Ad

ஞாயிறு, 6 ஜூன், 2021

ஹெல்த் இன்ஷுரன்ஸ் இருந்தாலும் அவசர கால நிதி அவசியம்தான்... ஏன்? - ஆலோசகரின் அட்வைஸ்

பலரும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கும்போது ஏன் அவசரக் கால நிதியை சேர்த்து வைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அது தவறான கருத்தாகும். ஹெல்த் பாலிசி எடுத்திருக்கும் அதேநேரத்தில் அவசர கால நிதியை (எமெர்ஜென்சி ஃபண்ட்) வைத்திருப்பது அவசியமாகும்.

திடீர் விபத்து மற்றும் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவ செலவுக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி கைகொடுக்கும். அதேநேரத்தில், அதை நம்பி மட்டுமே 100 சதவிகிதம் இருந்துவிட முடியாது. காரணம், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் அனைத்து நோய் பாதிப்புகளுக்கும் அனைத்துச் செலவுகளுக்கும் இழப்பீடு கிடைக்கும் என்று சொல்ல முடியாது.

Hospitalization/ Representation Image

ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கு குறிப்பிட்ட ஆண்டுகளுக்குதான் க்ளெய்ம் செய்ய முடியும். அப்போது நோய் பாதிப்பு ஏற்பட்டால் கையிலிருந்துதான் செலவு செய்ய வேண்டி இருக்கும். அந்நேரத்தில் அவசர கால நிதி சேர்த்து வைத்திருந்தால் அது கைகொடுக்கும். நிலைமையை சுலபமாக சமாளிக்க முடியும்.

உதாரணத்துக்கு அண்மைக் காலத்தில் கோவிட் சார்ந்த சிகிச்சை செலவில், தமிழ்நாட்டில் சராசரியாக சுமார் 43 சதவிகித செலவு தொகைதான் க்ளெய்ம் கொடுக்கப்பட்டிருக்கிறது என ஜெனரல் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் (General Insurance Corporation) புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

அதாவது சராசரியாக ரூ.1.90,450 க்ளெய்ம் செய்யப்பட்ட நிலையில் ரூ.1,09,160 தான் க்ளெய்ம் ஆக கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, சராசரியக ரூ. 81,290 கையிலிருந்து போட்டிருக்கிறார்கள். இதுவே சிகிச்சை செலவு ரூ. 6 லட்சமாக இருக்கும்பட்சத்தில் கையிலிருந்து போட வேண்டிய தொகை ரூ.2.4 லட்சமாக இருந்திருக்கும். இப்போது புரிந்திருக்கும் ஏன் அவசர கால நிதி தேவை என்பது.

மேலும், பொதுவான ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் பற்களில் ஏற்படும் பாதிப்புகள், பிரசவச் செலவுகள் போன்றவற்றுக்கு கவரேஜ் கிடையாது.

Funds (Representational Image)

இதுபோன்ற செலவுகளை எமர்ஜென்சி ஃபண்ட் இருந்தால்தான் ஈடுகட்ட முடியும். இந்தத் தொகையைக் கடனாக வாங்குவது என்பது அதுவும் கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் தற்போதைய சூழலில் மிகவும் கடினம். எனவே, அனைவரும் அவசர கால நிதியை சேர்த்து வைத்திருப்பது மிக அவசியமாகும்.

எதிர்பாராமல் ஏற்படக்கூடிய செலவுகள் ஒருவரைக் கடன் சுமையில் சிக்கவைக்காமல் இருக்கவும், முதலீட்டைக் காலி செய்யாமல் இருக்கவும் அவசர கால செலவு நிதி மிகவும் அவசியம். மேலும், கொரானா போன்ற காலத்தில் சம்பளம் குறைக்கப்பட்டாலோ, வேலை இழப்பு ஏற்பட்டாலோ, குடும்பச் செலவுகள் பாதிக்காமல் இருக்கவும் இந்த அவசர கால நிதி அவசியம் அனைவருக்கும் தேவையானதாக இருக்கிறது.

மாத குடும்பச் செலவைப்போல, 3 முதல் 6 மடங்கு தொகையை அவசரச் செலவு நிதியாக வைத்திருக்க வேண்டும். முடியுமானல் 12 மாத செலவு தொகையை வைத்திருப்பது நல்லது.

குடும்பத்தில் வயதானவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்கள் இருந்தால் சற்றுக் கூடுதலாக இந்த எமர்ஜென்சி ஃபண்ட் வைத்திருப்பது நல்லது.
அவசர காலச் செலவுக்கான பணத்தை கணவன், மனைவி இணைந்து ஜாயின்ட் வங்கிக் கணக்கில் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் ஒருவருக்கு அசம்பாவிதம் ஏற்படும்போது மற்றவர் சிரமம் இல்லாமல் பணத்தை எடுத்துச் செலவு செய்ய முடியும்.

ஹசன் அலி, ஆலோசகர், Siptiger.com

இந்தத் தொகையை ஆர்.டி, எஸ்.ஐ.பி முறையில் கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்து சேர்த்து வரலாம். இந்தத் தொகையை எளிதில் எடுத்து பயன்படுத்தும் விதமாக ஏ.டி.எம் வசதியுள்ள வங்கி சேமிப்பு கணக்கு, மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் ரிஸ்க் இல்லாத லிக்விட் ஃபண்டில் வைத்திருக்கலாம்.

அவசர கால நிதியிலிருந்து, பணம் எடுத்துச் செலவு செய்தால், மீண்டும் அதில் சேர்த்துவிடுவது நல்லது. அப்போதுதான் மீண்டும் ஏதாவது பணப் பிரச்னை வந்தால் அதைச் சுலபமாகச் சமாளித்து கடன் இல்லா வாழ்க்கை வாழ முடியும்.

- ஹசன் அலி, ஆலோசகர், Siptiger.com



source https://www.vikatan.com/business/finance/why-emergency-fund-is-essential-even-though-if-you-have-health-insurance

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக