சிறுவயதில் பள்ளி விடுமுறைக் காலங்களில் அம்மா ஊரிலுள்ள வயலுக்கு அடிக்கடி செல்வோம். அப்போதெல்லாம், தினசரி ஒரு பாம்பாவது கண்ணில் பட்டுவிடும்.
மாமா வரப்பு வெட்டிக் கொண்டிருக்கும்போது, வயலோரத்தில் அவருக்கு அருகே உட்கார்ந்திருந்த பல நேரங்களில், சாரைப் பாம்பு வயலைச் சுற்றி அங்கும் இங்கும் ஓடுவதைப் பார்த்துள்ளோம். அதன்போக்கில் சென்றுகொண்டிருக்கும். நாங்கள் அங்கிருப்பதை அது பொருட்படுத்தியதில்லை, அது அங்கிருப்பதை நாங்களும் பொருட்படுத்தியதில்லை.
ஆனால், எல்லா பக்கமும் நிலைமை அப்படியே இருந்ததாகச் சொல்லிவிட முடியாது. விடுமுறை முடிந்து அம்மா ஊரிலிருந்து வீட்டுக்குத் திரும்பினால், இங்கு அப்படியே நிலைமை வேறு. இங்கும் வீட்டைச் சுற்றி, பாம்புகள் வாழ ஏதுவான இடம் இருந்தது. ஆகையால், சாரை, ஓலைப்பாம்பு என்று இங்கும் அவ்வப்போது ஏதாவது பாம்பைப் பார்க்க நேரிடும். ஆனால், அவை கண்ணில் பட்டுவிட்டால் அதற்குப் பின் அதனால் உயிரோடு வாழவே முடியாது. சுற்றத்தில் குடியிருப்பவர்களில் ஒருவர்கூட, பாம்பைப் பார்த்துவிட்டு, தடியெடுத்து, கொல்லாமல் விட்டதில்லை. எப்போதாவது இரவுநேர இருட்டில் தவறுதலாக வீட்டுக்குள் பாம்பு வந்துவிடும். மனிதர்களைப் பார்த்த பதற்றத்தில் கிடைக்கிற சந்துக்குள் போய் அஞ்சி ஒளிந்துகொல்லும். அதை எப்படியாவது தேடிப் பிடித்து அடித்துக் கொன்றால்தான், அன்றிரவு அனைவரும் நிம்மதியாகத் தூங்குவார்கள்.
இன்று உலக பாம்புகள் தினம். பாம்புகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்காக, உலக அளவில் கொண்டாடப்படுகிறது. பாம்புகளுக்கு நிச்சயம் இந்த நாள் தேவைப்படுகிறது. மேலே கூறியதைப்போல் பல பேர் பாம்பைப் பார்த்தவுடன் அச்சத்தில் அதை அடித்துக் கொல்லவும் அடியோடு வெறுக்கவும் செய்கின்றனர். ஆனால், இந்தப் பூமியில், பாம்பு என்ற ஓர் உயிரினம் ஒரு காரணத்தோடுதான் இருக்கிறது. நம்மைப் பயமுறுத்துவதோ காயப்படுத்துவதோ, நிச்சயமாக அந்தக் காரணங்களில் ஒன்றில்லை என்பதை உறுதியாக நம்பலாம்.
உணவுச் சங்கிலி குறித்து அனைவருக்குமே தெரியும். அந்த உணவுச் சங்கிலியில் இரையாகவும் வேட்டையாடியாகவும் செயல்பட்டு, அதைச் சமநிலையிலேயே வைத்திருப்பதில் பாம்புகளின் பங்கு மிக முக்கியமானது. ஆகவே, ஆரோக்கியமான சூழலியல் அமைப்பு நிலவ வேண்டுமென்றால், அதற்கு பாம்புகளின் இருப்பும் அவசியம்.
இருந்தாலும், பொதுமக்களிடையே பாம்புகள் குறித்து பல்வேறு விதமான உணர்வுகள் உண்டு. அவற்றைக் கண்டாலே அருவருப்படையும் மக்கள் இன்னமும் இருக்கிறார்கள். சிலருக்கோ, பாம்பைப் பார்த்தவுடன் அச்சம் மேலோங்கும். இன்னும் பலர், அதை ஓர் எதிரியாகவே நினைத்து, பார்த்தவுடன் அடித்துக் கொன்றே தீரவேண்டுமென்று துடியாய்த் துடிப்பர். ஒரு சிலரே பாம்புகளை ஓர் உயிராக மதித்து அவற்றுக்குரிய இடத்தைக் கொடுக்க முனைகின்றனர்.
ஆனால், மக்களின் இந்த மனப்பான்மைக்கு அவர்களை முற்றிலும் தவறாகவே சித்திரித்துவிட முடியாது. ஒரு பாம்பைக் கண்டவுடன் அதை அடித்துக் கொல்ல வேண்டும் என்ற மனநிலை ஏற்படுவதற்கான காரணங்களில், அவற்றின் நஞ்சு குறித்த அச்சம்தான் முதலிடம் பெறுகிறது.
2017-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம், நஞ்சுள்ள பாம்புகளிடம் கடிபட்டு சராசரியாக ஓராண்டுக்கு 1,38,000 பேர் உயிரிழப்பதாகவும் வெப்பமண்டல நாடுகளில் அதிகம் கண்டுகொள்ளப்படாத ஒரு பிரச்னையாகவே இது நிலவுவதாகவும் தெரிவித்தது. இந்த மரணங்களில் பாதிக்கும் அதிகமானவை இந்தியாவில்தான் நிகழ்ந்துள்ளன. இதில் ஆச்சர்யம் அளிக்கும் விஷயம் என்னவெனில், இந்தியாவைவிட அதிகமான நச்சுப்பாம்புகளைக் கொண்ட ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவில் இதைவிடக் குறைவான பாம்புக்கடி மரணங்கள் பதிவாகியுள்ளன. 2000-ம் ஆண்டு முதல் 2019 வரைலான 20 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 12 லட்சம் பேர் பாம்புக்கடியால் உயிரிழந்துள்ளனர்.
பிரபல ஊர்வன ஆர்வலரும் சென்னை முதலைப் பண்ணையின் தோற்றுநருமான ரோமுலஸ் விடேகர் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், வெறும் மருத்துவமனை தரவுகளை மட்டும் கணக்கில் எடுக்காமல், பொதுமக்களிடம் நேரடியாகக் கணக்கெடுப்பு செய்வது போன்ற மற்ற வழிகளிலும் இந்தத் தரவுகள் சேகரிக்கப்பட்டன. ஏனெனில், பாம்புக்கடிக்கு ஆளான ஒருவர் மருத்துவமனை வரை செல்வது மிகவும் குறைவு. பாம்புக்கடி மரணங்களில் 77 சதவிகிதம் மருத்துவமனைக்குச் செல்லாததாலேயே நிகழ்வதாக இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
விடேகர் உட்பட, டொரோன்டோ, ஆக்ஸ்ஃபோர்டு போன்ற பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பலரும் இணைந்து, இந்தியாவில் பாம்புக்கடி மரணங்களின் விகிதம், தாக்கம் மற்றும் இழப்புகளைக் கணக்கிட்டனர். அதிகரிக்கும் மக்கள் தொகை அடர்த்தியால் இந்த ஆபத்து இன்னும் அதிகமாவதால், அதைக் கையாள்வதற்கான, இழப்புகளைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிவதே இந்த ஆய்வின் நோக்கம்.
இந்தியாவில் நிகழும் 95 சதவிகித பாம்புக்கடி மரணங்களுக்குக் காரணம், நாகம், கண்ணாடி விரியன், கட்டு விரியன், சுருட்டை விரியன் ஆகிய நான்கு பாம்புகள்தான். இவையும் இரவு நேரங்களில் உலவும்போது தவறுதலாக அவற்றை மிதித்துவிட்டால், தற்காப்பு கருதி அச்சத்தில் அவை கடிக்கின்றன. இதுபோன்ற விபத்துகளால்தான் அதிகமான பாம்புக்கடி சம்பவங்கள் ஏற்படுகின்றன. இதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, இரவுநேரங்களில் வெளியே செல்லும்போது காலில் செருப்பு அணிந்து செல்ல வேண்டும், டார்ச் லைட் போன்றவற்றைப் பயன்படுத்தி பாதையைச் சரியாகப் பார்த்து காலடிகளை எடுத்து வைக்க வேண்டும் என்றும் ஊர்வன ஆர்வலர்கள் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
Also Read: பாம்பின் விஷம் எப்படி எடுக்கப்படுகிறது? ஸ்பாட் ரிப்போர்ட் #VikatanExclusive - பகுதி 2
பாம்புக்கடிக்கு ஆளானோரில், பெரும்பான்மையானவர்கள், விவசாயிகளாகவே இருக்கின்றனர். குறிப்பாக, மழைக்காலங்களில்தான் இந்த விபத்துகள் அதிகம் நிகழ்கின்றன. அதிலும் பாதிக்கும் மேலானோர் 30 வயது முதல் 69 வயதுக்கு உட்பட்ட ஆண்களாகவே இருக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 25 சதவிகிதம் 15 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள். அதோடு, பாம்புக்கடி மரணங்களில் 94 சதவிகிதம் கிராமப்புறங்களைச் சேர்ந்த குறைந்த வருமானம் கொண்ட எளிய மக்களிடையேதான் நிகழ்ந்துள்ளது. இங்கெல்லாம் அதிக அளவிலான மருத்துவக் கட்டுமானங்கள் இருப்பதில்லை. மேலும், இத்தகைய மக்கள் பெரும்பாலும் மரபுசார் மருத்துவத்தையே பாம்புக்கடிக்கு மேற்கொள்கின்றனர். பின்னர், அந்தச் சிகிச்சை பலனளிக்காமல் முறையான சிகிச்சை பெற முனையும்போது, தாமதாகி அதைப் பெறுவதற்கும் முன்னமே அவர்கள் உயிரிழக்க நேர்கிறது.
பாம்புக்கடி மரணங்கள் இந்தியாவில் அதிகம் இருப்பதற்கான காரணம் என்ன, அதை எப்படிக் கையாள வேண்டும் என்பன குறித்து ஊர்வன ஆராய்ச்சியாளர் ரமேஷ்வரனிடம் பேசியபோது, ``இந்தப் பிரச்னை குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லையென்று சொல்வதைவிட, அலட்சியம் அதிகமாக உள்ளதென்று சொல்லலாம். உங்கள் தோட்டமாகவே இருந்தாலும், இரவில் செல்லும்போது டார்ச் லைட் எடுத்துக்கொண்டுதான் செல்ல வேண்டும். என் இடத்தைப் பற்றி எனக்குத் தெரியாதா என்ற மனநிலையில் செல்வதுதான் அலட்சியம். மற்ற நாடுகளில் விவசாய வேலை செய்பவர்கள், கையுறை, ஷூ ஆகியவற்றை அணிந்துகொண்டு பாதுகாப்பாகவே வேலை செய்கிறார்கள். ஆனால், இங்கு இன்றளவும் வெறும் கை, கால்களோடுதான் வயலில் இறங்குகிறோம். நம் பாதுகாப்புக்கான இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியத்தை உணர வேண்டும்.
பயம் என்ற உணர்வு நம்மிடையே இருப்பது நல்லதுதான். அந்த உணர்வு இருக்கும்போது குறிப்பிட்ட அபாயங்களைத் தவிர்ப்பதற்கான அக்கறை ஏற்படும். அந்த உணர்வின்றி அலட்சியப்போக்கோடு செயல்படுவது பாம்புக்கடி விபத்துகள் நிகழ ஒரு முக்கியக் காரணம். அதோடு, இதே பயம்தான் பாம்புகளைக் கண்டாலே அடித்துக் கொல்லவும் மக்களைத் தூண்டுகிறது. ஆனால், பயம் அப்படிப்பட்டதாக இருக்கக் கூடாது. வாகனங்களில் செல்லும்போது விபத்துகள் நிகழ்கின்றன. அதற்காக யாரும் அவற்றை முழுமுற்றாகத் தவிர்ப்பதில்லை. உரிய முன்னெச்சரிக்கையோடும் கவனத்தோடும் அவற்றைக் கையாளுகிறோம். அதைப்போலவே பாம்புகளும். இங்கு பாம்புகளும் வாழ்கின்றன என்ற முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டுமே தவிர, பாம்புகளைக் கொன்றுவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடும் என்ற பயத்துக்குச் செல்லக் கூடாது" என்று கூறினார்.
Also Read: நல்லபாம்பு 71... கட்டுவிரியன் 108... பாம்புப் பண்ணைக்கு ஒரு திக் திக் விசிட்! #VikatanExclusive
ஆக, பாம்புகளும் மனிதர்களும் ஒரே இடத்தில் வாழ்வதைத் தவிர்க்க முடியாது. அப்படியிருக்க, அங்கு இயைந்து வாழ்தல் மிகவும் முக்கியம். அப்படியிருக்கையில், பாம்புகளும் மனிதர்களும் ஒரே வாழ்விடத்தில் இயைந்து வாழ்வது எப்படி என்று கேட்டபோது, ``நச்சுப்பாம்புகளோடு இயைந்து வாழ்வதைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால், பூச்சிகளை, பல்லிகளை, தவளைகளை நாம் எப்படிப் பார்க்கிறோம்? எந்த ஆபத்தும் இல்லாத அவற்றையே தன் சுற்றுப்புறத்தில் வாழவிடுவதற்கு நாம் அனுமதிப்பதில்லையே!
பொதுப்புத்தியில், பயன் மற்றும் அழகு ஆகிய இரண்டின் அடிப்படையில்தான் மனித சிந்தனை இருக்கும். அதாவது, ஒரு விஷயம், அது உயிராகவோ பொருளாகவோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அவை, ஒன்று பார்க்க அழகாக இருக்க வேண்டும் அல்லது தனக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும். பாம்பு, தவளை, பல்லி போன்றவற்றைப் பார்க்கையில் பலருக்கும் அருவருப்பு உணர்வுதான் மேலோங்குகிறது. மேலும், அதனால் தனக்கு எந்தப் பயனும் இல்லையென்று நினைக்கிறோம். இந்த மனநிலையை உடைக்க வேண்டும். அதற்கு, இந்த உயிரினங்கள் சார்ந்த அறிவை மக்களிடையே வளர்க்க வேண்டும்" என்று கூறினார்.
Also Read: தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 100-வது பாம்பு வகை; உதவிய 185 ஆண்டுக்கால பழைமையான ஓவியம்!
பாம்புக்கடி விபத்துகளையும் மரணங்களையும் தவிர்க்க வேண்டுமெனில், அதற்கு இத்தகைய புரிதல் நம்மிடையே வர வேண்டியது அவசியம். பல்வேறு ஆர்வலர்களும் தன்னார்வ அமைப்புகளும் இதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த இலக்கு இன்னும் வெகுதூரத்தில் இருக்கிறது. ஆனால், நடைமுறை சாத்தியமற்றது இல்லை. இருப்பினும், இது சாத்தியப்படுவதற்கு மக்களின் ஒத்துழைப்பும் அவசியம்.
ஆம், பாம்புகள் நம்மைச் சுற்றி வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. எப்போது அதைப் பார்க்கிறோமோ அப்போது அதை நாம் ஏற்றுக்கொள்வதில்லை. பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் அவை வாழ்கின்றன. ஆனால், அவை நம் கண்ணில் பட்டுவிட்டால், அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை நம்மிடையே வருவதில்லை. பாம்புகள் மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களிடையேயும் இந்த உணர்வை நாம் மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம்.
source https://www.vikatan.com/social-affairs/environment/why-india-records-more-snakebite-deaths-in-the-world-world-snake-day-article
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக