Ad

ஞாயிறு, 4 ஜூலை, 2021

`சிவசேனாவும், பாஜகவும் எதிரிகள் அல்ல; சூழ்நிலைக்கு தக்க கூட்டணி முடிவு!’ - தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் நேர் எதிர் கொள்கையுடைய காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து சிவசேனா ஆட்சியமைத்துள்ளது. இக்கூட்டணியை கலைக்க பா.ஜ.க பல வழிகளில் முயற்சியை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் அதற்கு தக்க பலன் கிடைக்காமல் இருக்கிறது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மூலம் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு பா.ஜ.க நெருக்கடி கொடுத்துக் கொண்டு இருக்கிறது. ஐபிஎஸ் அதிகாரிகளின் துணையோடும் ஆட்சி கவிழ்ப்பில் பா.ஜ.க ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இப்போது சிவசேனாவுடன் சமரசமாக சென்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்கலாமா என்பது குறித்து பா.ஜ.க பரிசீலித்து வருகிறது.

தேவேந்திர பட்நவிஸ்

அதனை நிரூபிக்கும் வகையில் தொடர்ச்சியாக சில சம்பவங்கள் நடந்து வருகிறது. முதலில் டெல்லி சென்ற போது முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடியை தனியாக சந்தித்து பேசினார். இப்போது சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மும்பை பா.ஜ.க தலைவர் அசிஷ் ஷெலாரை சந்தித்து பேசியிருக்கிறார். இந்த நிகழ்வுகள் குறித்து மகாராஷ்டிரா எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்நவிசிடம் கேட்டதற்கு, ``சிவசேனாவும், பா.ஜ.க-வும் எதிரிகள் இல்லை. சிலவற்றில் சிவசேனாவுக்கும் பா.ஜ.க-வுக்கு கருத்து வேறுபாடு இருக்கிறது” என்று தெரிவித்தார்.

இரு கட்சிகளுக்கும் இடையே மீண்டும் கூட்டணி ஏற்படுமா என்று கேட்டதற்கு, ``சூழ்நிலைக்கு ஏற்ப தகுந்த நேரத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசிய போது மீண்டும் சிவசேனா-பா.ஜ.க கூட்டணி அரசு அமைப்பது குறித்து விவாதித்தீர்களா என்று கேட்டதற்கு,``அரசியலில் ஆம் மற்றும் இல்லை என்பது இல்லை. சூழ்நிலைக்கு தக்கபடி முடிவு எடுக்கப்படும்.

தேர்தலில் எங்களது நண்பரான சிவசேனா எங்களுடன் சேர்ந்தே போட்டியிட்டது. ஆனால் தேர்தலுக்கு பிறகு எங்களை எதிர்த்து போட்டியிட்டவர்களுடன்(காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்) சேர்ந்து கொண்டது. சிவசேனா எங்களது நண்பர். எங்களுடன் சேர்ந்து ஆட்சியமைத்தார்கள். பின்னர் எங்களை விட்டு சென்றுவிட்டார்கள்” என்றும் தெரிவித்தார்.

தேவேந்திர பட்னாவிஸ்

இரண்டு நாட்கள் மட்டும் சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்டப்படுவது குறித்து கேட்டதற்கு, ``உத்தவ் தாக்கரே அரசு இதற்கு முன்பு 7 முறை சட்டமன்ற கூட்டத்தை நடத்தியிருக்கிறது. இதில் வெறும் 36 நாட்கள் மட்டுமே அவை கூடியிருக்கிறது. தற்போது நடக்க இருப்பதையும் சேர்த்தால் 38 நாட்களாகும். கொரோனா பெயரில் ஜனநாயகத்தை மகாவிகாஷ் அகாடி அரசு முடக்கப்பார்க்கிறது. மகாராஷ்டிரா உருவாக்கப்பட்டு 60 ஆண்டுகளில் இல்லாத ஒன்று இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அவையில் விவாதிக்க பா.ஜ.கவிடம் 100க்கும் மேற்பட்ட பிரச்னைகள் இருக்கிறது. அவையில் தாக்கல் செய்ய முடிந்ததை தாக்கல் செய்வோம். தாக்கல் செய்ய முடியாததை மீடியா முன்பும் மக்கள் முன்பும் தாக்கல் செய்வோம்” என்று தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/politics/shiv-sena-and-bjp-have-no-rivals-decision-on-alliance-according-to-circumstances-fadnavis

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக