Ad

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

காட்டு நரியும் கிராமத்து கழுதையும் - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்?! #BedTimeStories - 5

ஒரு கிராமத்துல துணி துவைக்கிற பிசினஸ் செய்யுற அங்கிள் ஒருத்தர் வாழ்ந்துட்டு வந்தார். அவர்கிட்ட கழுதை ஒண்ணு இருந்துச்சு, காலையில அழுக்குத் துணியையெல்லாம் ஆத்துக்கு சுமந்துட்டு போறது, அப்புறம் வயிறு நிறைய புல்லு சாப்பிட்டுட்டு மரத்தடி நிழல்ல தூங்குறது, சாயங்காலம் துவைச்ச துணியை சுமந்துக்கிட்டு வீட்டுக்கு வர்றதுன்னு இருந்துச்சு அந்தக் கழுதை. கழுதையோட ஓனர் அதை நல்லா பார்த்துக்கிட்டாலும், அதுக்கு அடிமனசுல ஒரு குறை இருந்துட்டே இருந்துச்சாம். வீடு, ஆத்தங்கரை ரெண்டுத்தையும் தாண்டி வேற எங்கயுமே போக முடியலையே... அட்லீஸ்ட் பக்கத்துல இருக்கும் காட்டுக்காவது ஒருநாள் போயிட்டு வந்துடணும்னு மனசுக்குள்ள பிளான் பண்ணிக்கிச்சு கழுதை. ஒருநாள் கழுதையை வளர்த்துட்டு வந்த அங்கிளுக்கு உடம்பு சரியில்லாம போச்சு. அன்னிக்கு அவர் துணி துவைக்கப் போகல. இதுதான் சாக்குன்னு கழுதை நைசா வீட்டை விட்டு வெளியே வந்து காட்டுக்குள்ள போயிடுச்சு.

BedTimeStories

எங்க பார்த்தாலும் பச்சைப்பசேல்னு புல்லு, விதவிதமான கீரை, கலர் கலரா பூக்கள், வாசனையான பழ மரங்கள்னு சூப்பரா இருந்துச்சாம் காடு. கண்ணுல பட்டதையெல்லாம் ஆசை ஆசையா சாப்பிட்டுச்சு கழுதை. வயிறு முட்ட சாப்பிட்டதும் தண்ணி தாகம் எடுக்க ஆரம்பிச்சது கழுதைக்கு. அப்படியே தண்ணியைத் தேடிட்டு நடக்க ஆரம்பிச்சது. ஒரு இடத்துல ஓடையைப் பார்க்கவும் செஞ்சுச்சு. ஓடிப்போய் நீரோடையில வாய் வைக்கிற நேரத்துல உறுமல் சத்தம். பயந்துபோய் கழுதை நிமிர்ந்து பார்த்தா கொஞ்ச தூரத்துல புலி ஒண்ணு நின்னுகிட்டு இருந்துச்சாம். அவ்வளவுதான் கழுதை எடுத்துதாம் ஓர் ஓட்டம். காட்டுக்கு வெளியே வந்ததும்தான் ஓட்டத்தை நிறுத்துச்சாம் கழுதை.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிட்டு நின்னுகிட்டிருந்த கழுதைக்கு ரொம்ப பக்கத்துல இருந்து ஒரு குரல். `ஏன் கழுதையாரே காட்டுக்குள்ள இருந்து இப்படி பயந்துட்டு ஓடி வர்றீங்க’ கழுதை திடுக்கிட்டுப் போய் திரும்ப நரி ஒண்ணு சிரிச்சுக்கிட்டு இருந்துச்சாம். அதை ஏன் கேட்கிறீங்க நரியாரே, காட்டைப் பார்க்க ஆசைப்பட்டு வந்தா புலி இருக்குது. அதான், ஓடி வந்துட்டேன்னு சொல்லுச்சு கழுதை. புலி வயிறு முட்ட சாப்பிட்டுட்டுதான் தண்ணி குடிக்க வந்திருக்கும். நீங்க தேவையில்லாம பயந்துட்டீங்க கழுதையாரேன்னு சொல்லிட்டு சிரிச்சுதாம் நரி. நான் கிராமத்துல வாழ்ந்ததால எனக்குக் காட்டைப்பத்தி ஒண்ணும் தெரியல. கிராமத்தைப் பத்தி கேட்டுப் பாருங்க. எல்லா விஷயமும் சொல்லுவேன்னு கொஞ்சம் கோபமா பதில் கொடுத்துச்சு கழுதை.

BedTimeStories

அதுக்கு நரி, மன்னிச்சுக்கோங்க கழுதையாரே, கிராமத்துல இருக்கிற உங்களுக்குக் காட்டைப் பார்க்கணும்னு ஆசை. காட்டுல வாழ்ந்துட்டிருக்கிற எனக்கு கிராமத்தைப் பார்க்கணும்னு ஆசை. என்னை உங்க கிராமத்துக்கு கூட்டிட்டுப் போறீங்களான்னு கேட்டுச்சு. கழுதை `ஓ தாராளமா கூட்டிட்டுப் போறேன்னு தலையாட்ட, ரெண்டும் கிராமத்துக்குள்ள நுழைஞ்சதுங்களாம்.

கிராமத்தோட என்ட்ரன்ஸ்ல யாரோ ஒரு விவசாயி வெள்ளரிக் கொடி பயிர் வெச்சிருந்தாராம். நரிக்கு நாக்குல எச்சிலூற ஆரம்பிச்சிடுச்சு. கழுதையாரே நீங்க முன்னாடி போயிட்டே இருங்க. நான் சுசு போயிட்டு வந்துர்றேன்னு நரி சொல்ல, கழுதையும் அதை நம்பி முன்னால நடக்க ஆரம்பிச்சது. நரி நைசா வெள்ளரிக் காட்டுக்குள்ள இறங்குச்சு. கையில கிடைச்ச வெள்ளரிக்காயையெல்லாம் பறிச்சு சாப்பிட்டுட்டு, ரெண்டு வெள்ளரிக்காயை கைக்கு ஒண்ணா எடுத்துக்கிட்டு வெளியே வந்துச்சு. அந்த நேரம் பார்த்து அந்தப் பக்கம் வந்த ஒருத்தர் `அய்யோ நரி நரி... வெள்ளரிக்காயைத் தூக்கிட்டுப் போகுது’ன்னு கத்த, கிராமத்துல இருக்கிற அத்தனை பேரும் கம்பு, கத்தியையெல்லாம் தூக்கிட்டு நரியை அடிக்க வந்துட்டாங்களாம்.

BedTimeStories

என் ஒருத்தனை அடிக்க இத்தனை பேரான்னு பயந்துபோன நரி, பறிச்ச வெள்ளரிக்காயையெல்லாம் தூர வீசிட்டு ஓட ஆரம்பிச்சதாம். கொஞ்ச தூரத்துல இருந்து இதையெல்லாம் பார்த்துக்கிட்டிருந்த கழுதை, நரியை ஒரு மரத்துக்குப் பின்னாடி மறைச்சு ஜனங்ககிட்ட இருந்து காப்பாத்துச்சாம். ஜனங்க எல்லாம் போன பிறகு, நண்பா நரி நான் கிராமத்துல வாழ்ந்தவன். இங்க எப்படி வாழணும்னு எனக்குத் தெரியும். நீ காட்டுல வாழ்ந்தவன். அங்க எப்படி வாழணும்னு உனக்குத்தான் தெரியும். நாம ரெண்டு பேரும் அவங்கவங்க இடத்துல இருந்தாதான் சேஃப்னு சொல்லிட்டு தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிச்சுதாம். நரியும் தன்னோட காட்டை நோக்கி நடக்க ஆரம்பிச்சுதாம்.

- நாளை சந்திக்கலாம்

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினந்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

Also Read: `சிட்டுக்குருவி கட்டிய செங்கல் வீடு!' - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 3



source https://www.vikatan.com/literature/kids/fox-and-donkeys-wish-vikatan-bedtime-stories-5

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக