இந்தியத் தலைநகர் டெல்லியில் இயங்கி வரும் மிகப்பெரிய மருத்துவமனைகளுள் (GIPMER) கோவிந்த் பல்லப் பந்த் இன்ஸ்டிடியூட் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமும் ஒன்றாகும். மாநில அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கி வரும் இந்த மருத்துவமனையில் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக, மலையாள மொழி பேசும் கேரள செவிலியர்கள் அதிகளவில் பணிபுரிந்து வருகின்றனர். அதன் காரணமாக, மருத்துவமனை வளாகத்தில் கேரள செவிலியர்கள் மலையாள மொழியில் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.இந்நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த உள் நோயாளி ஒருவர் மலையாள மொழி தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் ஒன்று அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. நோயாளியின் புகாரை மூலமாக வைத்து தற்போது மருத்துவமனை நிர்வாகம் சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. அதில், 'மருத்துவமனையில் பணிபுரியும் அனைவரும் அலுவல் மொழியாக ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளைத் தான் பயன்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாக மலையாள மொழியில் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் மருத்துவமனை நிர்வாகமும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மேலும், 'மருத்துவமனையில் செவிலியர்கள் மலையாள மொழி பேசுவதால் பிற நோயாளிகளுக்கு அது அசௌகரியத்தை ஏற்படுத்துவதாலும் , பெரும்பாலான நோயாளிகளுக்கும், சக ஊழியர்களுக்கும் இது குழப்பத்தை ஏற்படுத்துவதாலும் மலையாள மொழியினை தவிர்க்க வேண்டும்' என்று அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
மலையாள மொழி பேசும் செவிலியர்கள் அதிகளவில் பணிபுரியும் அரசு மருத்துவமனையில் மலையாள மொழிக்குத் தடை விதித்துள்ள நிர்வாகத்தின் செயலுக்குப் பலதரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ஜி.பி.பந்த் செவிலியர் சங்கத் தலைவர் லீலாதர் ராம்சந்தனி கூறுகையில், "மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் மலையாள மொழியினை பயன்படுத்துவது தொடர்பாக நோயாளி ஒருவர் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குப் புகார் அனுப்பியிருக்கிறார். அந்த புகாரைத் தொடர்ந்து தான் தற்போது மருத்துவமனை நிர்வாகம் இந்த அறிக்கையினை வெளியிட்டிருக்கிறது. அதே போல், மருத்துவமனையின் இந்த நிலைப்பாட்டிற்குத் தொழிற்சங்கம் உடன்படவில்லை. அதிலும் குறிப்பாக மலையாள மொழியைச் சுட்டிக்காட்டி இருப்பது அதிருப்தி அளிக்கிறது" என்றார். ஜி.பி.பந்த் செவிலியர் சங்கத்தைத் தொடர்ந்து, எய்ம்ஸ், LNJP உள்ளிட்ட பல்வேறு செவிலியர்கள் சங்கங்களும் (GIPMER) மருத்துவமனை நிர்வாகத்தின் சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாகச் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய (GIPMER) மருத்துவமனையின் கேரள செவிலியர் ஒருவர், "நோயாளி ஒருவர் அளித்த புகாரின் பேரில்தான் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது. மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் செவிலியர்களில் 60% பேர் மலையாளிகள் தான். அப்படியிருக்கும் போது நாங்கள் மலையாளத்தில் பேசிக்கொள்வதில் என்ன தவறு. நாங்கள் மலையாளம் தெரியாத நோயாளிகளிடமோ, மருத்துவமனை ஊழியர்களிடமோ மலையாளத்தில் பேசிடவில்லை. எங்களுக்குள்தான் பேசிக்கொள்கிறோம். மருத்துவமனையின் இந்த முடிவு முற்றிலும் தவறானது. மருத்துவமனையில் பஞ்சாபி மொழி பேசும் செவிலியர்களும், மணிப்பூர் செவிலியர்களும் தான் கணிசமான அளவில் வசிக்கின்றனர். அவர்கள் அனைவரும் அவரவர் சொந்த மொழிகளில் தான் பேசிக்கொள்கின்றனர். அப்படியிருக்கும் போது எங்களை மட்டும் குறிப்பிட்டுச் சொல்வது முறையல்ல" என்று வருத்தம் தெரிவித்தார்.
Malayalam is as Indian as any other Indian language.
— Rahul Gandhi (@RahulGandhi) June 6, 2021
Stop language discrimination! pic.twitter.com/SSBQiQyfFi
(GIPMER) மருத்துவமனையின் சுற்றறிக்கைக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மருத்துவமனையின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள கேரளாவின் வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "பிற மொழிகளைப் போன்றே மலையாளமும் இந்திய மொழி தான். மொழி பாகுபாட்டை நிறுத்துங்கள்..!!" என்று பதிவிட்டுள்ளார்.
அதே போல், திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜனநாயக இந்தியாவில் ஒரு அரசு நிறுவனம் அதன் செவிலியர்களை தங்களது தாய் மொழியில் பேசக்கூடாதென்று சொல்வது வருத்தமளிக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. மருத்துவமனையின் இந்த செயல் அடிப்படை மனித உரிமை மீறலாகும்" என கருத்து பதிவிட்டுள்ளார்.
மருத்துவமனையின் இந்த செயலுக்கு நாடு முழுவதும் உள்ள செவிலியர்கள், மருத்துவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் மொழி ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து தொடர்ந்து அழுத்தம் அளித்து வந்த நிலையில், தற்போது (GIPMER) மருத்துவமனை 'வளாகத்தில் மலையாள மொழி பேசுவதற்கு தடை விதித்து வெளியிட்டிருந்த சுற்றறிக்கையினை திரும்பப் பெற்றுள்ளது'.
source https://www.vikatan.com/news/india/dont-converse-in-malayalam-stick-to-hindi-english-delhi-govt-hospital-to-nursing-staff
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக