``கட்சி விஷயங்கள் தொடர்பாக என்னிடம் எம்.ஜி.ஆர் நிறைய கேட்பார். நானும் ஆலோசனைகளை கூறியுள்ளேன்” என்று துாத்துகுடி அ.தி.மு.க நிர்வாகியிடம் சசிகலா பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலிலதாவுக்கும் சசிகலாவுக்கும் உள்ள உறவை நாடறியும். ஜெயலிலதாவின் ஆஸ்தான ஆலோசகர்களாக ஆரம்பம் முதல் இறுதி வரை இருந்தவர்கள் சசிகலாவும் அவரது கணவர் நடராஜனும் என்பதை அ.தி.மு.க வில் இன்று உறுப்பினர்களாக இணைந்தவர்கள்கூட அறிந்து வைத்திருப்பர். அதேபோல், ஜெயலலிதாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே இருந்த நட்பு, அரசியல் விவகாரங்களை அறிந்தவர்களும் இப்போது இருக்கிறார்கள். இந்நிலையில் இதுவரை ஜெயலலிதாவைக் குறிப்பிட்டு மட்டுமே தொண்டர்களுடன் உரையாடி வந்த சசிகலா அ.தி.மு.கவின் ஆலமரமாக அறியப்படும் எம்.ஜி.ஆர் என்கிற பிம்பத்தை கையில் எடுத்ததை அ.தி.மு.கவின் மூத்த நிர்வாகிகள் ரசிகவில்லை என்கிற பேச்சு அ.தி.மு.கவில் எழுந்துள்ளது.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு எத்தனையோ தலைவர்கள் 'எம்.ஜி.ஆர்' என்கிற பிம்பத்தைப் பயன்படுத்தி தங்கள் அரசியல் முகத்தை மக்களிடம் பதியவைக்க விரும்பியிருக்கிறார்கள். அந்த யுக்தியை எதற்காக சசிகலா இப்போது கையில் எடுத்தார் என்கிற குழப்பம் அ.தி.மு.க தலைமையிடம் இருக்கிறது. "சசிகலாவிடம் ஆலோசனை கேட்கும் நிலையிலா? எம்.ஜி.ஆர் இருந்தார்!" என்று சசிகலா ஆதரவாளர்களிடம் கேட்டால், "எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான வலம்புரிஜானே இது தொடர்பாக அவரது தொடரில குறிப்பிட்டிருக்கிறார்" என்று சுட்டிக்காட்டுகிறார்கள். உண்மையில் வலம்புரிஜான் அந்தப் புத்தகத்தில் என்ன குறிப்பிட்டுள்ளார் என்கிற விவரங்கள் குறித்த தகவல்களும் இப்போது வெளியாக்கிக்கொண்டிருக்கிறது.
வார இதழ் ஒன்றில் 90-க்கு பிறகு வலம்புரி ஜான் நீண்ட தொடர் ஒன்றை எழுதினார். அது புத்தகமாகவும் வெளிவந்தது.ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் முதல் சசிகலா தரப்புக்கும் ஜெயலலிதாவுக்கும் ஏற்பட்ட நட்புவரை அந்தத் தொடரில் விரிவாக எழுதியிருந்தார் வலம்புரி ஜான். அந்தப் புத்தகத்தில் 49-வது பக்கத்தில் “ ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு மிகச்சரியான ஒரு ஆள் தனக்கு வேண்டும் என்கிற முடிவிற்கு வந்தார். அப்போது சசிகலாவைப் பற்றிய தகவல்கள் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்தன. ஒரு பெண்ணைப் பயன்படுத்தி மற்றொரு பெண்ணை உளவு பார்த்தார் எம்.ஜி.ஆர். போயஸ்தோட்டதில் நான் பார்த்த சசிகலாவை, தியாகராயநகர் அலுவலகத்திலும், சில வேளை எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திலும் பார்த்திருக்கிறேன். எம்.ஜி.ஆருக்கு தெரியாமல் ஜெயலலிதாவையும், ஜெயலலிதாவிற்கு தெரியாமல் எம்.ஜி.ஆரையும் கண்காணித்த சசிகலா வணக்கத்திற்குரியவர். அன்றைக்கிருந்த சசிகலா உண்மையில் எம்.ஜி.ஆர் ஆளா? ஜெயலலிதா ஆளா? ” எனக் கேள்வியையும் எழுப்பியிருக்கிறார் வலம்புரி ஜான்.
வலம்புரி ஜான் குறிப்பிடும் இந்த காலம் என்பது 1985-க்குப் பிறகுதான். அப்போது சசிகலா வீடியோ கடை வைத்திருந்ததையும், வீடியோ கடைத்தொழிலில் அவரது கணவர் நடராஜனும் சசிகலாவுக்கு உதவியாக இருப்பதையும் குறிப்பிட்டுள்ளார். அப்போது அ.தி.மு.க அலுவலகத்தில் மேலாளராக இருந்த துரை என்பவர் மூலம் ஜெயலலிதாவின் கூட்டங்களை வீடியோ எடுக்கும் பணியை சசிகலா தரப்பு வாங்கியதையும் குறிப்பிட்டிருக்கிறார். சசிகலாவிடம் எம்.ஜி.ஆர் ஆலோசனை கேட்டதாக சொல்லப்படும் தகவல் பற்றி வலம்புரி ஜான் புத்தகத்தில் இல்லை. ஆனால், ஜெயலலிதா பற்றியும்,போயஸ் தோட்டத்தில் நடக்கும் விஷயங்களையும் தெரிந்துக்கொள்ள சசிகலாவை எம்.ஜி.ஆர் பயன்படுத்திக் கொண்டார் என்பதை சில சம்பவங்களைக் குறிப்பிட்டு வலம்புரி ஜான் எழுதியிருக்கிறார்.
“சசிகலா எம்.ஜி.ஆரின் ஆளும் அல்ல, ஜெயலலிதாவின் ஆளும் அல்ல, சசிகலா சசிகலாவின் ஆள் மட்டுமே” என்று வலம்புரிஜான் குறிப்பிட்டுள்ளார்.அதாவது எம்.ஜி.ஆர் - ஜெயலிலதா என்கிற இரண்டு மனிதர்களுக்கு இடையேயான இடைவெளியை அப்போது கச்சிதமாகப் பயன்படுத்தி அரசியல் ஆட்டத்தை ஆடியவர்கள் சசிகலாவும், அன்றைக்கு செய்தித் துறையில் பணியாற்றிய நடராஜனும் என்கிறார் வலம்புரி ஜான்.
சசிகலாவின் எம்.ஜி.ஆர் தொடர்பான பேச்சை அ.தி.மு.க-வில் தற்போதுள்ள எம்.ஜி.ஆர் காலத்து ஆட்கள், "அடிப்படையே இல்லாத விஷயம் இது" என்று மறுக்கிறார்கள். எம்.ஜி.ஆர் ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.சி.பழனிசாமியிடம் இதுபற்றி கேட்டால், “எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம் போயஸ் தோட்டம் போன்று யாரும் எளிதில் நெருங்க முடியாத இடம் அல்ல. அங்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம். அந்த அடிப்படையில் சசிகலாவும் அவர் வீட்டு வாசலில் போய் நின்றிருக்கலாம். அல்லது வலம்புரி ஜான் சொல்வது போல கடிதம் கொடுக்கக்கூட போய் இருக்கலாம். அதற்காக எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை சொன்னேன் என்று சொல்வதெல்லாம் பைத்தியகாரத்தனம் .இதற்கு பன்னீரோ, பழனிசாமியோ பதில் அளிக்கமுடியாது. காரணம் அவர்களே அப்போது எம்.ஜி.ஆருடன் தொடர்பில் இல்லாதவர்கள். ஆனால், நாங்கள் அப்போதே எம்.ஜி.ஆருடன் பயணித்தவர்கள்.
எம்.ஜி.ஆர், யாரைப் பற்றியாவது தகவல்களைத் தெரிந்துக்கொள்ள விரும்பினால் அப்போதிருந்த காவல்துறை அதிகாரி மோகன்தாஸ் மூலமே அதைப் பெரும்பாலும் செய்வார். அதைத்தாண்டி அரசியல் துறையிலும், சினிமா துறையிலும், பத்திரிக்கை துறையிலும் ஏராளமானோர் அவருக்கு நெருக்கமானவர்களாக இருந்தார்கள். வலம்புரி ஜான் புத்தகத்தை சசிகலாவின் ஆதரவாளர்கள் முதலில் படிக்க வேண்டும். அதில் சசிகலாவை வைத்து ஜெயலலிதாவை உளவு பார்த்தார் என்று குறிப்பிட்டுள்ளார். இது சசிகலாவிற்கு பெருமை அல்ல, ஜெயலலிதா மீது எம்.ஜி.ஆருக்கு இருந்த சந்தேகத்தை சசிகலா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார் என்கிற கருத்தில் அந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கும். உளவு பார்த்ததை ஆலோசனையாக சசிகலா திரித்துச்சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இந்த வரலாறுகள் தெரியாமல் சசிகலாவின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக துாபம் போடுவது 'கண்ணாடி வீட்டிற்குள் இருந்துக்கொண்டு கல் எரிவதற்கு' சமமானது.
உண்மையில், எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தவரை சசிகலாவுக்கும் ஜெயலலிதாவிற்குமான நெருக்கமே பெரிய அளவில் கிடையாது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகுதான் இருவரின் நட்பு நெருக்கமானது. "எடப்பாடி, பன்னீரை வீழ்த்துகிறேன்!" என்கிற பெயரில் எம்.ஜி.ஆர் விவகாரத்தை சசிகலா கையில் எடுப்பதை எம்.ஜி.ஆர் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்கிறார் தெளிவாக. எம்.ஜி.ஆர் மறைந்து நாற்பது ஆண்டுகள் நெருங்கிவிட்டது. ஆனாலும், தமிழக அரசியல் களம் எம்.ஜி.ஆர் என்கிற பிம்பத்தை சுற்றியே சுழல்கிறது. இதுவே எம்.ஜி.ஆர் என்கிற மூன்றெழுத்தின் ஆச்சர்யம்!
source https://www.vikatan.com/news/politics/is-sasikala-gave-political-suggestions-to-mgr
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக