Ad

வியாழன், 15 ஜூலை, 2021

கள்ளக்குறிச்சி: `2026 சட்டமன்றத் தேர்தலில் 150 உறுப்பினர்களுடன் பா.ஜ.க ஆட்சி!’ - அண்ணாமலை உறுதி

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி அண்ணாமலை நேற்று மாலை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டைக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு உளுந்தூர்பேட்டை வட்டார பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினர் வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் தற்போது நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிபெற்று வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

மேக்கேதாட்டூ

தொடர்ந்து உழைப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அதேபோல் நீங்களும் உழைக்க தயாராக இருங்கள். வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 150 சட்டமன்ற உறுப்பினர்களுடன் நமது கட்சி ஆட்சி அமைக்கும். நீட் தேர்வை பொறுத்தவரை கடந்த ஆண்டு அரசுப்பள்ளியில் படித்த 334 குழந்தைகள் அரசுக் கல்லூரிகளுக்குச் சென்றிருக்கிறார்கள். இவர்கள் ஏன் நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்வதற்குக் காரணம், பழையபடி தனியார் பள்ளிகளில் 5 கோடி, 10 கோடி என நன்கொடைகள் பெற்று ஆட்டையைப் போடலாம் என்று ஐடியா செய்கிறார்கள்” என்றார்.

அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் எழுப்பிய கேள்விகளும் அதற்கான பதில்களும்…

``வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் விடுபட்ட மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்திருக்கிறார். இந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க தொடர்ந்து இடம்பெறுமா?"

“அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று தமிழக முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். அதனால் எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. உள்ளாட்சித் தேர்தலுக்கான நாள் வரும்போது அதுகுறித்து பேசலாம்”

``மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்களை சில மாநிலங்களுக்கு கவர்னர்களாக அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இதில் ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா?"

``நம்முடைய மத்திய அரசின் பரிந்துரையின்படி குடியரசுத்தலைவர் கவர்னர்களை நியமிக்கிறார். இதில் என்ன உள்நோக்கம் இருக்கிறது? சமீபத்தில் நமது அமைச்சரவையில் சில மாற்றங்கள் நடந்தது. அதில் சிலர் கவர்னர்களாக அனுப்பப்பட்டிருக்கிறார்கள். அதில் சிலர் மூத்த அமைச்சர்களாக இருக்கிறார்கள். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை”

Also Read: ``மோடியைப் பிடிக்கும் எனச் சொன்னதற்கு காரணம் இதுதான்!'' - விளக்கும் முன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலை

``கர்நாடக முதல்வர் எடியூரப்பா பிரதமர் மோடியை சந்தித்து மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்குவதுடன், அதற்கு அடிக்கல் நாட்ட வரவேண்டும் என்று அழைப்பு விடுக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதனை எப்படி பார்க்கிறீர்கள்?”

“தமிழகத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களும் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்திக்க இருக்கிறார்கள். எங்களுடைய நிலைப்பாடு மிகத் தெளிவாக இருக்கிறது. நம்முடைய மாநில அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் தமிழக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தண்ணீரில் ஒருசொட்டு அளவு குறையக் கூடாது என்றும் மேக்கேதாட்டுவில் அணை கட்டக் கூடாது என்றும் தெரிவித்திருக்கிறோம். அதேபோல மேக்கேதாட்டு அணையில் 69 டி.எம்.சி தண்ணீர் தேக்குவோம் என்று அவர்கள் கூறுவது ஏற்புடையது கிடையாது. தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீர் வர வேண்டும். மேக்கேதாட்டுவில் அணை கட்டக்கூடாது. கட்டினால் தமிழகத்திற்கு பிரச்னை வரும் என்பது எங்களின் நிலைப்பாடு. அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை.”



source https://www.vikatan.com/government-and-politics/politics/annamalai-says-in-2026-bjp-will-win-the-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக