மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இந்தியாவின் வலதுசாரி இயக்கங்களில் மிக முக்கியமான அமைப்பாகப் பார்க்கப்படுகிறது.
இந்துத்துவா சித்தாந்தத்தின் அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த அமைப்பானது உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் அரசியல் போக்கைத் தீர்மானிக்கும் சக்தியாக திகழ்கிறது.
இஸ்லாமிய மக்களுக்கு எதிரான இயக்கமாக ஆர்.எஸ்.எஸ் அனைவராலும் பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத், இந்தியாவில் இஸ்லாமியர்கள் வாழக் கூடாது என ஒரு இந்து கூறுகிறார் என்றால், அவர் ஒரு இந்துவே அல்ல என்றும், இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே மரபணு தான் என்றும் நேற்று ஒரு கூட்டத்தில் பேசியிருக்கிறார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இஸ்லாமியப் பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் கூட்டத்தில், நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த போது அவருக்கு ஆலோசகராக இருந்த முனைவர் க்வாஜா இஃப்திகார் அஹ்மத் என்பவர் எழுதிய 'தி மீட்டிங்ஸ் ஆஃப் மைண்ட்ஸ்: எ பிரிட்ஜிங் இனிசியேட்டிவ்' (The meeting's of mind's : A bridging initiative) என்கிற புத்தகம் வெளியிடப்பட்டது.
இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், "நாம் அனைவரும் கடந்த 40,000 ஆண்டுகளாக ஒரே மூதாதையர்களின் வழி வந்தவர்கள் என்பது ஆய்வுகளின் மூலம் நிரூபணமாகி இருக்கிறது. இந்தியத் தேசத்தின் மக்கள் அனைவருக்கும் ஒரே மரபணு தான். எனவே, இந்துக்களும், இஸ்லாமியர்களும் வேறு வேறு குழுக்கள் அல்ல. ஏற்கனவே இணைந்து தான் இருக்கிறார்கள். எனவே, அவர்களை இணைப்பதற்குப் புதிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.
இங்கு அரசியலால் சில பணிகளைச் செய்ய முடியாது. அதன் மூலம் மக்களை இணைக்க முடியாது. அரசியல் எப்போதும் மக்களை இணைக்கும் கருவியாக இருக்காது. அது மக்கள் இடையிலான ஒற்றுமையைச் சிதைக்கும் ஆயுதமாக எப்போது வேண்டுமானாலும் மாறலாம்.
இந்தியாவில் இஸ்லாமியர்கள் வாழக் கூடாது என ஒரு இந்து கூறுகிறார் என்றால், அவர் ஒரு இந்துவே அல்ல. பசு புனிதமான விலங்கு தான், ஆனால் மற்றவர்களைக் கொலை செய்பவர்கள் கூட இந்துத்துவா தத்துவத்துக்கு எதிரானவர்களே என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகையவர்களைச் சட்டம் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தண்டிக்க வேண்டும். மேலும், நாம் இந்தியாவில் வாழ்கிறோம், இங்கு இந்துவோ, இஸ்லாமியரோ ஆதிக்கம் செலுத்தக் கூடாது, இந்தியர்கள் தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும்.
தற்போது இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் ஆபத்தில் உள்ளது போன்ற மாய பிம்பம் வலுவாகக் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. ஆனால், நாம் அந்த சதி வலையில் சிக்கிக் கொள்ளக் கூடாது. இங்கு இஸ்லாமியர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். இந்தியாவில் ஒற்றுமை இல்லையென்றால் வளர்ச்சி என்பது துளியும் சாத்தியமில்லை. எனவே, நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எங்கள் இயக்கத்துக்குக் கட்சி அரசியலில் விருப்பமில்லை. தேசத்தின் நலனே எங்களுக்கு முக்கியம்" என்றார்.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் இந்த பேச்சை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் இந்துத்துவா சித்தாந்தத்தை வலுப்படுத்த பாஜகவின் யோகி ஆதித்யநாத் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், ஆர்.எஸ்.எஸ் தலைவரின் இந்த 'இஸ்லாமிய ஆதரவு நிலைப்பாடு' பேச்சு அம்மாநில அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/if-a-hindu-says-no-muslim-should-live-here-that-person-not-be-hindu-says-rss-chief-mohan-bhagwat
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக