Ad

சனி, 23 ஜனவரி, 2021

புதுக்கோட்டை:`சித்ரவதை பண்ணி அடிச்சே கொன்னுருக்காங்க!’ - மீனவர்கள் இறப்பால் கலங்கும் உறவினர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த 18-ம் தேதி பிரான்சிஸ் கோவா என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மெசியா (30), மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்த சாம்சான்டர்வின் (28), வட்டன்வலசையைச் சேர்ந்த நாகராஜ் (52), திருப்புல்லாணியைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகிய 4 மீனவர்களும் மீன்பிடிக்கச் சென்றனர். எல்லை தாண்டியதாக இவர்களின் விசைப்படகைச் சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், தங்கள் கப்பலின் அருகில் நிறுத்தி வைத்துள்ளனர். கடல் சீற்றத்தால் அந்தப் படகின் பின்பகுதி இலங்கை கடற்படைக் கப்பலின் மீது மோதியதில், கப்பல் சேதமடைந்தது. இதனால், ஆத்திரமடைந்த கடற்படையினர் மீனவர்களைத் தாக்கியதுடன், மாற்றுக் கப்பலைக் கொண்டு மீன்பிடிப் படகைத் தாக்கி மூழ்கடித்தனர்.

மீன்பிடிப் படகுகள்

படகிலிருந்த மீனவர்களின் நிலை என்னவென்று தெரியாமல் போனதால், மாயமான மீனவர்களைத் தேடி கோட்டைப்பட்டினத்திலிருந்து 3 படகுகளில் 10-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சென்றனர். அவர்களை இந்திய எல்லையிலேயே இலங்கைக் கடற்படையினர் பல மணி நேரம் காத்திருக்க வைத்துள்ளனர். இங்கு 4 மீனவர்களும் பத்திரமாக இருப்பதாகவும், அவர்களை விரைவில் அனுப்பி வைப்பதாகவும் இலங்கைக் கடற்படையினர் கூறியதாகக் சொல்லப்படுகிறது. மீனவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் அவர்கள் கரை திரும்பினர். மீனவர்களில் இருவரது உடல்கள் இலங்கையில் 20ம் தேதி கரை ஒதுங்கியதாக அந்நாட்டு கடற்படையினர் தெரிவித்தனர்.

அடுத்த நாள் இரண்டு மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கியதாகவும் தெரிவித்தனர். இந்த தகவலால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதோடு, இறந்தவர்களின் புகைப்படங்களை வெளியிட்டனர். அதில், காயங்கள் இருப்பது போல காணப்பட்டதால், இலங்கைக் கடற்படையினர் தாக்குதலில் சிக்கி அவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும். எனவே, இலங்கை கடற்படையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே 23-ம் தேதி இறந்த 4 பேரின் உடல்களையும் இலங்கை கடற்படையினர், இந்திய எல்லையில் இந்தியக் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.

அஞ்சலி

இரண்டு விசைப்படகுகளில் கோட்டைப்பட்டினம் மீன்பிடித் தளத்துக்குக் இறந்தவர்களின் உடல்கள் கொண்டு வரப்பட்டன. அங்கு சக மீனவர்கள், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி ஆகியோர் மீனவர்கள் உடல்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, மீனவர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இறந்து போன சாம்சான்டர்வின், நாகராஜ், செந்தில்குமார் ஆகியோரின் உடல்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் ஆகியோர் மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Also Read: இலங்கைக் கடற்படையால் 4 மீனவர்கள் உயிரிழப்பு; இரு உடல்கள் மீட்பு! - கொதிக்கும் ராமேஸ்வரம் மீனவர்கள்

தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மெசியா உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல சக மீனவர்கள் மற்றும் உறவினர்கள் ஆயிரக்கணக்கானோர் தங்கச்சிமடம், ராமேஸ்வரம் சாலை அருகே திரண்டிருந்தனர். உடல் நேரடியாக அடக்கம் செய்யப்படும் இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதால், ஊர்வலம் எடுத்துச் செல்ல அனுமதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுப் போராட்ட இடத்துக்கு உடல் கொண்டுவரப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதனால், ராமேஸ்வரம் சாலையில் சுமார் 2மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்

இதுபற்றி செந்தில்குமாரின் சகோதரர் முருகேசன் கூறும் போது, ``நாங்க தேடிப் போகும்போது, அங்க உள்ள நேவிக்காரங்க, உங்க ஆளுங்க பத்திரமா இருக்காங்க. நீங்க கரை திரும்பி போங்கன்னு சொன்னாங்க. கொஞ்ச நேரத்துல பத்திரமா ஒப்படைச்சிடுவோம்னு சொன்னாங்க. ஆனா, இப்போ பிரேதமா கொடுத்திருக்காங்க. இறந்தவங்க முகம் முழுசும் காயமாகத் தான் இருக்கு. இலங்கை கடற்படை கண்டிப்பா சித்ரவதை பண்ணி அடிச்சே கொன்னுருக்காங்க. மத்திய, மாநில அரசு கண்டிப்பாகத் தக்க நடவடிக்கை எடுக்கணும்" என்கிறார் கண்ணீர் மல்க.



source https://www.vikatan.com/news/death/governments-should-take-serious-action-in-fishermen-death-issue-urges-relatives

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக