Ad

திங்கள், 21 ஜூன், 2021

காஷ்மீர் விவகாரம்: கண்டிக்கும் பாகிஸ்தான்! -எதிர்பார்பில் பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க, மத்தியில் ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த இடைப்பட்ட ஆட்சிக் காலத்தில் மோடி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளில் பண மதிப்பிழப்பும், ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதும் மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு, 2019-ல் ஜம்மு காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. முன்னதாக, அம்மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளால் காஷ்மீர் அரசியல் அதகளமானது. அரசின் செயலை கண்டித்து எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால் அனைவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

காஷ்மீர்

மத்திய அரசின் ஜம்மு - காஷ்மீர் நடவடிக்கை பாகிஸ்தானை மேலும் கொதிப்பாக்கியது. இந்நிலையில், காஷ்மீரில் இந்தாண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டசபைத் தேர்தலை நடத்த மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது. தேர்தல் தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் அவரது இல்லத்தில் வரும் 24-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு உயர்மட்ட கூட்டம் நடைபெறுகிறது. அதில் பங்கேற்குமாறு காஷ்மீரின் 8 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 14 தலைவர்களுக்கு மத்திய அரசு நேற்று அழைப்பு விடுத்தது.

இந்நிலையில், காஷ்மீரில் செய்யப்படும் எந்த ஒரு மாற்றத்தையும் பாகிஸ்தான் கடுமையாக எதிர்க்கும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகம்மது குரோஷி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காஷ்மீரில் மேற்கொண்டு எந்த ஒரு சட்டவிரோத நடவடிக்கைகளையும் எடுப்பதை இந்தியா தவிர்க்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகம்மது குரோஷி

முன்னதாக கடந்த வாரம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா.சபையின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய இந்திய நிரந்தர தூதரக ஆலோசகர் மதுசூதனன், "பாகிஸ்தான் ஐ.நா சபையில் ஒவ்வொரு முறையும் தேவையில்லாமல் காஷ்மீர் விவகாரத்தைக் கையிலேடுத்து கொண்டு பேசி நாடகமாடி வருகிறது" என்று சாடியிருந்தார்.

இந்நிலையில், பாகிஸ்தானின் அறிக்கை காஷ்மீரில் நடக்கவிருக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/ahead-of-central-governments-kashmir-meeting-pakistan-issues-warning

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக