Ad

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

Morning Motivation : நான் இதை எதிர்பார்த்தேன்... ஆனால்?! எல்லோரும் இன்புறிருக்க!

2020 ஜூன்... நாம் லாக்டெளன் வாழ்க்கைக்கு கொஞ்சம் கொஞ்சமாக நம்மை ஆட்கொள்ள ஆரம்பித்த நேரம்.

ஆன்லைன் வகுப்புகளுக்குக் குழந்தைகள் முதல் ஆசிரியர்கள் வரை யாருமே பழகியிராத தொடக்க கால கட்டம். ஆன் லைனில் வகுப்புகள் நடக்கத் தொடங்கிய இரண்டாம் வாரத்தில் அன்றைய வகுப்பு முடியும் தருவாயில் குழந்தையொன்று வருத்தம் தேய்ந்த குரலில் "மிஸ்... இன்னிக்கு எனக்குப் பிறந்த நாள். ஆனா யாருமே எனக்கு விஷ் பண்ணலை" என்றதாம்.

''வகுப்பை எப்படி நடத்தலாம், இருக்கிற நேரத்திற்குள் எப்படி பாடங்களை முடிக்கலாம், மறுநாள் நடத்த வேண்டிய பாடங்களுக்கான மெனக்கெடல் எனப் பல விஷயங்களை எப்படிச் செய்யலாம் என்பது பற்றி யோசித்த நானும் என் போன்ற பிற ஆசிரிய ஆசிரியைகளும், பள்ளி நிர்வாகமும் , படிப்பைத் தவிர்த்து குழந்தைகளின் எண்ண ஓட்டத்தைப் பற்றிய, அவர்களின் உலகில் எதுவெல்லாம் பிரதானமோ அது குறித்த விஷயங்களைப் பற்றி யோசிக்கத் தவறியதை அக்குழந்தை யோசிக்க வைத்ததது'' எனத் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்க்கும் தோழி ஒருத்தி சொன்னாள்.

அன்று முதல் ஒவ்வொரு வகுப்பு தொடங்கும் முன்பும் அன்று எந்தெந்த குழந்தைகளுக்குப் பிறந்த நாளோ அவர்களுக்கு வாழ்த்துகள் சொல்லி முடித்த பின்பே வகுப்பைத் தொடங்க வேண்டும் என பள்ளி நிர்வாகமே முடிவு செய்ததாகவும் சொன்னவள், அந்தக் குழந்தை அன்று அதைப் பற்றிப் பேசியிராத பட்சத்தில் அப்போது எங்களுக்கு இருந்த நெருக்கடியில் இது பற்றி எல்லாம் நாங்கள் யோசித்திருப்போமா என்றே தெரியாது என்றாள்.

தந்தைக்கே மந்திரம் ஓதிய தமிழ்க் கடவுள் முருகனைப் பற்றி பெருமை பட்டுக் கொள்ளும் பலரும் நம் குழந்தைகளிடமிருந்து கற்கிறோமா, கற்கத் தயாராகயிருக்கிறோமா என்றால் நேர்மையான பதில் இல்லை என்பதுதான்.

திறமை #Motivation

"நான் இதை எதிர்பார்த்தேன்... ஆனா கிடைக்கலை" எனச் சொல்லும் உரிமை குழந்தைகளுக்கானது மாத்திரமல்ல. யோசித்துப் பார்த்தால் நம்முள் பலரும் நம் மனதிற்குள்ளேயே இது போன்ற விஷயங்களைப் பற்றிப் பேசி விவாதிப்போமேயல்லாது "நான் இதை எதிர்பார்த்தேன் ஆனால் நடக்கலை" என நமது தனிப்பட்ட ஏமாற்றங்களைக் குறித்து நமக்கு மிக நெருங்கியவர்களுடன் கூடப் பேச மாட்டோம்.

காரணம் ? "என் மனதில் உள்ளவற்றைப் பற்றி நான் வெளிப்படையாகப் பேசினால் இச்சமூகம் என்னைப் பற்றி என்ன நினைக்கும், என்னைத் தராசில் ஏற்றி பல அளவீடுகளுக்கு உட்படுத்துமோ?" போன்ற பல கேள்விகள். இன்னும் சிலரோ... மனதில் தோன்றியதைப் பேசுகிறேன் என்ற நினைப்பில் வெறுப்பையும், கோபத்தையும் சக மனிதர்களின் மீது வீசி எறிகிறார்கள்.

தங்களுக்கானத் தேவை என்னவென்பதையும் , தங்களின் எதிர்பார்ப்பு என்னவென்பதையும் எடுத்துச் சொல்லும் தெளிவை நாம் குழந்தைகளிடமிருந்தும் கற்க வேண்டிய அதே நேரத்தில் நம் எண்ணங்களைச் சரியான முறையில் எதிராளிக்குக் கொண்டு சேர்ப்பதன் அவசியத்தையும் உணர வேண்டும்.

நீங்கள் சொல்லுங்கள்... உங்களின் அல்லது உங்களுக்கு அருகாமையிலிருக்கும் குழந்தையிடமிருந்து சமீபத்தில் நீங்கள் எதை எப்போது கற்றுக் கொண்டீர்கள்?



source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/morning-motivation-are-we-learning-from-kids

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக