திருமதி மரியா டோலரஸ்... 1984-ம் ஆண்டில், தான் நான்காவது முறையாக கருத்தரித்திருப்பதை அறிந்தவுடன் அதிர்ந்து போகிறார். ஏற்கெனவே இருக்கும் மூன்று குழந்தைகளை வளர்க்க வழியில்லாமல், வீட்டு வேலை செய்துவரும் சொற்ப வருமானத்தில் சாப்பிட்டுக் கொண்டிருப்பவளுக்கு நான்காவது குழந்தை என்ற செய்தியே இடிபோல இருந்தது.
கணவனாவது சம்பாதிப்பதை வீட்டுக்குக் கொடுத்தால் பரவாயில்லை. தோட்ட வேலை செய்பவன் தனக்கு வரும் வருமானத்தை குடித்தே அழிக்கிறான். என்ன செய்வது என்று தெரியாமல், பெண்கள் நல மருத்துவரை அணுகி, தனது கருவை கலைக்கக் கோருகிறார்.
ஆனால் மருத்துவரோ, திருமதி டோலரஸின் உடல்நிலை மற்றும் கருவின் வாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவரது கருச்சிதைவு கோரிக்கையை மறுக்கிறார்.
என்ன செய்வதென்று புரியாமல் அருகில் இருந்தவர்கள் கருக்கலைவதற்குக் கூறிய எல்லா வழிமுறைகளையும் செய்து பார்க்கிறார். கடினமான வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டும், யாரோ கூறியதைக் கேட்டு சூடான பீர் குடித்தும், இன்னும் பலவழிகளில் முயன்றும் ஒன்றும் பயனில்லை என்று தெரிந்ததும் கடைசியாக நான்காவது பிரசவத்திற்குத் தயாராகிறார் திருமதி. டோலரஸ்.
அப்படி வேண்டாம் வேண்டாம் என்று நினைத்தும் விடாமல், 1985-ம் ஆண்டு, பிப்ரவரி 5-ம் தேதி ஜோஸ் டினிஸ் ஏவைரோ மற்றும் மரியா டோலரஸ்க்கு பிறந்த அந்த நான்காவது குழந்தை தான், இன்று உலகத்தினர் அனைவரும் வியந்து பார்க்கும் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ!
தனக்கு அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனைப் பிடிக்கும் என்றும், தனது மகன் பிறந்தபோது அவர் இரண்டாம் முறை அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்த காரணத்தால் தனது நான்காவது குழந்தைக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ என்று பெயர் வைத்ததாகவும் கூறுகிறார் தந்தை ஜோஸ் டினிஸ்.
சிறிய வீட்டில் வறுமையில் வளர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு சிறுவயதிலிருந்தே படிப்பின்மீது நாட்டம் இருக்கவில்லை. என்னதான் குடிகாரனாக இருந்தாலும் குழந்தைகள் மீது அபாரப் பிரியம் வைத்திருந்த தந்தை தனது மகனுக்கு விளையாட்டில் அதிக ஈடுபாடு இருந்ததைக் கண்டு, எட்டு வயதிலேயே அவனை ஒரு கால்பந்து கிளப்பில் சேர்த்ததோடு, மகனுக்கு பணம் கட்டமுடியாமல் தானும் அந்தக் கிளப்பின் கிட்மேன் எனப்படும் பொறுப்பாளர் பணியில் சேர்ந்திருக்கிறார்.
அடுத்த இரண்டு வருடங்களும் தினசரி தந்தையும் மகனும் ஒன்றாக ஆன்டோரினா கிளப்பிற்கு வந்ததை நினைவுகூறும் ரொனால்டோவின் டீம்-மேட், ரொனால்டோ அப்போதே தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டான்; தோற்றால் அழுது ஆர்ப்பாட்டம் செய்வான் என்பதால் க்ளப்பில் ரொனால்டோவிற்கு 'crybaby' என்று பட்டப்பெயரே இருந்ததாகவும் கூறுகிறார்.
தனது பனிரெண்டாவது வயதில் சொந்த ஊரிலிருந்து தனியாக கால்பந்து பயிற்சிக்காக லிஸ்பன் நகருக்குச் சென்ற ரொனால்டோ அதிலிருந்து தனது வாழ்க்கையே கால்பந்து என மாற்றிக் கொண்டிருக்கிறார். தன்னை யாருமே தோற்கடிப்பதை எளிதில் ஒப்புக்கொள்ளாத ரொனால்டோ, பிறர் தன்னைத் தொட்டுவிடக்கூடாது என்றே தனக்கான தனி பாணியையும், மின்னல் வேக விளையாட்டையும் அமைத்துக் கொண்டதோடு, ஒருசமயம் தனது அதிக வேகமே இருதயப் படபடப்பு நோயை ஏற்படுத்த, 'விளையாட்டா... வைத்தியமா..?' என்ற நிலை ஏற்பட்டதாகவும், அப்போது சிறிதும் தயங்காமல் இருதயத்தை அறுவை சிகிச்சை மூலம் சீரமைத்துக் கொண்டு மீண்டும் கால்பந்தை கையில் எடுத்ததாகவும் கூறுகிறார்.
அப்போது ஜூனியர் டீம், சீனியர் டீம் என்று தனது கால்பந்து பயணத்தைத் தொடங்கியவர், பிற்பாடு மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மேட்ரிட், யுவென்ட்டஸ் ஆகிய மிகப் பிரபலமான கிளப்களுக்காக விளையாடி, ஐந்து முறை ஃபிஃபாவின் சிறந்த விளையாட்டு வீரராக இன்றுவரை உலகிலேயே அதிகளவு பணம் சம்பாதிக்கும் வீரராக இருப்பதுடன், சமீபத்தில் இன்ஸ்ட்டாகிராமில் 307 மில்லியன் ஃபாலோயர்களுடன், தனது ஒவ்வொரு பதிவிற்கும் 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டும் முதன்மை விளையாட்டு வீரராகவும் திகழ்கிறார் ரொனால்டோ.
எவ்வளவுதான் சம்பாதித்தாலும் தனது இளவயது வறுமை நிலையை மறக்கவில்லை ரொனால்டோ. சுனாமியில் பாதிப்படைந்த நாடுகளுக்கு நிதியுதவி, காசா நகரின் பள்ளிக்குழந்தைகளுக்கு ஒன்றரை மில்லியன் யூரோ நிதியுதவி, மலேரியா, ஹெச்ஐவி நோய்களுக்கு எதிரான விழிப்புணர்வு, அதேபோல குழந்தைகளுக்கு போதை மருந்து மற்றும் மதுப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு என தொடர்ந்து தனது உதவிக்கரங்களை நீட்டிக் கொண்டேயிருக்கிறார் ரொனால்டோ.
சிறுவயதில் லிஸ்பன் அகாடமிக்கு தேர்வானதுதான் தனது தற்போதைய நிலைக்குக் காரணம் என்றும், அதுவும் அப்போது தனது நண்பன் ஆல்பர்ட் ஃபான்ட்ரா தனக்கு விட்டுக்கொடுத்த கோல் ஒன்றினால்தான் என்பதையும் நன்றியுடன் நினைவுகூறும் ரொனால்டோ இன்றுவரை தனது நண்பனது அனைத்துத் தேவைகளுக்கும் உதவியும் செய்து வருகிறார்.
தன்னுடைய இளம்வயது வறுமை, தனது நண்பர்கள் என எதையும் மறக்காத ரொனால்டோ சமூக நலத்தின் மீதும் தனது பங்களிப்பை செய்துதான் வருகிறார் என்பதை, சமீபத்திய பத்திரிக்கை சந்திப்பின்போது இரண்டு கோக கோலா பாட்டில்களைத் தள்ளிவைத்து தண்ணீரை மட்டும் பருகுங்கள் என்று சொன்னதன் மூலம் நிரூபிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி அதிக மதுவின் பாதிப்பால் கல்லீரல் நோயால் தனது இருபதாவது வயதிலேயே தந்தை இறந்ததைக் கண்டதால் இன்றுவரை மதுவைக் கையால் கூட தொட்டதில்லை என்கிறார். மேலும் தொடர்ந்து இரத்த தானம் அளித்து வரும் ரொனால்டோ, இதற்காகவே தனது கைகளில் டாட்டூ குத்திக் கொள்ளாமல் மற்ற விளையாட்டு வீரர்களிலிருந்து விலகி நிற்கிறார்.
தனது இன்றைய வளர்ச்சிக்குக் காரணமான தந்தை இப்போது தன்னுடன் இல்லை என்ற வலியும், காயமும் ஆறவில்லை என்று கண்கலங்கும் அவர், கருவிலேயே தனது தாய் தன்னை அழிக்க எண்ணியதை யாரேனும் சுட்டிக் காட்டும்போது, ”வறுமை தான் அதற்குக் காரணம். பிறந்ததில் இருந்து இன்றுவரை எனக்குச் செய்யவேண்டிய கடமைகளில் ஒன்றைக் கூட தனது தாயார் தவறவிடவில்லை!” என்று பெருமிதத்துடன் சொல்லும் சிறந்த மகனாகவும் இருக்கிறார் ரொனால்டோ.
எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு தனிக்கதை இருப்பதைப் போலவே இவருக்கும் உள்ளது என்றாலும், தனது விழித்தெழ விரும்பாத கனவான கால்பந்தில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ரொனால்டோ போன்ற சாதிக்கப் பிறந்தவர்களை கருவில் கூட அழிக்க முடியாது என்பதைத்தான் இவர் நமக்கு உணர்த்துகிறார்!
source https://sports.vikatan.com/football/why-cristiano-ronaldos-mother-tried-for-abortion
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக