Ad

புதன், 21 ஜூலை, 2021

கரூர்: பல வருட பேருந்து பிரச்னை; 5 நாள்களில் கிடைத்த தீர்வு! - மக்களை நெகிழவைத்த ஆட்சியர்

பேருந்து வசதியில்லாமல் பல வருடங்கள் தவித்த கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, ஐந்தே நாள்களில் கரூர் மாவட்ட ஆட்சியர் அந்த கிராமத்துக்கு புதிய அரசு பேருந்து வசதியை ஏற்படுத்தி, கிராம மக்களை நெகிழவைத்திருக்கிறார்.

பேருந்தில் ஆட்சியர்

Also Read: பள்ளிச் சுவரில் ஒட்டபட்ட தன் பிறந்தநாள் போஸ்டரை கிழிக்கச் சொன்ன குளித்தலை எம்.எல்.ஏ!

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கிறது கருப்பம்பாளையம். இந்த கிராமத்துக்குப் பல வருடங்களாக பேருந்து வசதியில்லை. தங்கள் கிராமத்துக்குப் பேருந்து வசதி செய்து தரும்படி அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று பலருக்கும் தொடர் மனுக்கள் அனுப்பிவருகிறார்கள். இந்தநிலையில், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், கடந்த 15-ம் தேதி ஆய்வுசெய்யச் சென்றார். அப்போது, அங்கே வந்த கருப்பம்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள், அவரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில், 'எங்கள் கிராமத்தில் பல வருடங்களாக பேருந்து வசதி இல்லை. அவசரத் தேவைகளுக்கு கரூர் சென்று வரக்கூட மிகவும் சிரமப்படுகிறோம். பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகளும், வேலைக்குச் செல்லும் இளைஞர்களும் பேருந்து வசதி இல்லாமல் அவதியுற்றுவருகிறார்கள். அதனால், எங்கள் கிராமத்துக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்' என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

பேருந்தில் ஆட்சியர்

அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்தார். அதேபோல், 'கருப்பம்பாளையம் வரை பேருந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கரூர் மாவட்ட போக்குவரத்துத்துறை பொது மேலாளருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, மக்கள் கோரிக்கைவைத்து ஐந்து நாள்கள் கடந்த நிலையில், கருப்பம்பாளையத்துக்கு அரசுப் பேருந்து வந்திருக்கிறது. தினந்தோறும் காலை 9:25 மணிக்கு அப்பிப்பாளையம் முதல் கரூர் வரை உள்ள நடையை கருப்பம்பாளையம் வரை தொட்டு இயக்கவும், மாலை 6:20 மணிக்கு கரூர் முதல் கருப்பம்பாளையம் வரை இயக்கவும் என தினமும் இரண்டு முறை பேருந்து கருப்பம்பாளையம் வரும் வகையில் நகரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பல வருட போராட்டத்துக்குப் பிறகு கருப்பம்பாளையம் வந்த பேருந்தில் மக்கள் மகிழ்ச்சியாக ஏறிப் பயணித்தனர். மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பேருந்தில் ஏறி, பயணிகளிடம் சகஜமாகப் பேசினார்.

Also Read: `கிராம சபையில் மாணவியின் கேள்வியால் கிடைத்த பேருந்து வசதி!' - ஆச்சர்யம் அளித்த மதுரை எம்.பி!

இது குறித்து, கருப்பம்பாளையம் மக்களிடம் பேசினோம்.

``எங்க ஊர்ல பேருந்து வசதி இல்லாம பல வருடங்களாக நாங்க அல்லாடிக்கிட்டு இருந்தோம். மனு மேல மனுவா அனுப்பினோம். 'உங்கள் ஊருக்குப் பேருந்துவிட்டால், வருவாய் இருக்காது'னு அதிகாரிகள் கைவிரிச்சாங்க. அப்பதான், எங்க ஊருக்கு வந்த ஆட்சியர்கிட்ட மனு கொடுத்தோம். எங்க பிரச்னையைத் தீர்த்துட்டார். எங்களின் பல வருடப் பிரச்னையை ஐந்தே நாளில் தீர்த்த அவரை மறக்க மாட்டோம்" என்றனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/karur-collector-solved-village-people-problem-within-5-days

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக