Ad

சனி, 23 ஜனவரி, 2021

தள்ளுபடி முதல் ஆர்.சி அப்டேட் வரை... வாகனக்கடனில் எவற்றையெல்லாம் கவனிக்கணும்? #LoanVenumaSir - 14

கடந்த அத்தியாயத்தின் முடிவில், எந்தக் கடனை ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றிக்கொள்ளலாம் என நான் கேட்ட கேள்விக்குப் பலரும் ஆர்வத்துடன் பதில் சொல்லி யிருக்கிறீர்கள். உங்களில் பலரும் வீட்டுக்கடன் என்று சொல்லியிருக்கிறீர்கள். சரியான விடைதான். ஆனால், அடமானக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடனையும் ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு மாற்றிக்கொள்ள முடியும் என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம். பதில் சொன்ன அனைவருக்கும் என் பாராட்டுகள். சரி, இனி வாகனக் கடன் பற்றிக் கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.

Car loan (Representational Image)

வாகனக் கடன் என்பது...

வாகனக் கடன் என்பது

- இருசக்கர வாகனக் கடன்,

- சரக்கு வாகனக் கடன் மற்றும்

- கார் கடன் எனப் பிரிக்கலாம்.

சரக்கு வாகனக் கடன் என்பதை

- இலகுரக சரக்கு வாகனக் கடன்,

- கனரக சரக்கு வாகனக் கடன்,

- பேருந்து வாகன கடன் எனப் பல வகையாகப் பிரிக்கலாம். அதேபோல், அடிப்படை அம்சங்கள் உள்ள காரிலிருந்து நவீன மற்றும் மிக நவீன வசதிகள் உள்ள கார் வாங்குவதற்கும் கடன் வழங்கப்படுகிறது.

வாகனம் வாங்க முடிவெடுத்த பின் அந்த வாகனத்துக்கான டீலரை அணுகி அந்த வாகனத்தின் விலை என்ன என்று கேட்பதில் இருந்து வாகனக் கடன் பரிவர்த்தனை ஆரம்பிக்கிறது. உங்களின் வருமானம் மற்றும் வாகனத்தின் மொத்த விலை (Loan to Value- LTV) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கடன் தொகை நிர்ணயம் செய்யப்படுகிறது. வாகனத்தின் மறுவிற்பனை விலை அதிகமாக இருக்கும்பட்சத்தில், வாகனத்தின் தற்போதைய மொத்த விலையில் கடன் தொகையின் அளவு அதிகமாக நிர்ணயிக்கப்படுகிறது.

இவ்வாறு வாகனங்கள் வாங்கும்போது அல்லது வாகனங்களுக்கான வங்கிக் கடன் வாங்கும்போது, அந்த வாகனங்களுக்கான மொத்த விலையில் தள்ளுபடி, டீலர்கள் தரப்பிலிருந்து எவ்வளவு கொடுக்கப்படுகிறது என்பதை நன்றாக விசாரித்துத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப வங்கிகளை அணுகி கடன் பெற முயற்சி செய்யலாம்.

முன்கூட்டியே செலுத்தினால்...

இத்தகைய வாகனக் கடன் என்பது பொதுவாக 12 மாதங்களில் இருந்து 7 வருடம் வரை கொடுக்கப்படுகிறது. வாகனக் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்துக்கு முன்பாகவே கட்டி முடிக்கவும் செய்யலாம். அவ்வாறு செய்யும்பட்சத்தில் ஏற்கெனவே கூறியுள்ள நுகர்வோர் வாகனக் கடன், தனிநபர் கடன் மற்றும் அடமானக் கடனைப் போலவே, இந்த வாகனக் கடனுக்கும் முன்கூட்டி கடன் செலுத்தும் கட்டணம் (Foreclosure Charges) செலுத்த வேண்டியிருக்கும். ஒரு சில வங்கிகள் வீட்டுக் கடன் மற்றும் அடமானக் கடனைப் போலவே, வாகனக் கடனுக்கும் பகுதி பகுதியாகக் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த சலுகைகள் வழங்குகின்றன.

இவ்வாறு வாகனக் கடன் வாங்கும்போது அத்தகைய வாகனங்களைத் தங்களின் தொழில் நிமித்தமாகப் பயன்படுத்தினால், அந்த வாகனக் கடன்களின் வட்டி செலவினத்தைத் தங்களின் தொழில் செலவீனமாகத் தங்களின் கணக்குகளில் காட்டிக் கொள்ளலாம். இதைத் தங்கள் ஆடிட்டரிடம் கலந்தாலோசித்துவிட்டு செய்வது நல்லது.

கடன்

இளைஞர்கள் விரும்பும் கடன்

இந்த வாகனக் கடன்களில் கார் கடன் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில், இன்றைய இளைஞர்களில் பலர் வேலைக்குச் சென்றவுடன் முதலில் வாங்க நினைப்பது காரைத்தான். பிறகுதான் வீடு வாங்குவதற்குத் திட்டமிடுகிறார்கள். அவ்வாறு கடன் வாங்கி கார் வாங்க திட்டமிடும்போது, கடனுக்கான மாதத் தவணையை மட்டும் கணக்கில் கொள்ளாமல், அந்த காருக்கு ஏற்படும் மாதாந்தரப் பராமரிப்புச் செலவுகள் மற்றும் எரிபொருள் செலவுகள் ஆகியவற்றையும் கணக்கில்கொண்டே கார் வாங்கும் முடிவையும் காருக்காகக் கடன் வாங்கும் முடிவையும் எடுக்க வேண்டும். சில நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களுக்காக லீஸிங் (Leasing) கடன் முறையில் கார் வாங்கும் வசதியை ஏற்படுத்தித் தருகின்றன. அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதே போல், இன்றைய இளைஞர்களின் கனவு என்பது விலை உயர்ந்த நவீன இரு சக்கர வாகனம் வாங்குவது என்பதாகும். இந்த இரு சக்கர வாகனத்துக்கு கார் மற்றும் இதர வாகனங்களுக்கு சொன்னதைப் போலவே தங்களின் வருமானம் மற்றும் வாகனத்தின் மொத்த விலை (Loan to Value- LTV) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கடன் தொகை நிர்ணயம் செய்யப்படுகிறது. வாகனத்தின் மறுவிற்பனை விலை அதிகமாக இருக்கும்பட்சத்தில், வாகனத்தின் தற்போதைய மொத்த விலையில் கடன் தொகையின் அளவு அதிகமாக நிர்ணயிக்கப்படுகிறது. இதிலும் டீலர்கள் தரப்பில் இருந்து ஒவ்வொரு வாகனத்துக்கும் எவ்வளவு தள்ளுபடி தரப்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டு செயல்படுவது நல்லது.

Auto Finance

Also Read: நகைக்கடனுக்கு நீங்கள் கட்டும் வட்டி சரியா? ஓர் அலசல் #LoanVenumaSir - 13

ஆர்.சி அவசியம் பாஸ்!

இவ்வாறு வாகனக் கடன்கள் வாங்கும்போது தங்கள் வாகனத்தின் ஆர்.சி (RC) புத்தகத்தில் இந்த வாகனத்துக்காக எந்த வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனத்திடமிருந்து கடன் வாங்கி இருக்கிறீர்களோ, அந்த நிறுவனத்தின் பெயர் ஆர்.சி புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும். நீங்கள் வாங்கிய வாகனக் கடன் முடிவடைந்துவிட்டால், அந்த வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனத்தின் பெயரை அவர்கள் கொடுக்கும் ஆவணங்களை வைத்து மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்துக்குச் சென்று ஆர்.சி புத்தகத்திலிருந்து நீக்கிவிடலாம். இதைக் கண்டிப்பாகக் கடனை முடித்த உடனேயே செய்துவிட வேண்டும். இல்லை என்றால் நீங்கள் வாகனத்தை விற்கும்போது சிக்கல்கள் ஏற்படலாம்.

அதேபோல் உங்களிடம் உள்ள வாகனத்தை மறுவிற்பனை செய்தால், உடனடியாக மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்துக்குச் சென்று ஆர்.சி புத்தகத்தில் மாற்றம் செய்துவிட வேண்டும். அப்படிச் செய்யாமல் விடும் நிலையில் அது எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

- வாங்குவோம்


source https://www.vikatan.com/business/banking/things-which-are-you-should-know-about-vehicle-loan-loan-venuma-sir-series-14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக