால், அந்த டீலர்ஷிப்பையும் எடுத்தேன். `இனி உலகை உள்ளங்கைக்குள் கொண்டுவரப் போறது செல்ங்கிற வஸ்துதான்’ என்பதை அப்பவே உணர்ந்து, திருச்சி சாலையில் `ஸ்ரீ வாசு செல்’ங்கற பேர்ல செல்போன் கடையை ஆரம்பிச்சேன். ஏர்டெல் சிம் டீலர்ஷிப்பும் எடுத்தேன்'' என்று வெற்றிப்படிக்கட்டுகளில் கால்பதித்த வாசு, அதேநேரம் சறுக்கியும் விழவே செய்திருக்கிறார்.

``ரிலையன்ஸ் கடை மூலம் சம்பாதிச்ச ரூ.25 லட்சம், ஷேர் மார்க்கெட்டில் போட்டேன். சரிவர யோசிக்காம, கணக்கு வழக்கு பார்க்காம விட்டதால அவ்வளவு பணத்தையும் இழந்து, வெறும் ஆளாயிட்டேன். ரூ15 லட்சம் கடன் வேற. மறுபடியும் மொபைல் கடையில இறங்கி உழைச்சே கடனை அடைச்சேன். கூடவே, செல்போன் கடை தொழிலையும் டெவலெப் செய்தேன்''

இதன் பிறகு வாசுவுக்கு ஏறுமுகமே!

``2013-ம் வருஷம் நாமக்கல்ல ரூ.90 லட்சம் செலவுல வீடு கட்டினேன். கார் வாங்கினேன். 2016-ல திருச்செங்கோட்டில் ரெட்மி பிரான்சைஸி கடை; 2019-ல நாமக்கல்லேயே ரெட்மி ஷோரூம், பரமத்திவேலூர் சாலையில மல்ட்டி பிராண்ட்ஸ் செல்போன் ஷோரூம்; 2021 திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையத்துக்கிட்ட மல்ட்டி பிராண்ட்ஸ் செல்போன் கடைனு அடுத்தடுத்து திறந்தேன். பி.இ மற்றும் எம்.பி.ஏ படிச்ச என்னோட மகன் பூமகனை என் தொழில்லயே இறக்கிவிட்டேன். என்னோட வருமானத்துல பெரும்பகுதியை அடுத்தடுத்து பிசினஸ் விருத்தி செய்வதற்காகப் பயன்படுத்துறேன்.

செல்போன் விற்பனை செய்யும் வாசு சீனிவாசன்

அதனால, எல்லா செலவும் போக மாதம் ரூ.1.5 லட்சம் வரை லாபம் வருது. ஆனா, கொரோனா காலம்ங்கிறதால, கொஞ்சம் சுணக்கம்தான்'' என்று சொல்லும் வாசு, தற்போது 12 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்புக் கொடுத்துவருகிறார். செல்போன்கள் மட்டுமன்றி, ஸ்மார்ட் டி.வி விற்பனை, செல்போன் சர்வீஸ் என் அனைத்திலும் கால்பதித்துவருகிறார்.

இவருடைய இந்த வெற்றிக்குக் காரணம்... கடையைக் கூட்டுவது தொடங்கி, வாடிக்கையாளர்களின் போன் அழைப்புகளை அட்டென்ட் செய்வது வரை இன்னமும் தானே செய்வதும்... புதுமையைக் கற்றுக்கொள்வதில் இருக்கும் ஆர்வம் மற்றும் விடாமுயற்சி ஆகியவையும்தான் என்கிறார்.

``கடையில இருந்தாலும், வெளியில இருந்தாலும் எல்லா போன் கால்களையும் அட்டென்ட் பண்ணிருவேன். புதுப்புது வாய்ப்புகள் கூரையைப் பிய்ச்சிக்கிட்டு இல்ல... ஒரு போன்கால் மூலமாகூட வரலாம் இல்லையா?'' என்று வெள்ளந்தியாகச் சிரிக்கும் வாசு, ``ஒரு பிராண்ட் அப்படினு உருவாக நினைக்கிறேன். அந்த பிராண்டுக்கு என் முகம்தான் அடையாளமா இருக்கணும். அதை வெச்சு, ஒருநாள் நாடே என் பெயரை உச்சரிக்கிற நிலைக்கு போகணும். அதுதான் என் வாழ்நாள் இலக்கு. அதை அடைய அடிமேல் அடி எடுத்து வெச்சிட்டிருக்கேன்” என்று கைகளை உயர்த்துகிறார்!

செல்போன் விற்பனை செய்யும் வாசு சீனிவாசன்

துணிச்சலாக எடுக்கப்படும் முயற்சிகளும் முடிவுகளும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதற்கு நிறையவே எடுத்துக்காட்டுகள் இங்கே உண்டு. வாசுவும் அந்தப் பட்டியலில் இணையட்டும்!



source https://www.vikatan.com/business/news/namakkal-businessman-vasu-srinivasan-shares-his-inspirational-story

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக