Ad

சனி, 23 ஜனவரி, 2021

`கிச்சன், ராஜ்ஜியம் அல்ல; சிறை!' - நம் குடும்பங்களுக்கு #TheGreatIndianKitchen சொல்வது என்ன?

மலையாள இயக்குநர் `ஜோ பேபி’ இயக்கி Neestream தளத்தில் வெளியாகியிருக்கும் The Great Indian Kitchen திரைப்படம், சமூக வலைதளங்களில் பரவலாக விவாதத்திற்குள்ளாகியிருக்கிறது. படத்திற்கு பெண்கள் தரப்பிலிருந்து தொடர் ஆதரவும் ஆண்கள் மீது குற்றச்சாட்டுகளும் குவிந்து வருகின்றன. குடும்பத்தோடு பார்ப்பதற்கேற்ற படமாக இருந்தாலும் படம் பார்க்கும்போது அம்மாவோ, மனைவியோ `இப்ப தெரியுதா என் அருமை' என்று கடைவாயில் இடிப்பதற்கான அபாயங்கள் இருப்பதால் ஆண்கள் இந்தப் படத்தைப் பார்க்க அஞ்சுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன!

#GreatIndianKitchen

அப்படியென்ன அபாயகரமான கதை? படத்தில் கதை என்று தனியாய் எதுவுமில்லை. க்ளைமாக்ஸ் தவிர்த்து எஞ்சிய படம் முழுவதும் நம் வீட்டிலும், அக்கம்பக்கத்து வீடுகளிலும் நடக்கும் காட்சிகள்தான். நிமிஷா சஜயனும், சூரஜ் வெஞ்சரமுடுவும் கணவன் மனைவியாக நடித்திருக்கும் இந்தப் படம், `பிக் பாஸ்’ பார்ப்பது போல, அவர்களின் அன்றாட வாழ்க்கையை தினமும் பார்ப்பது போன்றதோர் உணர்வைக் கொடுக்கிறது. மணமாகி புகுந்த வீட்டிற்கு வரும் நிமிஷா, காலையில் தூங்கி எழுகிறார். தேநீரில் தொடங்கி காலை மதியம் இரவு என நாள் முழுக்க மூன்று வேளையும் மாமியார் துணையோடு விதவிதமாய் சமைத்து கணவனுக்கும் மாமனாருக்கும் பரிமாறுகிறார். அவர்கள் உண்ட மிச்சங்களையும் சமைத்த பாத்திரங்களையும் கழுவுகிறார்.

இரவு உறங்கி, மறுநாள் காலை எழுந்து, தேநீரில் தொடங்கி காலை மதியம் இரவு என சமைக்கிறார். பாத்திரங்களை தூய்மை செய்கிறார். மறுநாள் காலை எழுந்து திரும்பவும் மூன்று வேளை சமைத்து, பாத்திரம் கழுவி இரவில் அடுக்களையைத் தூய்மை செய்கிறார். மறுநாளும் அதையே செய்கிறார். இதை திரும்பத் திரும்பப் படிக்கும் போதும், திரைப்படத்தில் இதே காட்சிகளை திரும்பத் திரும்பப் பார்க்கும் போதும் நமக்கு ஒரு சலிப்பு தட்டுகிறதில்லையா? அந்த சலிப்புதான் படத்தின் மையப்புள்ளி. திரும்பத் திரும்பப் பார்ப்பதற்கே அலுப்பாயிருக்கும் விஷயங்களை, நாள் கணக்கில் வருடக்கணக்கில் ஓயாமல் செய்து கொண்டேயிருக்கும் வீட்டுப் பெண்களுக்கு அது எவ்வளவு சலிப்பாய் இருக்கும்? ஒரு குடும்பத்தில் சமையலும் வீட்டு வேலைகளும் பெண்களுக்கு மட்டுமே உரியவையா என்று யோசிக்க வைப்பதுதான் இந்தப் படத்தின் நோக்கம்.

#GreatIndianKitchen

படத்தில் வில்லன்கள், சதிகாரர்கள் என்று எவருமில்லை. மருமகளைக் கொடுமைப்படுத்தும் மாமியாரோ, சிகரெட்டால் சூடு வைக்கும் கொடூர கணவனோ இல்லை. ஆனால் காட்சிக்கு காட்சி வன்முறை ஒளிந்திருக்கிறது. கதாநாயகன் அலுவலகம் செல்லும் முன்பாக மனைவியின் நெற்றியில் முத்தமிட்டுச் செல்லும் அன்பான கணவன்தான். ஒரு சாயலில், நம்முடையதே போல அழகான, அன்பான, பாரம்பர்யமும் பண்பாடும் கொண்ட, ஊருக்குள் மரியாதையான குடும்பம்தான் அது. ஆனால் உற்று கவனித்தால் மட்டுமே அந்த மரியாதை, குடும்பம் என்ற அமைப்பிற்கும் அதன் தலைவர்களான ஆண்களுக்கும் மட்டுமே உரியது, பெண்கள் அவ்வமைப்பின் அடிமட்ட உறுப்பினர்களாகவோ அல்லது அடிமைகளாகவோதான் இருக்கிறார்கள் என்ற உண்மை கண்களுக்குப் புலப்படுகிறது.

படத்தில் மாமனாராக உடல் வலுவற்ற மெலிந்த ஒரு முதியவர் இருக்கிறார். நாள் முழுக்க ஈஸிசேரில் அமர்ந்து பேப்பர் படிக்கிறார். போனில் வாட்ஸ்அப் பார்க்கிறார். இறைவழிபாடு செய்கிறார். மருமகளை வாய்நிறைய `மகளே’ என்றழைக்கிறார். எவருக்கும் மனதால் கூட எந்தத் தீங்கும் நினைக்காத நல்ல மனிதராகக் கூட இருக்கலாம். குடும்ப உயர்வுக்காக, மகனை படித்து ஆளாக்குவதற்காக ஓடி ஓடி உழைத்தவர் வயதான காலத்தில் இப்படி நிம்மதியாக வாழ்வது நியாயம்தானே? அவருக்கு வீட்டில் சின்னச் சின்ன எதிர்பார்ப்புகள்தான். மிக்ஸியில் சட்னி அரைத்தால் ருசிப்பதில்லை. அம்மிதான் ருசி! குக்கரில் சாதம் வைத்தால் பிடிக்காது. அதை மட்டும் விறகடுப்பில் பாத்திரத்தில் சமைக்க வேண்டும். அவருடைய துணிகளை மட்டுமாவது வாஷிங்மெஷினில் போடாமல் கையில் துவைக்க வேண்டும். நேற்று வைத்த குழம்பை ஃப்ரிட்ஜில் வைத்து இன்று சூடு பண்ணிக் கொடுக்கக் கூடாது. காலையில் பிரஷையும் டூத் பேஸ்டையும் யாராவது கொண்டு வந்து கையில் கொடுக்க வேண்டும். அவர் வெளியே கிளம்பும்போது, குரல் கொடுத்ததும் யாராவது செருப்பைக் கொண்டு வந்து காலருகே வைத்தால் போதும். அவரே போட்டுக் கொள்வார். வீட்டுப் பெண் வேலைக்குப் போவது அவருடைய கவுரவத்திற்கு அத்தனை பொருத்தமாக இல்லை. பெண்கள் குடும்பத்தை நன்றாக கவனித்து குழந்தைகளை சான்றோர்களாய் வளர்த்து ஆளாக்குவதே பிரதம மந்திரிகளின் பதவிக்கு நிகரானது என்பது அவர் கருத்து.

#GreatIndianKitchen

இவ்வளவுதானே? ஒரு குடும்பத் தலைவர் இதைக் கூட எதிர்பார்க்கக் கூடாதா? என்றால், ``கூடாது” என்பது தான் இப்படம் உரக்கக் கூறும் பதில்.

60 வயதில் தான் எடுத்துக் கொள்ளும் ஓய்வை, தன் மனைவி எத்தனை வயதில் எடுத்துக் கொள்ளலாம் என்ற சிந்தனை ஆண்களுக்கு வருவதே இல்லை. `என் வீடு என் உரிமை’ என்று குடித்த இடத்திலேயே காபி டம்ளரையும், மேசை மீது உணவுண்ட மிச்சங்களையும், கண்ட இடத்தில் அழுக்குத் துணிகளையும், படுக்கையின் மீது ஈரத்துண்டையும் போட்டு வைக்கும் ஆண்களுக்கு அந்த வீட்டின் தூய்மையிலும் ஒழுங்கிலும் தனக்கும் பங்கிருக்கிறது எனத் தோன்றுவதில்லை.

ஒரு குடும்பத்திற்குள் புதிதாய் நுழையும் பெண்ணிடம், ``இது எங்க வீடு. இங்க நீ இருக்கணும்னா நாங்க சொல்றபடிதான் இருக்கணும்” என்று சொல்வதற்கும், ``இது உன் வீடும்மா. இதோட நல்லதும் கெட்டதும் உன்னோட பொறுப்பு. இங்க எல்லாத்தையும் நீதான் பார்த்துக்கணும்” என்று சொல்வதற்கும் அடிப்படையில் பெரிய வேறுபாடு ஏதுமில்லை. சொல்லும் தொனிதான் மாறுகிறதே தவிர செய்யும் வேலை ஒன்றுதான்.

The Great Indian Kitchen மலையாளத்திற்குப் புதிதாக இருக்கலாம். தமிழில் எழுத்தாளர் அம்பை எழுதிய, ``வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” என்ற அபாரமான சிறுகதை இந்தியக் குடும்பங்களில் பெண்களின் உழைப்பு சுரண்டப்படுவதை பல வருடங்களுக்கு முன்னரே முன்மொழிந்திருக்கிறது.

``ஒளியற்ற, ஜன்னல் அற்ற குறுகிய அந்தச் சமையலறையிலிருந்து கடலில் வசிக்கும் ஆக்டபஸ் ஜந்துவின் எண்கால் போல், ஆதிக்கக் கரங்கள் நீண்டு வளைத்துப் போட்டன. கால்கள் இறுக்க இறுக்கக் கட்டுண்டு கிடந்தனர் ஆனந்தமாக. அவை இடுப்பை இறுக்கினால் ஒட்டியாணம் என்றும், காலைச் சுற்றினால் கொலுசு என்றும், தலையில் பட்டால் கிரீடம் என்றும் நினைத்துக் கொண்டனர் பெண்கள். நாலா புறமும் கம்பிகள் எழும்பிய உலகில் புகுந்து கொண்டு அதை ராஜ்யம் என்று நினைத்து அரசோச்சினர். இன்று மட்டன் புலவு, நாளை பூரி மசாலா என்று பூமியைத் திருப்பிப் போடும் முடிவுகள் எடுத்தனர்.”

#GreatIndianKitchen

என்று அந்தச் சிறுகதை காரசாரமாய் சாடியிருப்பதைத்தான் இங்கே 100 நிமிடங்களில் ஓடும் காட்சிகளாய் மாற்றியிருக்கிறார்கள்.

பலரும் நினைப்பது போல இது ஆணாதிக்கத்திற்கு எதிரான படம் மட்டுமல்ல, ஆணாதிக்கத்திற்குத் துணை நிற்கும் பெண்களுக்குமான படமாகவும் இருக்கிறது. பெண்கள் தங்களை கிச்சன் குயின்களாக முடிசூட்டிக் கொண்டு மகிழ்ந்து கொண்டிருக்கும் வரையில், ``அவருக்கு சகலத்துக்கும் நான் வேணும். தானா சுடு தண்ணி கூட வெச்சுக்கத் தெரியாது” என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் வரையில், குடும்பம் என்ற அமைப்பு அட்டைப்பூச்சி போல அவர்கள் மேல் ஒட்டிக் கொண்டு ரத்தத்தை உறிஞ்சுவதைத் தடுக்க முடியாது.

- காயத்ரி சித்தார்த்


source https://cinema.vikatan.com/women/an-analysis-on-the-great-indian-kitchen-movie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக