Ad

சனி, 23 ஜனவரி, 2021

`சிறை சுற்றுலா!’ - மகாராஷ்டிரா அரசின் புதிய திட்டம்

மகாராஷ்டிராவில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ஏராளமான சிறைகள் உள்ளன. இச்சிறைகளை மக்கள் கண்டுகளிக்க வேண்டும் என்பதற்காக சிறை சுற்றுலா திட்டத்தை அம்மாநில அரசு தொடங்க இருக்கிறது. ஜனவரி 26-ம் தேதி சிறை சுற்றுலாத் திட்டம் தொடங்கப்படுகிறது. அன்றைய தினம் முதல்வர் உத்தவ் தாக்கரேயும், துணை முதல்வர் அஜித்பவாரும் சேர்ந்து புனே எரவாடா சிறை சுற்றுலாவைத் தொடங்கி வைக்கின்றனர்.

சஞ்சய் தத்

இரண்டாவது கட்டமாக நாக்பூர், நாசிக், தானே போன்ற சிறைகளும் பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து விடப்பட இருக்கின்றன. புனே எரவாடா சிறையை மாணவர்கள் பார்க்க 5 ரூபாயும், கல்லூரி மாணவர்களுக்கு 10 ரூபாயும், பொதுமக்களுக்கு 50 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

Also Read: மும்பை: சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை! - மருத்துவர், 7 பெண்கள் உட்பட 9 பேர் கைது

மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் இதுகுறித்து அறிவித்தார். எரவாடா சிறை மொத்தம் 500 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து விடப்படுவதன் மூலம் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிறை குறித்து தெரிந்து கொள்ள முடியும். எரவாடா சிறை மகாராஷ்டிரா மட்டுமல்லாது தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறையாகும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த சிறையில் மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் வல்லபாய் பட்டேல், ஜவஹர்லால் நேரு, மோதிலால் நேரு, சரோஜினி நாயுடு, பாலகங்கார திலகர், வீர்சாவர்கர் உட்பட பலர் அடைக்கப்பட்டு இருந்தனர். அதோடு அவதூறு வழக்கில் ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறும் அன்னா ஹசாரேயும் 1998-ம் ஆண்டு இச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

எரவாடா சிறை

மும்பை தொடர் குண்டு வெடிப்பில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத்தும் இதே சிறையில்தான், தனது தண்டனைக் காலத்தைக் கழித்தார். இது தவிர மும்பை தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் விசாரணைக்குப் பிறகு இந்த சிறையில் தான் அடைக்கப்பட்டு, இங்குதான் தூக்கிலிடப்பட்டு சிறை வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 1871-ம் ஆண்டு கட்டப்பட்ட இச்சிறை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.



source https://www.vikatan.com/news/india/maharashtra-government-to-begin-prison-tourism-scheme

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக