Ad

சனி, 17 ஜூலை, 2021

`500 தொட்டிகள்; 9 வருஷமா கடைல காய்கறிகள் வாங்குறதே இல்ல!' - மாடித்தோட்டத்தில் அசத்தும் பெண் விவசாயி

மாடித்தோட்டம் என்பது இன்று நகர்ப்புறங்களில் அதிகம் கேட்கப்படும் வார்த்தையாகிவிட்டது. ஆனால், ஆர்வமாக மாடித்தோட்டம் உருவாக்கும் அனைவரும் அதில் போதுமான அளவு விளைச்சல் எடுக்கிறார்களா என்பது கேள்விக்குறியே. சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீபிரியா கணேஷ் மாடித்தோட்டத்தையே விளைநிலமாக மாற்றி கை நிறைய விளைச்சலும் எடுத்து வருகிறார்.

கம்பிவலைக்குள் மாடித்தோட்டம்

Also Read: குறைந்த செலவில் மாடித்தோட்டம் வைக்க வேண்டுமா? - வழிகாட்டும் விகடனின் ஆன்லைன் பயிற்சி

``9 வருஷங்களுக்கு முன்னாடி என் நண்பர் வீட்டுல மாடித்தோட்டம் இருந்ததைப் பார்த்தேன். அந்தத் தோட்டத்தில இருந்தே அவங்க வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் கிடைக்கிறதா சொன்னாரு. உடனே எனக்கும் ஆசை வந்துருச்சு. அரசு வேளாண் மையம் நடத்தின சில பயிற்சி வகுப்புகளில் கலந்துகிட்டு மாடித்தோட்டம் பராமரிக்கும் வழிமுறைகளைத் தெரிஞ்சுகிட்டேன். அதுக்குப் பிறகு, எங்க வீட்டு மாடியில் நானே அமைச்சதுதான் இந்தத் தோட்டம்" என்று தனது மாடித்தோட்டத்தை சுற்றிக்காட்டியபடியே பேசுகிறார் ஶ்ரீபிரியா கணேஷ்.

``இங்க இருக்க ஒவ்வொரு செடியும் ஒரே நாள்ல வெச்சது இல்ல. ஆரம்பத்தில சில தொட்டிகளோட மட்டும்தான் ஆரம்பிச்சேன். இன்னைக்கு என் தோட்டத்தில் 500-க்கும் அதிகமான தொட்டிகள் இருக்கு. தோட்டத்துக்கு வந்து கால் மணி நேரம் அமைதியா இருந்தாலே அத்தனை கஷ்டமும் காணாமல் போகும். என்னோட மாடித்தோட்டத்தில் கேரட், பீன்ஸ், கோஸ், காலிஃப்ளவர் என வீட்டுக்குத் தேவையான அனைத்து காய்கறிகளும் இருக்கும். மகரந்தச் சேர்க்கையை அதிகரிக்க பூச்செடிகளும் வெச்சுருக்கேன். பழவகைகளும் என் தோட்டத்தில் இருக்கு.

ஶ்ரீபிரியா கணேஷ்

Also Read: மாடியில் பழக்காடு; அசத்தும் மாடித்தோட்டம்!

தினமும் இரண்டிலிருந்து மூன்று மணிநேரம் வரை என்னுடைய தோட்டத்தில் நேரம் செலவிடுறேன். தோட்டம் அமைச்சு ஒன்பது வருஷங்கள் ஆகுது. இத்தனை வருஷத்துல பெரிய அளவில் காய்கறிகளை நான் வெளியே வாங்குறதே இல்ல. என் தோட்டத்தில எல்லா வகையான காய்களும் இருந்தாலும், ஆறடி வரை வளரக்கூடிய புடலைச் செடி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்.

சிலர் தோட்டம் அமைப்பதை ஆர்வமா செய்வாங்க. ஆனா, பராமரிப்பில் கவனம் செலுத்த மாட்டாங்க. தோட்டம் அமைப்பதில் எவ்வளவு கவனமா இருக்கிறோமோ, அதே கவனம் தோட்டத்தைப் பராமரிப்பதிலும் இருக்கணும். செடிகளைக் குழந்தைகள் மாதிரி கவனமா பார்த்துக்கணும். உரம் போடுறது, சுத்தம் செய்யுறது, தண்ணீர் விடுறதுனு ஏராளமான வேலைகள் இருந்தாலும்கூட செடியில் பூக்கும் பூவைப் பார்க்கும்போது மனசு அவ்வளவு உற்சாகமாயிடும்" எனும் ஸ்ரீபிரியா இதை பிசினஸாகவும் செய்து வருகிறார்.

மாடித்தோட்டம்

ஆடிப்பட்டம் தொடங்கும் நேரம் நீங்களும் மாடித்தோட்டம் ஆரம்பிக்க விரும்புறீங்களா? உங்களுக்கு வழிகாட்ட மாடித்தோட்ட விவசாயி ஸ்ரீபிரியா கணேஷ் தயாராக இருக்கிறார். அவள் விகடன் மற்றும் பசுமை விகடன் சார்பில் `ஆடிப்பட்டம் விதைக்கலாம் வாங்க' என்ற வீட்டுத்தோட்ட வழிகாட்டல் பயிற்சி நாளை (ஜூலை 17, சனிக்கிழமை) மாலை 3 முதல் 4 மணி வரை நடைபெறவுள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ.300.

ஆடிப்பட்டத்தில் என்னென்ன விதைக்கலாம், மண் கலவைத் தயார் செய்யும் வழிமுறைகள், விதை நேர்த்தி செய்வது எப்படி, பூச்சிகளை விரட்ட செய்ய வேண்டியது என்ன, செடிகளுக்கான இயற்கை ஊட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பயிற்சி அளிக்கவிருக்கிறார்.

இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: https://bit.ly/3xfGlkf



source https://www.vikatan.com/lifestyle/women/aval-vikatan-conducts-online-terrace-garden-training-chance-to-learn-from-expert-woman

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக