Ad

திங்கள், 21 ஜூன், 2021

``கொரோனா மரணங்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது!” - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சொன்னது என்ன?

``கொரோனாவால் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் மாநில அரசுகளால் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க முடியாது. கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் நிலையில், எல்லோருக்கும் இழப்பீடு வழங்குவது சாத்தியமில்லாதது என்பதுடன் கொரோனாவால் இறப்பவர்களுக்கு நிவாரணம் வழங்கிவிட்டுப் பிற நோய்களில் இறப்பவர்களுக்கு இழப்பீடு வழங்காமல் மறுப்பது நியாயமற்றதாகிவிடும்” என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம்

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்குப் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் கீழ் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும், கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கான சீரான கொள்கையை வகுக்குமாறும் மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இரண்டு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோரின் முன்பு விசாரிக்கப்படு வந்தன.

இந்த மனுக்கள் மீதான முதற்கட்ட விசாரணையின்போது, ``இறப்புச் சான்றிதழ்கள் வழங்குவதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஒரே மாதிரியான கொள்கை ஏதும் வகுக்கப்பட்டுள்ளதா?” என்று மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஐஸ்வர்யா பாட்டிலிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ``முறையான ஆவணம் அல்லது இறப்புச் சான்றிதழை வழங்குவதற்கான ஒரே மாதிரியான கொள்கை இல்லையெனில், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எந்த இழப்பீட்டினையும் பெற முடியாமல் போய்விடும்.

கொரோனா மரணம்

Also Read: கோவிட் மூன்றாவது அலை... எப்போது வரும், எப்படி வரும்? பதில் சொல்கிறார் நிபுணர்...

எனவே, கொரோனாவால் இறப்பவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்கள் வழங்குவதற்கான சீரான கொள்கை குறித்தும் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி நிவாரணம் வழங்குவது குறித்தும் மத்திய அரசு உரிய பதிலளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டிருந்தனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு என்ன பதிலளிக்கப் போகிறது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் அனைவரின் குடும்பத்துக்கும் ரூ.4 லட்சம் இழப்பீடு கிடைக்குமா என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில்தான் , மத்திய அரசு 183 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் இரவு தாக்கல் செய்திருக்கிறது.

அந்த பதில் மனுவில், ``பேரிடர் மேலாண்மை சட்டத்தைப் பொறுத்தவரையில் பூகம்பம் அல்லது வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடரில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கே நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது குறிப்பிட்ட பகுதியில், குறிப்பிட்ட காலத்தில் நிகழும் இயற்கைப் பேரிடர்களுக்கே இதுவரை நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கொரோனா அப்படியானது கிடையாது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இருக்கிறது. கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்கதையாக இருக்கிறது.

நாடுமுழுவதும் இதுவரை 3.85 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கையானது அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே, உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோருவது பொருத்தமாக இருக்காது. அதுமட்டுமல்ல, பல்வேறு நோய்களால் உயிரிழப்பு ஏற்படும் நிலையில், இந்த நோயால் உயிரிழப்போருக்கு மட்டும் இழப்பீடு வழங்குவது நியாயமற்றதாகிவிடும்.

கொரோனா மரணம்

மேலும் தொடர் ஊரடங்கினால் வரி வருவாய் குறைந்துள்ளதுடன் மாநில அரசுகளின் சுகாதார செலவுகளும் பன்மடங்கு அதிகரித்துள்ளன. இந்தச் சூழலில், கொரோனாவால் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்குவது என்பது மாநில அரசுகளால் இயலாத காரியம். அதே சமயம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய மத்திய அரசு தயாராகவே இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, ``கொரோனா தொடர்பான கொள்கைகளை மத்திய அரசுதான் வகுக்கும். எனவே இதில் தலையிட முடியாது என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் கூறியிருந்ததை நினைவுபடுத்துகிறோம்” என்றும் அந்த பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தோருக்கு கொரோனா மரணம் என்று சான்றிதழ் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பாகப் பதிலளித்திருந்த மத்திய அரசு, ``கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் பெயரில் வழங்கப்படும் இறப்புச் சான்றிதழில், `கொரோனா மரணம்’ என்றே குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கப்படும். அவ்வாறு சான்றிதழில் குறிப்பிடாத மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தனது பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது . இந்த மனு மீதான விசாரணை இன்று நடக்கவிருக்கிறது.

Covid 19 Outbreak

Also Read: கல்லா கட்டும் தனியார் மருத்துவமனைகள்... கதறும் கொரோனா நோயாளிகளின் குடும்பத்தினர்...

கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று மத்தியப் பிரதேச அரசு ஏற்கெனவே அறிவித்தது. கொரோனா இரண்டாவது அலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/cant-pay-4-lakh-rupees-as-ex-gratia-to-covid-victims-centre-tells-supreme-court

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக