Ad

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

விடுதலையாகும் சசிகலா: அ.தி.மு.க-வை உடைப்பாரா, கஸ்டடிக்குக் கொண்டுவருவாரா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அ.தி.மு.க-வுக்கு வலிமையான தலைமை இல்லாத நிலை நீடித்தது. ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக்கப்பட்டார். பின்னர், அ.தி.மு.க-வில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடைபெற்றன. ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகி, ‘தர்ம யுத்தம்’ தொடங்கினார். முதல்வர் நாற்காலியில் சசிகலாவால் எடப்பாடி பழனிசாமி அமர்த்தப்பட்டார்.

எடப்பாடி பழனிசாமி

சசிகலாவின் அக்காள் மகன் டி.டி.வி.தினகரன் அ.ம.மு.க என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். இரு துருவங்களாக இருந்த ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் கைகுலுக்கி ஒன்று சேர்ந்தனர். கட்சித் தலைமை ஓ.பன்னீர்செல்வம், ஆட்சித் தலைமை எடப்பாடி பழனிசாமி என்ற ஒப்பந்தத்துடன் செயல்பட ஆரம்பித்தனர். இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி ஆறு மாதங்களில் முடிவுக்கு வரும், ஒரு மாதத்தில் முடிவுக்கு வரும் என்றெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆரூடம் கூறிவந்தார். ஆனால், கட்சியில் தன் செல்வாக்கை வலுப்படுத்திக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார்.

`பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலையாகவிருக்கிறார்’ என்ற பரபரப்புத் தொடங்கியதிலிருந்து, அ.தி.மு.க உடையப்போகிறது என்ற கருத்தை தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்வைத்துவருகிறார். தற்போது, ‘எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலம் முடிவதற்கு நான்கு மாத காலம் காத்திருக்க வேண்டியதில்லை. சசிகலா வெளியே வந்தால் இந்த ஆட்சி இருக்கிறதா, இல்லையா என்பது தெரிந்துவிடும்’ என்று ஸ்டாலின் சொல்கிறார்.

ஸ்டாலின்

அ.தி.மு.க-வில் சசிகலாவைச் சேர்த்துக்கொள்ள வாய்ப்பே இல்லை என்று கூறிவரும் எடப்பாடி பழனிசாமி, சசிகலா வெளியே வந்தாலும் தொடரப்போவது தன்னுடைய ஆட்சிதான் என்று சொல்கிறார். ஆனாலும், சசிகலாவுக்கு ஆதரவான கருத்துகளை அ.தி.மு.க-வின் சில நிர்வாகிகளும் அமைச்சர்களும் தொடர்ந்து முன்வைத்துவருகிறார்கள். அ.தி.மு.க-வில் சசிகலா சேர்த்துக்கொள்ளப்படுவரா என்ற கேள்விக்கு, `ஜெயலலிதா இருந்தபோது அனைவரும் ஒன்றாகத்தான் இருந்தோம்’ என்று பதிலளித்திருக்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ. `ஒரு தாய் ஸ்தானத்திலிருந்து அ.தி.மு.க-வை சசிகலா பலப்படுத்துவார்’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருக்கிறார். எனவே, சசிகலா விடுதலையாகிவந்தால், அ.தி.மு.க-வில் என்ன நடக்கும் என்பது பெரும் கேள்விக்குறியாக எழுந்திருக்கிறது.

`அ.தி.மு.க உடையும் என்று எதன் அடிப்படையில் ஸ்டாலின் கூறுகிறார்?’ என்ற கேள்வியை தி.மு.க சட்டமன்ற உறுப்பினரான கோவி செழியன் முன்பாக வைத்தோம்.

``அ.தி.மு.க-வில் நிலவுகிற அதிருப்தி மற்றும் குழப்பமான சூழலை கருத்தில்கொண்டுதான், அந்தக் கட்சி உடையப்போகிறது என்கிற கருத்தை தி.மு.க தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் வெளிப்படுத்தினார். எடப்பாடி பழனிசாமி தன் தனிப்பட்ட செல்வாக்கின் அடிப்படையில் முதல்வர் பதவிக்கு வந்தவர் அல்ல. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக நியமிக்கப்பட்டு, அவர்மீது கட்சித் தலைமைக்கு நம்பிக்கை இல்லாத சூழலில், முதல்வர் பதவியிலிருந்து அவர் வலுக்கட்டாயமாக கீழே இறக்கப்பட்டார். அதன் பிறகு, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக நியமிக்க வேண்டிய சூழல் சசிகலாவுக்கு ஏற்பட்டது. சசிகலாவால் நியமிக்கப்பட்டவர் என்பதால், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி இன்றைக்கு அமைச்சர்களாகவும், சட்டமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கும் பெரும்பாலானோர் சசிகலாவால் பதவிகளைப் பெற்றவர்கள்.

கோவி செழியன்

ஆகையால்தான், செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, கோகுல இந்திரா உட்பட பலரும் சசிகலாவைப் புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கிறாக்ள். `தாயைப் போன்றவர், தகுதியானவர்’ என்று அ.தி.மு.க-வின் முன்னாள் எம்.பி-யான கோகுல இந்திரா, சசிகலாவைப் புகழ்கிறார். இத்தகைய பேச்சுகளை அமைச்சர் ஜெயக்குமார் கண்டிக்கிறார். இப்படியொரு குழப்பமான சூழல் அ.தி.மு.க-வில் நிலவுகிறது. இதற்கிடையில், அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளரைக் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க ஏற்காத நிலை இருக்கிறது. இது இன்னொரு குழப்பம்.

இத்தகைய சூழலில்தான், சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்தால், ஆதரவுநிலையில் இருப்பவர்கள் அவருடன் போய்விடுவார்கள் என்ற கருத்து நிலவுகிறது. அதன் அடிப்படையில்தான், எங்கள் தலைவர் அந்தக் கருத்தை வெளிப்படுத்துகிறார். பதிலுக்கு எதையாவது சொல்ல வேண்டுமே என்பதற்காக, மு.க.அழகிரியால் தி.மு.க உடையப்போகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.

அழகிரி

களநிலவரம் தெரியாமல் இப்படி அவர் பேசுகிறார். தி.மு.க-விலிருந்து அழகிரி நீக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. தி.மு.க-வில் ஒரு கிளைக்கழகச் செயலாளரின் ஆதரவுகூட அவருக்குக் கிடையாது. அப்படிப்பட்ட ஒருவரால் தி.மு.க சிதறுண்டு போகும் என்று சொல்வதெல்லாம் நகைச்சுவைதானே ஒழிய வேறொன்றுமில்லை. தன் மீது மலைபோல் குவிந்திருக்கும் குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக, எந்த அடிப்படையும் இல்லாத ஒரு குற்றச்சாட்டை முதல்வர் கூறுகிறார்” என்றார் கோவி செழியன்.

Also Read: 'இந்து' அரசியலைக் கையிலெடுக்கும் தி.மு.க... சாதிக்குமா, சறுக்குமா?#TNElection2021

இது குறித்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தனியரசுவிடம் பேசினோம். ``பல நெருக்கடிகளைக் கடந்து வலிமையான தலைமையாக எடப்பாடி பழனிசாமி தற்போது இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியா, ஓ.பன்னீர்செல்வமா என்ற கேள்விகள் மற்றும் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பில் எழுந்த சிக்கல் போன்ற பல பிரச்னைகளைக் கடந்து கட்சியின் செயற்குழுவை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

இந்தச் சூழலில்தான், சிறையிலிருந்து சசிகலா விடுதலையாகிறார். அவர் வந்த பிறகு ஏதாவது தடுமாற்றம் வரலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அந்த எண்ணத்தில்தான் தி.மு.க தலைவர் ஸ்டாலினும், அ.தி.மு.க உடையும் என்ற கருத்தைச் சொல்லியிருக்கலாம்.

தனியரசு

ஆனால், அ.தி.மு.க உடைவதற்கு வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன். காரணம், அ.தி.மு.க-வுக்கு மிகப்பெரிய பங்களிப்பை சசிகலா அளித்திருக்கிறார். கட்சிக்கும் ஆட்சிக்கும் வலுசேர்ப்பாரே தவிர, அவரால் எந்தவித பாதிப்பும் கட்சிக்கும் ஆட்சிக்கு வராது என்று நம்புகிறேன். அவரது பேச்சும் செயலும் அ.தி.மு.க-வுக்கு வலுவூட்டுவதாக இருக்கும். எனவேதான், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் சசிகலா ஆதரவுக் கருத்துகளை வெளிப்படுத்திவருகிறார்கள். செல்லூர் ராஜூவோ, ராஜேந்திர பாலாஜியோ, கோகுல இந்திராவோ வெறும் சம்பிரதாயத்துக்காக அப்படிப் பேசவில்லை. அ.தி.மு.க-வில் நெடுங்காலம் சசிகலா ஆற்றியுள்ள பங்கு எத்தகையது என்பதை உணர்ந்து, நன்றியுணர்வுடனும் விசுவாசத்துடனும் அப்படி அவர்கள் பேசுகிறார்கள். அது தவறானதும் அல்ல” என்றார் தனியரசு.

கட்சியை உடைப்பாரா அல்லது ஒட்டுமொத்த கட்சியும் அவரது கஸ்டடிக்கு வந்துவிடுமா என்ற விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும்போது, சிறையிலிருக்கும் சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தன. மருத்துவமனையிலிருந்து சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு வெளியே வந்த சசிகலா, தொண்டர்களைப் பார்த்து உற்சாகப் புன்னகையுடன் கையசைத்தார். பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. தற்போது அவரின் உடல்நிலையில் சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/after-sasikala-release-what-will-happen-in-admk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக